‘அஸ்வெசும’ திட்டம் அப்பாவிகளின் அடிமடியில் கைவைத்தது அரசு 

Published By: Vishnu

02 Jul, 2023 | 02:59 PM
image

ஆர்.ராம்

வடமாகாணத்தினைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் போரின் கோர தாண்டவத்தால் குடும்பத்துக்கு தலைமை தாங்கும் பொறுப்பினைக் கொண்டிருக்கின்றார். அவருக்கு இரண்டு பிள்ளைகள். அவர் துணையை இழந்து பதினைந்து ஆண்டுகளாகிவிட்டது. அவரது பெற்றோர் மூப்படைந்து விட்டனர், அவர்களது பராமரிப்புக்காவும் தனது பாதுகாப்புக்காகவும், அவர்களுடனேயே தங்கி வாழ்கின்றார்.

சிறு சுயதொழிலின் சிறு வருமானமும், சமுர்த்திக் கொடுப்பனவும், தொண்டு நிறுவனமொன்றின் அவ்வப்போதான உதவிகளும், பிள்ளைகளது கல்வியையும், அவரது வாழ்க்கை உழல்வதற்கு வழிசமைத்துக்கொண்டு இருக்கின்றது. 

இந்நிலையில், இந்த இளம் தாயார், கடந்த வாரம் முதலாம் கட்டமாக வெளியிடப்பட்ட ‘அஸ்வெசும’ பெயர்பட்டியலில் தனது பெயர் காணப்படுகின்றதா என்று அவசரமாக தேடுதல் நடத்துகிறார். 

அப்படியலில் அவரது பெயரைக் காணவில்லை. அலறியடித்துக் கொண்டு கிராம உத்தியோகத்தரிடம் செல்கிறார். “புதிய நிவாரணப் பட்டியலுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை” என்று பதிலளிக்கின்றார் கிராம உத்தியோகத்தர். அடுத்து அவர் சென்ற இடம் சமுர்த்தி உத்தியோகத்தர். அங்கும், “பட்டியலை நான் தயாரிக்கவில்லை” என்றே பதில் வழங்கப்படுகிறது. 

இறுதியாக என்ன செய்வது என்றெண்ணிய அத்தாயார், அபிவிருத்தி உத்தியோத்தரை நாடுகின்றார். அப்போது “பிரதேச செயலகத்திற்கு செல்லுங்கள். அங்கு மேன்முறையீடு செய்ய முடியும்” என்று வழிகாட்டி விடப்படுகின்றது. அங்கு சென்றவர் “எனது பெயர் பட்டியலில் உள்ளடக்கப்படாமைக்கான காரணம் என்ன” என்று கோருகின்றார்.

அவர் அக்காரணத்தினைக் கோரியது வேறு யாரிடமும் அல்ல. தனது வீட்டுக்கு வருகை தந்து தகவல்களைத் திரட்டிய கள உத்தியோத்தரிடத்தில் தான். அப்போது, அந்த உத்தியோகத்தர், “எமக்கு ஒன்றும் தெரியாது, நாம் கோரிய தகவல்களை எடுத்து அனுப்பினோம், உங்களை அவர்கள்(மத்திய அரசு) பட்டியலில் உள்ளடக்கவில்லை” என்று கைவிரித்து விடுகின்றார்.

தனது வாழ்க்கைக்கு ஏதேவொரு வகையில் கைகொடுத்த சமுர்த்திக் கொடுப்பனவும் இல்லை, புதிய நலத்திட்ட உதவியும் இல்லை என்றாகிவிடவும் அந்த தாயாரின் மனவேதனை ‘கோபமாக’, அதிகாரிகளை நோக்கி கொப்பளித்தது. ஈற்றில் பிரதேச செயலாளரால் அவருக்கு மேன்முறையீட்டுக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டது.  

அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டு செல்கின்றார். அப்போது அந்த விண்ணப்பத்தை பெற்று சரிபார்க்கும் ஊழியர், “உங்களது மின்சாரக் கட்டணப் பட்டியல் 3500ரூபாவை செலுத்த முடிகின்றது என்பதனால் தான் ‘அஸ்வெசும’ பட்டியலில் உள்வாங்கப்படவில்லை” என்று பதிலளிக்கின்றார்.

அப்போது, குறித்த தாயார், “நான் தங்கியிருப்பது எனது பெற்றோருடன். அவர்கள் தான் மின்சாரப் பட்டியலைச் செலுத்துகின்றனர். எனது பெயரில் மின்சாரப் பட்டியல் பதிவே இல்லை” என்று பதில் கூறுகின்றார். அப்போது, அப்படியா, |தவறு நடந்துவிட்டது போல, மேன்முறையீடு செய்தால் உங்களுக்கு கொடுப்பனவு கிடைத்துவிடும்” என்று உத்தியோகத்தர் பதிலளித்து விடுகிறார்.

‘அஸ்வெசும’ திட்டத்தின் முதல் கட்டத்திற்கான பெயர்பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து நிகழ்ந்த பல்லாயிரம் சம்பவங்களில் மேற்படி சம்பவமும் ஒன்றாகும். இதுபோன்று பல விதமான மனதை நெகிழச் செய்யும் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 

அதுமட்டுமன்றி, நாடாளவிய ரீதியில் சாதாரண மக்கள் கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் நிலைமைகளும், நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள் போதிய தெளிவின்மையுடன் பிரதேச செயலகங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் காட்சிகளையும் தாராளமாகவே இந்த நாட்டிகளில் காண முடிகின்றது.

இதன் காரணத்தால் தற்போது வெளியிடப்பட்ட ‘அஸ்வெசும’ திட்டத்துக்கான பட்டியல் இறுதியானது அல்ல. ஜுலை பத்தாம் திகதி வரையில் மேன்முறையீடுகளை செய்ய முடியும். அதன் பின்னர் மீண்டும் மீளாய்வு செய்யப்படும் என்று ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்க முதல் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உட்பட நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி.விஜரத்ன வரையில் வாக்குறுதி அளிக்குமளவிற்கு நிலைமைகள் மோசமடைந்து விட்டன. 

இவ்வாறான மோசமான நிலைமையை உருவாக்கியது அரசாங்கம் தான். சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன்வசதியைப் பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளில் சமூகப்பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தல் செயற்றிட்டத்தின் கீழாகவே ‘அஸ்வெசும’ திட்டம் வடிவமைக்கப்பட்டது. 

மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடியவர்கள், ஏழைகள் மற்றும் மிகவும் ஏழ்மையானவர்கள் ஆகிய நான்கு சமூகப் பிரிவுகளின் கீழ், இந்தத் திட்டத்தின் நன்மைகள் வழங்கப்படுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு வழமை போன்று உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.

அத்துடன், நீண்டகாலத்துக்கு தெரிவு செய்யப்பட்ட சமுர்த்திப் பயனாளிகள் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறித்த நலத்திட்டத்திற்காக மூன்றாட்டு பட்டியலில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும், அந்தப் பட்டியல் கூட அவ்வப்போது மீளாய்வுக்கு உள்ளாக்கும் என்றும் அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

மேலும், 2001 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலப் பலன்கள் சட்டத்தின் படி, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 06 துறைகளின் குறிகாட்டிகளின் கீழ் தெரிவு செய்யப்படுவதோடு, தற்காலிக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் 4இலட்சம் பேருக்கான 2500ரூபா மாதாந்த கொடுப்பனவாக டிசம்பர் 31 வரையிலும் பாதிக்கப்படக்கூடிய 4இலட்சம் பேருக்கான ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு 2024 ஜூலை 31வரையிலும் வழங்கப்படவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் வறியோர் என்று அறியப்பட்ட பயனாளிகள் 8இலட்சம் பேருக்கான 8500 ரூபா கொடுப்பனவும் மிக வறுமையானவர்களுக்காக மாதாந்தம் 15ஆயிரம் ரூபா கொடுப்பனவும் ஜூலை 01 முதல் மூன்று வருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளன. தற்போது நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும் 72 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்தம் ஐயாயிரம் ரூபா வீதமும், சிறுநீரக பாதிப்புக்கான நிவாரணங்களை பெறும் 39,150 பேருக்கு ஐயாயிரம் ரூபா வீதமும் முதியவர்களுக்கான கொடுப்பனவுகளை பெறும் 416,667பேருக்கு இரண்டாயிரம் ரூபா என்ற அடிப்படையிலும் கொடுப்பனவுகள் தொடர்ந்தும் வழங்கப்படவுள்ளன என்பதும் அரசின் திட்டவட்டமான அறிவிப்பாகும். 

அவ்வாறிருக்கையில், ‘அஸ்வெசும’ திட்டம் மக்கள் கிளர்ந்தெழுந்து அரசாங்கத்தினை தூற்றுமளவிற்கு மாறியுள்ளது. போரின் அத்தனையும் இழந்துள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் 23,901பேர் மாத்திரமே சமுர்த்தி உதவித்தொகையை பெற்றுக்கொள்வதோடு அஸ்வெசும திட்டத்திற்கு 16,211 பேர் மட்டுமே தெரிவாகியுள்ளனர். 

இதனடிப்படையில், பார்க்கின்றபோது, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் மக்களின் போராட்டங்களிலும் தர்க்கங்களிலும் நியாயங்கள் இருக்கவே செய்கின்றன.அதேநேரம் அரசாங்கத்தின் பின்னடைவுகளுக்கு வலுவான காரணங்களும் இல்லாமலில்லை. 

முதலாவது, ‘அஸ்வெசும’ திட்டத்திற்கான மீளாய் செய்யப்பட்டபோது, களநிலைமைகளை நன்கறிந்த கிராம, சமுர்த்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவில்லை. இவர்கள் ஈடுபடுத்தப்பட்டால் மேலதிக கொடுப்பனவுகளைச் செலுத்த வேண்டியேற்படும் என்பதால் அதனை மட்டும்படுத்தும் முகமாக பிரதேச செயலங்களில் இருக்கைகளின்றி பணிக்கமர்த்தப்பட்டுள்ள முகாமைத்துவ உதவியாளர்களே அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டனர். 

அவர்கள், வெறுமனே பல்கலைக்கழக பட்டப்படிப்பினை பூர்த்தி செய்துவிட்டு முன்னனுபவமில்லாத நிலையில் ‘அரச உத்தியோகம்’ என்ற கௌரவ வேடத்தினைத் தரித்துக்கொண்டு இருப்பவர்கள். அத்தகையவர்கள் இப்பணியை முறையாக மேற்கொள்ளவில்லை. 

ஆனால் அரசாங்கம் 3190 அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், 494 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், 205 கிராம உத்தியோகத்தர்களும், 1127 இதர உத்தியோகத்தர்களும், 1712 தற்காலிக ஆட்களுமாக 6728 உத்தியோகத்தர்கள் உள்ளடக்கப்பட்டதாகவே கூறுகின்றது.

அவ்வாறானவர்கள் இருந்தாலும் கூட பல கவலையீனங்களும், அர்ப்பணிப்பின்மையின் வெளிப்பாடுகளும் மிகத்தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகின்றது.

இரண்டாவதாக, தெரிவுக்காக பயன்படுத்தப்பட்ட குறிகாட்டிகளில் மின்சாரக் கட்டணப்பட்டியல் போன்ற விடயங்களை உள்ளீர்த்தமை தவறானதாகும். கடந்த பெப்ரவரி மாதம் அரசாங்கம் 66சதவீதத்தினால் மின்சாரக் கட்டணத்தினை அதிகரித்தது. இதனால் ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத குடும்பங்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து ஐம்பதாயிரமாகியுள்ளது. 

அப்படியிருக்கையில், பயன்படுத்திய மின்சாரக் கட்டணத்தினை செலுத்துவதையும், வாழ்வாதாரத்தினை நகர்த்துவதையும் ஒப்பிட முனைவதானது, ‘மொட்டந்தலைக்கும், முழந்தாலுக்கும்’ முடிச்சுப்போட முனைவதற்கு நிகரானதொரு முட்டத்தாள்த்தனமான அணுகுமுறையாகும். இதனை கையெடுத்தது அரசாங்கமா அல்லது அரச அதிகாரிகளா என்பதில் தெளிவில்லை. 

மூன்றாவதாக, இலங்கையின் வறியவர்கள் எண்ணிக்கையானது, 2019இல் 4மில்லியனாக இருந்த நிலையில் தற்போது 7 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது மொத்த சனத்தொகையில் 31சதவீதமாகும். இதனால் வறியவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பட நிவாரணங்கள் பூரணமாக வழங்க முடியாத நிலைமை அப்பட்டமாகதெரிந்த பின்னரும், அரசாங்கம் தரவுகளை பொருட்படுத்தாது களத்தில் இறங்கியமையாலேயே இத்தகைய பரிதாபமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாடாளவிய ரீதியில் 17இலட்சத்து 6ஆயிரத்து 700குடும்பங்கள் சமுர்த்தி பயனாளிகளாகவுள்ளன. அதேசமயம், தனிநபரின் வருமானம் தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரத்திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைவாக 13,777ரூபாவாக காணப்பட்டாலும், அது இரண்டடிப்பாகி 34ஆயிரம் வரையில் சென்றுவிட்டது. 

இப்படியிருக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதை மையப்படுத்தியதாக கொண்டுவரப்படும் ‘அஸ்வெசும’ திட்டம் மேற்படி அனைத்து தரப்பினரையும் நிச்சயமாக உள்வாங்கியதாக இருக்கப்போவதில்லை. அப்பாவிகளின் அடிமடியில் கைவைத்தேயாக வேண்டியது அரசாங்கத்தின் தவிர்க்க முடியாத சூழ்நிலை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழ்க் கனடியர் கரி...

2025-03-20 17:41:32
news-image

சொந்தக்காலில் நிற்கும் முயற்சி?

2025-03-20 17:41:10
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மைய அரங்கிற்கு...

2025-03-20 17:24:35
news-image

சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும் ;...

2025-03-20 14:06:08
news-image

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள...

2025-03-18 20:17:35
news-image

'நாடாளுமன்றத்தில் ஐக்கியப்படுவதை தவிர இலங்கையின் தமிழ்...

2025-03-18 12:15:30
news-image

அல் ஜசீராவிடமிருந்து உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஒரு...

2025-03-19 14:50:58
news-image

பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை"

2025-03-18 04:17:11
news-image

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...

2025-03-17 22:45:03
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15