கோட்டாவைத் துரத்தும் பழைய கணக்கு

Published By: Vishnu

02 Jul, 2023 | 06:01 PM
image

(சுபத்ரா)

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இப்போது புதிதாக ஒரு சிக்கல் உருவாகியிருக்கிறது. இது பழைய கணக்குத் தான், என்றாலும், புதிதாக திறக்கப்பட்டு, அவருக்கு எதிராக திரும்புகின்ற நிலை உருவாகியிருக்கிறது.

ஜே.வி.பி. கிளர்ச்சியை ஒடுக்கும் நடவடிக்கையின் போது, மாத்தளை மாவட்டத்தில் இராணுவக் கட்டளை அதிகாரியாகவும் இராணுவ இணைப்பதிகாரியாகவும் இருந்தவர் லெப்.கேணல் கோட்டாபய ராஜபக்ஷ.

கஜபா ரெஜிமென்ட்டின் முதலாவது பற்றாலியனின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட அவர், மாத்தளை மாவட்ட இராணுவ இணைப்பதிகாரியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

1980களில், மாவட்டங்களின் நிர்வாகங்களை முன்னெடுப்பதற்கு இராணுவ இணைப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் வடக்கு- கிழக்கிற்குத் தான் இராணுவ இணைப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளை விட அதிகாரம் படைத்தவர்களாக விளங்கினர்.

எல்லாவற்றுக்கும் இராணுவ இணைப்பதிகாரியின் அனுமதி தேவை. அவரது கையெழுத்து இருந்தால் தான் மாவட்டத்துக்குள் எந்த தேவையையும் நிறைவேற்ற முடியும்.

அவசரகாலச்சட்டமும், பயங்கரவாத தடைச்சட்டமும் அதற்கான அதிகாரங்களை இராணுவ இணைப்பதிகாரிகளுக்கு வழங்குவதற்கு காரணமாக இருந்தன.

மாத்தளை மாவட்ட இராணுவ இணைப்பதிகாரியாக, 1989 மே மாதம் முதலாம் திகதி, கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட போது, ஜே.வி.பி. கிளர்ச்சி உச்சக்கட்டத்தை எட்டியிருந்தது.

1987இல், இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதை அடுத்து, ஜே.வி.பி.யின் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சி ஆரம்பமாகியது.

படிப்படியாகத் தீவிரமடைந்த அந்த ஆயுதக் கிளர்ச்சியை ஒடுக்குவதில் பொலிசும், இராணுவமும் முக்கிய பங்காற்றியிருந்தன.

கோட்டாபய ராஜபக்ஷ, ஒப்பரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கையில், கஜபா ரெஜிமென்ட்டின் ஒரு பற்றாலியன் கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டிருந்தார்.

அதன் பின்னர், அவர், பிரிகேடியர் விஜய விமலரட்ணவின் கீழ் கஜபா ரெஜிமென்ட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தான் மாத்தளை மாவட்ட இராணுவ இணைப்பதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அவரை அந்தப் பதவிக்கு நியமிப்பதற்கு அரசியல் மட்டத்தில் எதிர்ப்புக் காணப்பட்டது.

காரணம் மஹிந்த ராஜபக்ஷ அப்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துக் கொண்டிருந்தார்.

ஐதேக அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்த்த மஹிந்த ராஜபக்ஷ, ஜே.வி.பி.யை ஒடுக்கும் நடவடிக்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதற்காக அவர் பின்னர் ஜெனிவாவுக்கும் சென்றிருந்தார்.

அதனால், கோட்டாவை மாத்தளை மாவட்ட இணைப்பதிகாரியாக நியமிக்க வேண்டாம் என அப்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக விளங்கிய ரஞ்சன் விஜேரட்ணவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

ஆனால் பிரிகேடியர் விஜய விமலரட்ணவின் பலமான சிபாரிசு இருந்தமையால், ரஞ்சன் விஜேரட்ண அந்த நியமனத்தை வழங்கினார்.

1989 மே தொடக்கம் 1990 ஜனவரி வரையான காலப்பகுதியில் மாத்திரம் அவர் இந்தப் பதவியை வகித்திருந்தார்.

அவர் அங்கு பணியாற்றிய காலகட்டத்தில் ஏராளமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகச் செய்யப்பட்டனர் என்றும் குற்றச்சாட்டுகள் இருந்தன.

அந்தக் குற்றச்சாட்டுகளில் சிக்கிய எந்தவொரு இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் மீதும்- அப்போது விசாரணை நடத்தப்படவோ, நடவடிக்கை எடுக்கப்படவோ இல்லை.

கோட்டாபய ராஜபக்ஷவும் அவ்வாறே தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு தண்டனை விலக்கு கலாசாரம் உதவியது.

1991இல் அவர் இராணுவத்தை விட்டு விலகி அமரிக்காவுக்கும் சென்று விட்டார். 2005இல் மீண்டும் இலங்கைக்கு வந்து, பாதுகாப்புச் செயலாளராகப் பொறுப்பேற்றிருந்தார் கோட்டா.

அவர் அந்தப் பதவியில் இருந்த காலகட்டத்தில் தான், 2012 ஆம் ஆண்டு, நொவம்பர் மாதம் மாத்தளையில் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

150 வரையான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில், அவை 1940இல் மண்சரிவில் உயிரிழந்தவர்களுடையதாகவோ, அம்மை நோயினால் மரணமானவர்களுடையதாகவோ இருக்கலாம் என்று அரசாங்கம் திசை திருப்ப முற்பட்டது.

ஆனால், அகழ்வுப் பணியை முன்னெடுத்த தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவ, அந்த மனித எலும்புக்கூடுகள் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்டவர்களுடையது என்றும், அவர்கள், 1986இற்கும் 1990இற்கும் இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் பி.பி.சி. செவ்வி ஒன்றில் கூறியிருந்தார்.

அரசாங்கம் இந்த புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளான காலகட்டத்தில்- 2013இல், பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்திருந்தார் என இப்போது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் பொலிஸ் நிலையங்களில் இருக்கும், ஐந்து வருடங்களுக்கு முந்திய கோப்புகள் அனைத்தையும், அழித்து விடுமாறு 2013இல் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டார் என்றும் அது குறிப்பிட்ட காலத்தில் இடம்பெற்ற காணாமல்போன, கொலை செய்யப்பட்டவர்களின் தரவுகளை அழிக்கும் சதி என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் அபிவிருத்தி நிலையம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம், இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு ஆகியன இணைந்து, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.

அந்த அறிக்கையில் இலங்கை முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புதைகுழிகள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் 20 புதைகுழிகள் மட்டும் தோண்டப்பட்டு, நூற்றுக்கணக்கானவர்களின் எலும்புகள் மீட்கப்பட்ட போதும் எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவோ, குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படவோ இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜே.வி.பி. கிளர்ச்சியின் போதும், வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற போரின் போதும், ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை கூட தெரியாதளவுக்கு பலவந்தமாக காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

காணாமல் போனோருக்கான பணியகம் உருவாக்கப்பட்டு பதிவுகள் திரட்டப்பட்ட போது, 38 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர். ஆயினும், 21ஆயிரம் பேர் தொடர்பான கோப்புகள் மட்டும் தான் திறக்கப்பட்டுள்ளன என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னான்டோ கூறியிருக்கிறார்.

1989 மே மாதம் தொடக்கம், 1991 ஜனவரி மாதம் வரையான காலகட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான, விசாரணைகளை முன்னெடுத்த நான்கு ஆணைக்குழுக்கள், மாத்தளை மாவட்டத்தில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட 1041 பேர் தொடர்பான பதிவுகளை இனங்கண்டுள்ளன.

அவற்றில், 700இற்கும் அதிகமான காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், இடம்பெற்ற காலப்பகுதி, 1989 மே மாதத்துக்கும், 1990 ஜனவரி மாதத்துக்கும் இடையில் இடம்பெற்றிருக்கின்றன.

700 பேர் காணாமல் ஆக்கப்பட்ட அந்த 9 மாத காலப்பகுதியிலும், கோட்டாபய ராஜபக்ஷவே இராணுவ இணைப்பதிகாரியாக பணியாற்றியிருந்தார்.

நான்கு விசாரணை ஆணைக்குழுக்கள், மாத்தளை மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய, 21 குற்றவாளிகளின் பட்டியலை தயாரித்திருந்தன. 

ஆனால் அவர்களின் விபரங்கள் அரசாங்க இரகசியமாக பேணப்படுகிறது. 2030ஆம் ஆண்டு வரை அந்த விபரங்கள இரகசியமாக பாதுகாக்கப்படும்.

அந்த 21 பேருக்குள் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இருக்கிறதா என்பது தெரியாது போனாலும், குறித்த காலத்தில் மாத்தளை மாவட்டத்துக்குப் பொறுப்பான இணைப்பதிகாரியாக இருந்தவர் என்பதாலும், குறிப்பிட்ட கால பொலிஸ் ஆவணங்களை அழித்து விடுமாறு உத்தரவிட்டிருந்தார் என்பதாலும்- அவர் மீது சந்தேகங்கள் வந்திருப்பதில் ஆச்சரியமில்லை.

இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற ஏராளமாக மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களில் கோட்டாபய ராஜபக்ஷவும் ஒருவர். அதனால் தான் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கனடா பயணத் தடையை விதித்திருக்கிறது. 

ஆனாலும், அவரை பொறுப்புக்கூற வைக்கும் எந்த முயற்சிகளும் இதுவரையில் உள்நாட்டிலோ சர்வதேச அளவிலோ முன்னெடுக்கப்படவில்லை.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமைக்காக, கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள மக்களால் ஹீரோவாக கொண்டாடப்பட்டவர். தமிழர்களை கொன்றால் அது வீரம் என்று கொண்டாடப்படும் சிங்கள சமூகத்தில், கோட்டா வீரனாக கொண்டாடப்படுவது ஆச்சரியமில்லை.

சிங்கள இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் இருந்தும் அவரைக் கொண்டாடியது தான் சிங்கள இனத்தின் துரதிஷ்டம். இப்போது கோட்டா பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்பு. அவர் அமெரிக்காவுக்கும் செல்ல முடியாது. இலங்கையிலும் அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

அவர் அண்மையில் புதிய வீட்டுக்கு இடம்மாறிய போது, இரைச்சலால் அவரது அமைதி கெடுவதாக காரணம் சொல்லப்பட்டது.   அமைதியற்ற நிலை அவரைத் துரத்தத் தொடங்கியுள்ளது. நிம்மதி தேடி கம்போடியா, மியான்மாருக்கு விகாரைகளைத் தேடிச் செல்லும் நிலை தோன்றியிருக்கிறது.

இவ்வாறான நிலையில் அவருக்கு மாத்தளை புதைகுழித் தலைவலியும் சேர்ந்து கொண்டிருக்கிறது.

இது அவரது எஞ்சிய காலம் நிம்மதியானதாக இருக்கப் போவதில்லை என்பதற்கான அறிகுறியாகவே தென்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்கால சந்ததியினர் மத்தியில் அச்சுறுத்தலாக மாறும்...

2025-01-19 16:20:27
news-image

கிறிப்டோ கரன்சி என்றால் என்ன? இலங்கையில்...

2025-01-19 16:10:32
news-image

பனிப்பாறைகளின் இறையாண்மை

2025-01-19 15:56:51
news-image

சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக்கட்சியின் அஸ்தமித்துப்போன கனவா?...

2025-01-19 15:45:57
news-image

உயிர்களை பறிக்கும் வீதி விபத்துக்கள்

2025-01-19 15:33:13
news-image

தேவைப்படுவது தமிழ் மைய அரசியலே

2025-01-19 15:18:20
news-image

சேமிப்பாளர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய விதத்தில் புதிய நிதியியல்...

2025-01-19 15:13:50
news-image

அரசியல் கட்சிகளின் நிலைபேற்றை விடவும் சமூகத்தின்...

2025-01-19 15:06:36
news-image

புதிய அரசியல் யாப்பு அறிமுகமாகுமா?

2025-01-19 14:50:05
news-image

முஸ்லிம்கள் மீதான உரிமை மீறல்கள்

2025-01-19 14:42:18
news-image

புதிய தலைமையில் பொருண்மிய மீட்சி பெறுமா...

2025-01-19 14:08:55
news-image

மீண்டும் பலமடையும் விமானப்படை

2025-01-19 13:46:36