அம்பியூலன்ஸ் ஒன்று இல்லாததால் தன் தாயை இழந்த 52 வயது நபர் ஒருவருக்கு, அவரது தனித்துவமான சேவைக்காக பத்மஸ்ரீ விருது வழங்கப்படவிருக்கிறது.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், ஜல்பைக்குரியைச் சேர்ந்தவர் கரீமுல் ஹக். தேயிலைத் தோட்டத் தொழிலாளியான ஹக்கின் தாயார் கடந்த 2007ஆம் ஆண்டு திடீரென கடும் சுகவீனமுற்றார். அம்பியூலன்ஸ் வசதி இல்லாததால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் போனது. இதனால், ஹக்கின் கண் முன்பாகவே அவரது தாயாரின் உயிரும் பிரிந்தது.

இதனால் பெரிதும் மனவேதனையடைந்த ஹக், தன் தாய்க்கு நேர்ந்த கதி இனி இந்தப் பகுதியில் எவருக்கும் ஏற்படக்கூடாது என்று முடிவெடுத்தார். எனினும், மலைப்பகுதியில் அம்பியூலன்ஸ் வருவதற்குப் பல சிக்கல்கள் இருப்பதையும் உணர்ந்தார். அதனால், தனது சேமிப்பில் இருந்த பணத்தைக் கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கினார். அதில் சில பல மாற்றங்களைச் செய்து அதையே ஒரு இரு சக்கர அம்பியூலன்ஸாக மாற்றினார். இது அப்பகுதி மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துவருகிறது.

இதன்மூலம், கடந்த பத்து ஆண்டுகளாக சுமார் 3 ஆயிரத்து ஐந்நூறுக்கும் அதிகன நோயாளிகளை தனது மோட்டார் சைக்கிள் அம்பியூலன்ஸில் அழைத்துச் சென்று காப்பாற்றியிருக்கிறார். 24 மணிநேரமும் இந்தச் சேவையைச் செய்யத் தயாராக இருக்கும் கரீமுல் இதற்காக எந்தவித கட்டணத்தையும் அறவிடுவதில்லை என்பது சிறப்பு.

இவரது இந்த உன்னத சேவையை கௌரவிக்கும் முகமாக இந்த ஆண்டுக்குரிய பத்மஸ்ரீ விருது இவருக்கும் வழங்கப்படவுள்ளது.