மலையகம் - வட, கிழக்கு உறவு

Published By: Vishnu

02 Jul, 2023 | 05:59 PM
image

(சி.அ.யோதிலிங்கம்)

ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தமது அக,ஆற்றலை மட்டும் வைத்துக்கொண்டு முன்னேறிச்செல்ல முடியாது. அதுவும் எண்ணிக்கையில் சிறிய தேசிய இனங்களுக்கு இந்நெருக்கடி அதிகமாக இருக்கும். இலங்கைத்தீவைப் பொறுத்தவரை இது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல மலையக மக்கள், முஸ்லிம் மக்களுக்கும் பொருந்தக்கூடியதாகும். ‘மலையகம் 200’ நிகழ்வை மேற்கொள்ளும் போது இந்த விவகாரம் மிகவும் கவனத்திலெடுக்கப்பட வேண்டிய விடயமாகும். 

‘மலையகம் 200’ நிகழ்வைக் கொண்டாடுவது என்பது வெறும் சடங்கல்ல. அது மலையகத்தின் கடந்தகாலம் எப்படியிருந்தது அதன் படிப்பினைகளைக் கொண்டு எதிர்காலத்தை நோக்கி எவ்வாறு நகருவது என்பதை திட்டமிடுவதாக இருக்க வேண்டும். 

இதன்போது தான் புறஆற்றல் சக்திகளை அடையாளம் கண்டு அவற்றையும் இணைத்துக்கொண்டு ஒருகுடையின் கீழ்ஒருங்கிணைந்து செல்வதற்கான மார்க்கங்களையும் கண்டாக வேண்டும். மலையக மக்களைப் பொறுத்தவரை சென்றவாரக்கட்டுரையில் குறிப்பிட்டது போல அடிப்படைச் சக்திகளாக இருப்பவர்கள் மலையகத்தில் வாழும் மக்களும் இலங்கைத்தீவிலும் தமிழ்நாடு உட்பட புலம்பெயர்; நாடுகளிலும் வாழும் மலையக வம்சா வழியினராவர்;. 

ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள் உட்பட உலகத் தமிழர்கள் நல்ல சேமிப்புச் சக்திகளாவர். சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட உலகெங்கும் வாழும்; முற்போக்கு ஜனநாயக சக்திகள் நல்ல நட்புசக்திகளாவர்;.

இங்கே சேமிப்பு சக்திகள் என்ற வகையில் தான் வட, கிழக்கு தமிழர்களுடனான உறவு மலையக மக்களைப் பொறுத்தவரை முக்கியமாகின்றது. ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் என்ற வகையிலும் பரஸ்பர ஒத்துழைப்புக்களை வேண்டி நிற்பவர்கள் என்ற வகையிலும் இனம், மொழி என்கின்ற தொப்புள்கொடி உறவினால் பிணைக்கப்பட்டவர்கள் என்ற வகையிலும், இரு பிரதேசங்களிலும் இரு தரப்பு மக்களும் வாழ்கின்றவர்கள் என்ற வகையிலும் இந்த உறவு முக்கியமானது.

வரலாற்றில் இந்த உறவுக்கு ஒரு தொடர்ச்சி இருந்திருக்கின்றது. இந்தத்தொடர்ச்சியில் ஒருதரப்பு தொடர்பாக மற்றைய தரப்பு அக்கறை காட்டத் தயங்கியிருக்கவில்லை. வட, கிழக்கு தமிழ் மக்கள் இணைந்தும், தனித்தும் அந்த அக்கறையைக்காட்டி வந்தனர். மலையக மக்களின் வரலாறு பல்வேறு கால கட்டங்களாக நகர்ந்திருக்கின்றது. 

1823-1919, 1919-1935, 1935-1947, 1947-1977, 1977-1989, 1989க்குப் பின்னர் என்பனவே அக்கால கட்டங்களாகும் முதலாவது காலகட்டமான  1823-1919 காலகட்டம் ஒருஇருண்ட காலமாக இருந்தது. மலையக மக்கள் பெருந்தோட்டங்கள் என்ற திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் வாழவிடப்பட்டனர். வெளியார் எவரும் தோட்டங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இரண்டாவது காலகட்டமான 1919-1935காலத்தில் இப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன. அம்மாற்றத்தை முதன் முதலில் தொடக்கி வைத்தவர்கள் வட,கிழக்கு வம்சா வழியினரான சேர்.பொன்.அருணாசலமும் மலையக வம்சா வழியினருமான பெரிசுந்தரமுமே ஆவார். 1919ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் இணைந்து இலங்கைத் தொழிலாளர் நலச்சங்கம் (CEYLON WELFARE LEAGUE) எனும் அமைப்பை உருவாக்கிச் செயற்பட்டனர். 

சேர்.பொன்.அருணாசலம் இவ்வமைப்பின் தலைவராகவும், பெரிசுந்தரம் செயலாளராகவும் பதவி வகித்தனர். பெரிசுந்தரம் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் பட்டதாரியாவார். 1931தொடக்கம் 1936வரை அட்டன் தொகுதியின் சட்ட சபை உறுப்பினராகவும் பதவி வகித்திருந்தார். இவ்வமைப்பு 1920ஆம் ஆண்டு இலங்கைத் தொழிலாளர் கூட்டுக்கழகம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 

5000தொழிலாளர்கள் வரை இதில் அங்கம் வகித்திருந்தனர். மலையகத்தில் நிலவிய துண்டு முறைக்கு எதிராக இவ்வமைப்பு குரல் கொடுத்தது. துண்டு முறையென்பது திருமணம் காரணமாகவோ அல்லது வேறு தேவைகள் காரணமாகவோ ஒரு தோட்டத்திலிருந்து இன்னோர் தோட்டத்திற்குச் சென்று வசிக்க வேண்டியிருந்தால் முன்னய தோட்ட நிர்வாகம் இவருக்கு எந்தவித கடனுமில்லை, நல்ல நடத்தையுடையவாரென கடிதம் கொடுக்க வேண்டும். இத்துண்டு முறை ஒருஅடிமை முறையை ஒத்திருந்தது. இலங்கைத் தொழிலாளர் கூட்டுக்கழகம் இதற்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து அதனை இல்லாமல் செய்தது. 

சேர்.பொன்.அருணாசலமும் பெரிசுந்தரமும் இம்முதலாவது கட்டத்தைத் தொடக்கி வைத்தாலும் இதனை நகர்த்தியவர் நடேசஐயர் தான். பத்திரிகையாளரான நடேசஐயர் தோட்டத் தொழிலாளர்கள் படும் அவல நிலையைக்கண்டு அவர்களுக்காக செயலாற்ற முன்வந்தார். இவர், ஏ.ஈ.குணசிங்கவின் இலங்கைத் தொழிற்சங்கத்தின் உப தலைவராக இருந்தவர். குணசிங்க இனவாத நிலைப்பாட்டை எடுத்த பின்னர் அதிலிருந்து விலகித் தோட்டத்தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்கினார்.

பெருந்தோட்டங்களில் நிறுவன ரீதியான அரசியலைத்தொடக்கி வைத்தவர் இவர்தான். தோட்டங்களுக்குள் வெளியார் செல்லக்கூடாது என்கின்ற விதிமுறைகளையும் மீறி தோட்டங்களுக்குச் சென்று தொழிலாளர்களை அணிதிரட்டினார். 1936ஆம் ஆண்டு தொடக்கம் 1947 வரை ஹட்டன் தொகுதியின் சட்டசபை உறுப்பினராகவும் விளங்கினர். நடேசஐயர் தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

மூன்றாவது கால கட்டம் (1935-1947). இடதுசாரிகள் மலையக மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்திய காலகட்டமாகும். 1935ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியும், முதலாவது இடதுசாரிக்கட்சியுமான லங்காசமசமாஜக் கட்சி உருவாக்கப்பட்டது. கலாநிதி.கொல்வின் ஆர்.டி.சில்வா தலைவராகவும், வேர்ணன் குணசேகர, பி.ஜே.பெர்னாண்டோ இணைச்செயலாளர்களாகவும் பதவியேற்றனர்.

 1936ஆம் ஆண்டு பெருந்தோட்ட முகாமைத்துவம் பற்றி கல்வி கற்பதற்காக இலங்கை வந்த அவுஸ்திரேலியரான ‘பிரஷ்கேடல்’ தோட்டநிர்வாகிகளால் தொழிலாளர்கள் மோசமாக ஒடுக்கப்படுவதைக் கண்டு லங்காசமசமாஜக் கட்சியில் இணைந்தார். கட்சி மூலம் தோட்டத் தொழிலாளர் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். இவருக்கு எதிரான நாடு கடத்தல் உத்தரவு கட்சியின் செயற்பாடுகளினால் தோற்கடிக்கப்பட்டது.

1939ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் திகதி லங்காசமசமாஜக் கட்சி தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றுவதற்காக அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்கியது. 1939 மார்கழியிலும் 1940ஜனவரியிலும் மலையகத்தில் இடம்பெற்ற முல்லோயா போராட்டத்திற்கு லங்காசமசமாஜக் கட்சி தலைமை தாங்கியது. 

இப்போராட்டத்தில் பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் செய்தமையால் கோவிந்தன் என்கின்ற தொழிலாளி 1940ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி மரணமானார். இவர் இறந்த தினமே மலையகத் தியாகிகள் தினமாக தற்போதும் அனுஷ்டிக்கப்படுகின்றது. 

கே.இராமநாதனை ஆசிரியராகக் கொண்டு ‘சம தர்மம்’ என்ற பத்திரிகையையும் மலையக மக்களுக்காக லங்காசமசமாஜக்கட்சி நடாத்தியது. கொல்வின் ஆர்.டி.சில்வா ‘கோவிந்தன்’ என்ற புனைப்பெயரில் அரசியல் கட்டுரைகளையும் எழுதினார். தோட்டப்புறங்களில் போராட்ட அரசியலைத் தொடக்கி வைத்தது அக்கட்சிதான்.

1939ஆம் ஆண்டு இலங்கை, இந்திய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதுவே பின்னர் 1950களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இலங்கை, இந்திய காங்கிரஸ் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பல்ல. அதுகொழும்பு நகரத்தில் வாழ்ந்த இந்திய வம்சா வழியினருக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. 

நேருவின் ஆலோசனையின் பேரிலேயே அது பெருந்தோட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. இதற்காக 1940ஆம் ஆண்டு அப்புத்தளை கதிரேசன் கோவிலில் வைத்து இலங்கை, இந்தியா காங்கிரஸ் தொழிங்சங்கம் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் இவ்வமைப்பு பெருந்தோட்டங்களில் காலூன்றியது எனக்கூற முடியாது. தொண்டமான் இவ்வமைப்புக்கு தலைமை தாங்கத்தொடங்கிய பின்னரே காலூன்ற ஆரம்பித்தது. 

மலையக அரசியலுக்கு இன ரீதியான பரிணாமத்தை கொடுத்தது இலங்கை, இந்திய காங்கிரஸ் தான். இதன் பின்னர் தான் மலையகத்தில் நிலவிய வர்க்க அரசியல் இனஅரசியல் என்ற அடையாளத்தைப் பெறத்தொடங்கியது. மலையக ஆய்வாளரும் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் செயலாளருமான காதர் இலங்கை இந்திய காங்கிரஸை மலையகத்தின் முதலாவது தேசிய இயக்கமாக அடையாளப்படுத்துகின்றார். நிலப்பறிப்புக்கு எதிரான உருளவள்ளித்தோட்டப்போராட்டம் தொண்டமானை மலையக தேசிய இயக்கத் தலைவராக அடையாளப்படுத்தியது. 

சேர்.பொன்.அருணாசலத்திற்குப்பிறகு தந்தை செல்வா தலைமை நிலைக்கு வரும் வரை வட,கிழக்கு தரப்பு மலையக மக்கள்மீது பெரிய அக்கறை காட்டியது எனக்கூற முடியாது. இடதுசாரிகள் மேலாதிக்கம் வகித்ததினால் வர்க்க அரசியல் காரணமாக இக்காலத்தில் தமிழ் அரசியலில் மேலாதிக்கம் செலுத்திய ஜீ.ஜீ.பொன்னம்பலம் கரிசணை காட்டவில்லை. பிரஸ்கேடில் விவகாரம் டொனமூரின் சட்டசபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது ஜீ.ஜீ.பொன்னம்பலம் அரசாங்கத்திற்கு சார்பாகவே வாக்களித்தார்.  

1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி தந்தை செல்வா தலைமையில் அகில இலங்கை தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்ற பின்னர் மலையக மக்கள் மீதான அக்கறை வட,கிழக்கு அரசியலில் ஒரு கொள்கை நிலைப்பாடாக மாறியது. இம்மாற்றத்திற்கு காரணமானவர் தந்தை செல்வா தான். தமிழரசுக்கட்சி காலத்தில் இந்த அக்கறை எவ்வாறு வகித்தது என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு குறுக்கே நிற்கும்...

2024-12-10 09:04:49
news-image

தமிழரசு கட்சி மட்டக்களப்பில் பெற்ற பெருவெற்றியும்...

2024-12-09 10:45:04
news-image

அசாத் எங்கே – மர்மத்தை தீர்த்துவைத்தது...

2024-12-09 09:48:21
news-image

ஐந்தாண்டுகளுக்கு ஆளுகை தொடரும் - பிரதியமைச்சர்...

2024-12-08 15:45:45
news-image

ரஷ்ய-உக்ரேன் போர் முனைக்கு வலிந்து தள்ளப்பட்டுள்ள...

2024-12-08 15:48:28
news-image

அநுர அரசின் அணுகுமுறை தமிழ் கட்சிகளை...

2024-12-08 12:41:32
news-image

கல்முனை விவகாரம் பிச்சைக்காரன் புண்ணாக தொடரக்...

2024-12-07 11:51:32
news-image

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறுபான்மையினருக்கு...

2024-12-08 15:49:06
news-image

மிரட்டப்படும் எதிர்க்கட்சிகள்

2024-12-07 11:12:36
news-image

வரலாற்றுத் திருப்பமாகுமா?

2024-12-07 10:36:56
news-image

ஓரிரவு கொள்கை வீதத்தால் இலங்கையின் பொருளாதாரத்தில்...

2024-12-08 11:00:25
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஆயுள் அதிகம்

2024-12-08 12:55:25