அட்லாண்டிக்கில் மூழ்கும் மர்மம்..! டைட்டானிக் முதல் டைட்டன் வரை

04 Jul, 2023 | 05:22 PM
image

டைட்டானிக்  எனும் உல்லாசப்பயணிகள் கப்பல் வட அயர்லாந்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டது. 1912 இல் கடல் தொட்ட இதன் முதற் பயணம் உலகின் கவனத்தை ஈர்த்தது.அன்றைய நாளில் உலகின் மிகப் பெரிய நீராவிக் கப்பல் என்ற பெருமையையும் 2240 பயணிகளையும் ஒன்றாக சுமந்து அட்லாண்டிக்  சமுத்திரத்தில் ஒரு வரலாற்றுக் கதையையும் சேர்த்தே பயணிக்கின்றோம் என்று தெரியாமல் டைட்டானிக்கின் பயணம் ஆரம்பித்தது. 

அலைகளை ஊடறுத்து கப்பல் பிரதானி "எட்வேர்ட் ஸ்மித்தின்" தலைமையில் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நோக்கி புறப்பட்டது. ஆங்கிலக்கால்வாயைத் தாண்டியதும் பிரான்சின் சேர்பூர்க்கில் நிறுத்தப்பட்டு கூடுதல் பயணிகள் ஏற்றப்பட்டனர். அடுத்த நாள் அயர்லாந்தில் உள்ள குவின்ஸ்டவுன் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டது. டைட்டானிக் மூன்று வகுப்புகளை கொண்டிருந்தது. முதல் வகுப்பில் கோடீஸ்வரர்களும் உலகப் புகழ்பெற்றவர்களும் இருந்தார்கள். மூன்றாம் வகுப்பில் அமெரிக்காவில் குடியேறுவதற்காக சென்றவர்களே அதிகமாக இருந்தார்கள்.

ஏப்ரல் 14 ஆம் திகதி கடல் மிகவும் அமைதியாக இருந்தது. வெப்பநிலை குறைந்து உச்ச குளிர் நிலையை கடல் எட்டிக் கொண்டிருந்தது. நடக்கப் போகும் பேரவலம் தெரியாமல் எல்லாம் அமைதியாகவே இருந்தது. புயலுக்கு முன்னரான அமைதியைப் போல, சீறப் போகும் எரிமலைகள் பசுமையாய் காட்சியளிப்பதைப் போல் அன்றைய கடல் பல ரகசியங்களைச் சுமந்து ஒரு சோக வரலாற்றை எழுத தயாராக இருந்தது. டைட்டானிக் கப்பல் வரும் பாதையில் பனிப்பாறைகள் இருப்பதாக "அமெரிக்கா" எனும் கப்பலில் இருந்து தகவல் அனுப்பப்பட்டது. 

துரதிர்ஷ்டவசமாக இத்தகவல் டைட்டானிக்கை சென்றடையவில்லை. அன்றைய இரவு  பனிப்பாறைகள் தங்களின் விதி எழுதக் காத்திருக்கிறது என்று தெரியாமல் இறுதி நொடி உல்லாசத்தில் மொத்தக் கப்பலும் குதூகலித்தது , அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியம் ஏராளம் என்ற வரிகளுக்கிணங்க கப்பலின் இறுதி அத்தியாயம் பனிப்பாறைகளால் எழுதப்பட்டது. நீரில் எழுதப்பட்டாலும் அழியா வரலாறாகிப் போனது.

 இரவு 11:40 மணியளவில் பெரும் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது. மோதி கிட்டத்தட்ட இரண்டரை மணித்தியாலங்களின் பின்னர் முற்றாக மூழ்கியது. அக்காலத்தில் மிக மேம்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டு கட்டப்பட்ட டைட்டானிக் கப்பல் மூழ்கியது மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். எழுநூற்று சொச்சமானோரே உயிருடன் மீண்டார்கள். இறந்தோரில் பலர் பனிப்பாறைகள் நிறைந்த கடலின் குளிரினாலேயே உறைந்து மாண்டனர்.  

 

டைட்டானிக் கப்பலின் சேதமடைந்த பகுதிகளை 1985 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் ஆய்வாளர் குழு கண்டு பிடித்தது. கப்பலின் சிதிலமடைந்த பகுதிகள் அட்லாண்டிக் பெருங்கடலில்  கடல் மட்டத்தில் இருந்து 12000 அடி ஆழத்தில் இருக்கிறது.  சூரிய ஒளி ஊடுருவ முடியாததால் இப்பகுதி (midnight zone) என அழைக்கப்படுகிறது. நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள விளக்குகளின் வெளிச்சம் ஒரு சில மீட்டர்கள் வரை மட்டுமே செல்லும். அதனால் வழிதவறிப் போவது மிக எளிது.

டைட்டானிக் கப்பல் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நீரில் மூழ்கி கிடக்கிறது. டைட்டானிக் கப்பல் தற்போது இயற்கையை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறது. வலுவான கடல் நீரோட்டம், உப்பு அரிப்பு மற்றும் உலோகத்தை அழிக்கும் பாக்டீரியாக்கள் ஆகியவை இந்தக் கப்பலை சிதைத்து வருகின்றன.

டைட்டானிக்கை தேடிய ஆய்வுப் பயணத்தின் வரலாறு என்பது சுவாரசியமானது.

1985 - டைட்டானிக் உள்ள இடத்தை அமெரிக்க - பிரெஞ்சு  குழுவினர் கண்டறிந்தனர்.

1986 - கப்பலின் உடைந்த பாகங்களை ஆல்வின் நீர்மூழ்கிக் கப்பல் ஆய்வு செய்தது.

1987 - முதலாவது மீட்பு பயணத்தில் டைட்டானிக்கின் 1800 கலைப் பொருட்கள் சேகரிக்கப் பட்டன.  

 

1995 - உடைந்த கப்பலுக்கு ஜேம்ஸ் கேமரூன் பயணம் மேற்கொண்டார், அப்போது எடுத்த காட்சிகள் அவருடைய டைட்டானிக் திரைப்படத்தில் பயன்படுத்தப் பட்டன.

1998 - முதலாவது சுற்றுலாவாசிகள் அங்கு மூழ்கி பயணம் செய்தனர்.

1998 - டைட்டானிக் கப்பல் கூட்டின் ஒரு பகுதி மேலே கொண்டு வரப்பட்டது.

 

2005 - இரண்டு வீரர்களைக் கொண்ட நீர்மூழ்கிகள் உடைந்த கப்பலுக்குச் சென்றன.

2010 - தானியங்கி ரோபோக்கள் அந்த இடத்தை ஆய்வு செய்து வரைபடம் தயாரித்தன.

2012 - உடைந்த கப்பல் இப்போது யுனெஸ்கோவால் பாதுாகப் பட்டுள்ளது. 

2019 - டி.எஸ்.வி. லிமிட்டிங் பேக்டர் நீர்மூழ்கி ஐந்து முறை நீர்மூழ்கிப் பயணம் மேற்கொண்டது.

சோதனையில் முடிந்த சாதனைப் பயணம், டைட்டன் நீர்மூழ்கியும் கனவாய் கலைந்த ஐந்து செல்வந்தர் உயிரும்.! உலகம் திரும்பிப் பார்த்த பயணம்```

கடந்த ஜூன் 18 ஆம் திகதியன்று டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக சென்ற டைட்டன் என்ற நீர்மூழ்கி வெடித்து சிதறியதில், அதில் பயணித்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்துள்ளது. 

டைட்டானிக் கப்பலைப் பார்வையிட நீர்மூழ்கிக் கப்பல் மூலம் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் ஓஷன் கேட் (ocean gate expediations) நிறுவனர் ஸ்டோக்டன் ருஷ், பிரிட்டிஷ் கோடீஸ்வர ஆய்வாளர் ஹமிஷ் ஹார்டிங், புகழ்பெற்ற பிரெஞ்சு நீச்சல்காரர் பால் ஹென்றி நர்ஜோலெட், பாகிஸ்தானிய தொழிலதிபர் ஷாஜதா தாவூத், அவரின் 19 வயது மகன் சுலைமான் தாவூத் ஆகியோரை அழைத்துக்கொண்டு, டைட்டானிக் கப்பலைக் காண கடலுக்குள் சென்றார். 

கப்பல் புறப்பட்ட சில மணி நேரங்களில் அது இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கிறது.  கனடா பாதுகாப்புப்படை, அமெரிக்க பாதுகாப்பு படை மற்றும் சில ஆழ்கடல் ஆராய்ச்சி நிறுவனங்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டன. அமெரிக்கக் கடலோரப்படை, டைட்டானிக் தளத்தைச் சுற்றியுள்ள பகுதியில் டைட்டனின் ஐந்து பெரிய துண்டுகளை கண்டுபிடித்ததாகக் கூறியிருக்கிறது. இது நீர்மூழ்கியின் அழுத்த அறை வெடித்திருப்பதைக் காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்விபத்து எப்படி நிகழ்ந்திருக்கும் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு இதுவரை கிடைத்திருக்கும் பாகங்களைக் கொண்டு ஆய்வு செய்யப்படும் என்று மீட்புக் குழு நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.  

 

டைட்டானிக் கப்பலை பார்வையிட அட்லாண்டிக் பெருங்கடலுக்கு இந்த நீர்மூழ்கிக் கப்பலில் பைலட் உள்பட மொத்தமே 5 பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஒரு நபருக்கான கட்டணம் இரண்டரை லட்சம் டாலர் என சொல்லப்படுகிறது.  

மனித வரலாறு தோன்றிய காலம் தொட்டே சாகசப் பயணங்களை தேடி ஓடும் மனிதர்களுக்கு பஞ்சமில்லை. ஒவ்வொருவரின் வசதி வாய்ப்புகளைப் பொறுத்து அவரவர் சாகச விளையாட்டுகளும் தேடல்களும் அமையும். சரித்திரத் தடயமான அட்லாண்டிக் கடலில் ஆழத்தில் உள்ள டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்க்க சென்ற சுற்றுலா நீர்மூழ்கி கப்பல், கடலில் மாயமான சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எது எவ்வாறாயினும் ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் சாகசப் பயணங்களும் தேடல்களும் ஓயப் போவதில்லை என்பதே உண்மையாகும்.

-சுவர்ணலதா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எம்முடைய குடும்பமும் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியாகவும்...

2023-09-20 16:41:22
news-image

சிவநெறி முறையில் வெளிநாட்டு ஜோடி திருமணம்

2023-09-14 21:12:17
news-image

நல்லூர் ஆலய மாம்பழ திருவிழாவில் 'குட்டி...

2023-09-11 17:26:24
news-image

குழந்தைகளுக்கு சந்திரயான், லூனா, விக்ரம், பிரக்யான்...

2023-08-28 15:31:00
news-image

பூக்களின் குணங்கள்

2023-08-15 13:02:20
news-image

இலங்கையில் முதன் முறையாக குஞ்சு பொரித்த...

2023-07-26 17:08:50
news-image

தோனிக்கும், தமிழ்மக்களுக்கும் மொழி ஒரு தடை...

2023-07-26 11:37:38
news-image

பிரியாணி சாப்பிடுவதில் சென்னைக்கு எந்த இடம்?...

2023-07-05 16:35:15
news-image

அட்லாண்டிக்கில் மூழ்கும் மர்மம்..! டைட்டானிக் முதல்...

2023-07-04 17:22:00
news-image

ஈ ஸ்கூட்டர் விற்பனை என இணையத்தில்...

2023-07-03 13:15:38
news-image

சீட்டிழுப்பில் பெருந்தொகை பணப்பரிசு : உயிருக்குப்...

2023-07-01 12:05:18
news-image

ஹை ஹீல்ஸுடன் 100 மீற்றர் ஓடுவதில்...

2023-06-29 16:42:14