(நெவில் அன்தனி)
ஸிம்பாப்வேக்கு எதிராக புலாவாயோ குவீன்ஸ் பார்க் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் சுப்பர் 6 சுற்றில் 9 விக்கெட்களால் இலகுவான வெற்றியை ஈட்டிய இலங்கை, இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.
இதன் மூலம் 13ஆவது தொடர்ச்சியான தடவையாக உலகக் கிண்ணப் போட்டியில் முன்னாள் உலக சம்பியன் இலங்கை விளையாடவுள்ளது.
மஹீஷ் தீக்ஷனவின் 4 விக்கெட் குவியல், டில்ஷான் மதுஷன்கவின் 3 விக்கெட் குவியல், பெத்தும் நிஸ்ஸன்கவின் ஆட்டம் இழக்காத அபார சதம் என்பன இலங்கைக்கு உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற உதவின.
ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 166 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 33.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பெத்தம் நிஸ்ஸன்க 102 பந்துகளில் 14 பவுண்டறிகளுடன் ஆட்டம் இழக்காமல் 101 ஒட்டங்களைக் குவித்து அணியின் வெற்றியை இலகுவாக்கினார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவர் குவித்த 2ஆவது சதமாகும்.
முதல் விக்கெட்டில் திமுத் கருணாரட்னவுடன் 103 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் குசல் மெண்டிஸுடன் 66 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க பகிர்ந்தார்.
திமுத் கருணாரட்ன 30 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 32.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
துஷ்மன்த சமீரவுக்குப் பதிலாக அணியில் இணைக்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷன்க, எதிரணியின் முதல் 3 விக்கெட்களைக் கைப்பற்றி இலங்கையின் வெற்றிக்கான அத்திபாரத்தை இட்டுக்கொடுத்தார்.
ஜோய்லோர்ட் கம்பீ (0), அணித் தலைவர் க்ரெய்க் ஏர்வின் (14), வெஸ்லி மெதேவியர் (1) ஆகிய மூவரையும் டில்ஷான் மதுஷன்க ஆட்டம் இழக்கச் செய்ய, ஸிம்பாப்வே 7ஆவது ஓவரில் 30 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இந் நிலையில் ஸிம்பாப்வேயின் துடுப்பாட்ட நட்சத்திரங்களான சோன் வில்லிம்ஸ், சிக்கந்தர் ராஸா ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மீட்டெடுக்க முயற்சித்தனர்.
ஆனால், அந்த இணைப்பாட்டத்திற்கு அணித் தலைவர் தசுன் ஷானக்க முடிவு கட்டியதும் மஹீஷ் தீக்ஷன கடைசி 6 விக்கெட்களில் நான்கை கைப்பற்றி ஸிம்பாப்வேயை 165 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினார்.
திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சோன் வில்லியம்ஸ் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 56 ஓட்டங்களையும் சிக்கந்தர் ராஸா 31 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் ரெயான் பியூரி (160, ப்றட் ஈவான்ஸ் (14), லூக் ஜோங்வே (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 8.2 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றி தனது அதிசிறந்த ஒருநாள் பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார்.
டில்ஷான் மதுஷன்கவும் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தி தனது அதிசிறந்த ஒருநாள் பந்துவீச்சுப் பெறுதியைப் பெற்றார். மதீஷ பத்திரண 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஆனால் அவர் 8 வைட்களைக் கொடுத்ததுடன் அதனைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது அவசியமாகும்.
ஆட்டநாயகன்: மஹீஷ் தீக்ஷன
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM