பெருந்தோட்டத்துறை மக்களின் பிரச்சினைகளை கண்டறிய சுயாதீன ஆணைக்குழு அவசியம் - பேராயர்

Published By: Digital Desk 3

01 Jul, 2023 | 03:23 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கையின் பெருந்தோட்டத்துறைகளில் வாழ்கின்ற மக்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்கான சுயாதீன ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.  

 200 வருடங்களாக மலையக பெருந்தோட்ட மக்கள் அனுபவித்து வருகின்ற காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதுடன், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து வசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார். 

ஐ.எம்.எப். இடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் மூலம், தொழில் முனைவோர்கள் புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்காக பணத்தை பயன்படுத்தியே நாட்டின் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியமே தவிர, தடை விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை  கட்டியெழுப்ப முடியாது. இவ்வாறு செய்வதால், எமது நாட்டை ‍ மென்மேலும் அதள பாதாளத்திற்கே தள்ளிவிடும் என பேராயர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை கரிட்டாஸ் செடெக் நிலையத்தின் தவிசாளரும் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் 'பெருந்தோட்ட சமூகத்தின் கெளரவமிக்க குடியுரிமையை நோக்கி' எனும்  தொனிப்பொருளில் கொழும்பிலுள்ள இலங்கை கரிட்டாஸ், செடெக் நிலையத்தில் ஊடகச் சந்திப்பொன்று நடைபெற்றது.

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கூறுகையிலேயே மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

"திறந்த பொருளாதார முறைமையின் மூலம் , கமிஷன் பெற்றுக்கொண்டு சூறையாடுவதையே நம் நாட்டு அரசியல் தலைவர்கள் செய்து வருகின்றனர். இந்நாட்டு வளங்களை மேம்படுத்தாது, தன்னிறைவுமிக்க நாடாக மாற்ற முடியாது.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய ஐரோப்பியர்கள் இந்நாட்டை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இவ்வாறு அவர்கள் கைப்பற்றிய நாடுகளின் வளங்களை சுரண்டினர். நாட்டின் பல்வேறு விதமான பயிர்களை பயிரிட்டு அதன் மூலமாக கிடைக்கப்பெறும் இலாபத்தை தத்தமது தாய் நாட்டுக்கு கொண்டு செல்வதே தமது பிரதான நோக்கமாக இருந்தது. 

அதுபோலவே, தற்போதும்கூட நம்நாடு போன்ற வரிய நாடுகளிடமிருந்து வளங்களை சூறையாடுவதையே செய்து வருகின்றனர். இதற்கு பெயர் திறந்த பொருளாதாரம். 

இந்த திறந்த பொருளாதார முறைமை மூலமாக சிறிய குழுக்களுக்கு எந்தவித எதிர்காலமும் கிடையாது. நாட்டில் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரம் அல்ல, சகல தொழிலாளர்களும் புதிய வடிவில் அடிமைகளாக்கப்பட்டுள்ளனர். இந்த முறைமையின் கீழ் எமது ‍ தோட்டத் தொழிலாளர்கள் முதலாவதாக சிக்கிக்கொண்டுள்ள பிரிவினராக அறிந்துகொள்ள முடிகிறது. 

அதாவது, சர்வதேச நாணய நிதியம் என்பது மேலைத்தேய நாடுகளின் பொருளாதார பலத்தை வைத்துக்கொண்டு, இந்த முறையை முன்னெடுக்கின்ற அமைப்பாகும். இதற்கு நிதி அளிப்பது பணம் படைத்த நாடுகள்தான்.  அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளே சர்வசே நாணய நிதியத்துக்கு நிதி வழங்குகிறது. 

இதன் மூலம் பணத்தை எங்களுக்கு கடன்  வழங்குவது  நடப்பதல்ல. மாறாக எமது பணத்தை அவர்கள் சுரண்டுகிறார்கள். ஆகவே, திறந்த பொருளாதார முறைமையின் மூலமாக ஒருபோதும் நாம் சிறந்த பொருளாதரமிக்க நாடாக உருவாக முடியாது. இந்த கடன் திட்டத்தின் காரணமாக, எமது பிரச்சினைகளை எமக்கு தீர்த்துக்கொள்ள முடியாது. மேலும் தன்னிறைவுமிக்க நாடாகவும் உருவாக முடியாது.

‍200 ஆண்டுகளுக்கு முன்னர் தோட்டத் தொழிலாளர்கள் அடிமைகள் போல கொண்டு வரப்பட்டு, முறையான சம்பளம் கொடுக்காது, அவர்களுக்கு முறையானதொரு வீடு கொடுக்காமல் அடிமை வாழ்க்கை வாழ வேண்டும் என்ற போக்கை வெள்ளையர்கள் அமைத்திருந்தனர்.  இதனையே பெருந்தோட்ட கம்பனிகளும் தொடர்ந்து செய்து வருகிறது.  இதனால் இந்த மக்கள் பெரும் அழுத்தத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். 

சில சந்தர்ப்பங்களில் வீதிகளை சற்று புனரமைத்துக் கொடுப்பதும், பகுதியளவில் உட்கட்டமைப்பு வசதிகைள ஏற்படுத்திக்கொடுப்பதல் மாத்திரம் அவர்களுக்கான தேவைகள் கிடைத்து விட்டது என கருத முடியாது.  முதலில் அவர்கள் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும். சிறைக்கைதிகளும் மனிதர்களே என வாசகம் எழுதப்பட்டுள்ளது.  இந்த தொழிலாளர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கான உரிமை பெற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் இந்நாட்டு பொருளாதாரத்திற்கு ஜீவ நாடியாக இருப்பதை அவர்களுக்கு உணரும் விதத்தில் அவர்களை நடத்த வேண்டும். அதற்கான கெளரவத்தை அவர்களுக்கு கொடுப்பதற்கு ஆட்சியாளர்கள்  செயற்பட வேண்டியது அவசியம். 

தேயிலை பயிர்ச் ‍செய்கையின் மூலம் கஷ்டப்படுகின்ற தொழிலாளர் வர்க்கத்திற்கு கிடைக்கப்பெறுகின்ற வேதனம் மிகவும் சொற்பமாகவுள்ளது. கம்பனிக்காரர்களும் இடைத்தரகர்களும்  கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொள்கின்றனர். இந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால், இந்நாட்டு ஆட்சியாளர்கள் இந்த நிலைமை குறித்து முறையாக அறிந்துகொள்ள வேண்டும். 200 ஆண்டுகளாகின்ற இந்த மலையக மக்களுக்கு ஆத்ம கெளரவத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்றுள்ளமையால், நாட்டின் தேசிய பொருளாதாரம் பலம் பெற்றுவிட்டதாக நினைப்பது வேடிக்கையாகவுள்ளது. 

எமது நாட்டை மென்மேலும் எளிய நாடாக பாதாளத்துக்கு கொண்டு செல்லவே சர்வதேச நாணய நிதியமும், நாட்டு அரசியல் தலைவர்களும் செய்கின்றனர். இதைப்போன்றே தொழிற்சங்கவாதிகளும் அவர்களை நடத்துகின்றனர் "என்றார். 

இந்த ஊடக சந்திப்புக்கு ஆயர் பேரவையின் தலைவரும் குருணாகல் மறை மாவட்ட ஆயர் ஹெரல்ட் அன்தனி, பெருந்தோட்ட துறை மக்கள் வாழ்கின்ற பகுதிகளைச் சேர்ந்த கண்டி, பதுளை, காலி, இரத்தினபுரி மறை மாவட்ட ஆயர்களும் கலந்துகொண்டு தத்தமது கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேங்காய் ஏற்றுமதி செய்து இலாபமடைய வர்த்தகர்கள்...

2024-12-09 20:37:12
news-image

ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து 72 கோடி ரூபாவை...

2024-12-09 17:09:44
news-image

இலஞ்ச ஊழல் மட்டுப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையை...

2024-12-09 20:47:19
news-image

சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி

2024-12-09 20:40:05
news-image

ரத்வத்தவின் மேன்முறையீட்டு மனு மீளப்பெறப்பட்டது

2024-12-09 20:31:59
news-image

ரணிலை காட்டிலும் அநுர அடிபணிந்துள்ளார் -...

2024-12-09 17:07:33
news-image

தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக...

2024-12-09 19:33:14
news-image

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர்...

2024-12-09 19:09:03
news-image

10ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியுடன் இந்தியக் கப்பல்...

2024-12-09 18:51:39
news-image

வாடகைக்கு பெற்ற சொகுசு வாகனங்களை அதிக...

2024-12-09 17:32:46
news-image

நுவரெலியாவில் மாவா போதைப் பொருளை விற்றவர்...

2024-12-09 17:12:46
news-image

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரச...

2024-12-09 17:25:22