(எம்.சி.நஜிமுதீன்)

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்துள்ள நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான பேரணி இன்று நுகேகொடையில் நடைபெறவுள்ளது. பி.ப. 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள குறித்த பேரணியில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பிரதேசங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்ளவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துகின்றமை, அரச நிறுவனங்களை விற்பனை செய்கின்றமை, ஊழல் மோசடி என்பவற்றை பிரதானப்படுத்தி நடத்தப்படவுள்ள எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு உரையாற்றள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், கலைஞர்கள், கல்வி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என சகல தரப்பினரும் பேரணியில் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும் ஏனைய மாவட்டங்களிலிருந்து ஏராளமானோரை இப்பேரணியில் கலந்துகொள்ளச் செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பேரணியை தடுப்பதற்கு அரசாங்கம் நீதிமன்ற நடவடிக்கை உட்பட வேறுவிதமான உபாயங்களை மேற்கொள்ள முற்பட்டாலும் திட்டமிட்டதுபோல் உரிய முறையில் பேரணி நடத்தப்படும் எனவும் கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. 

இப்பேரணியில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலர் கலந்துகொள்ளவுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவ்வாறானவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையையடுத்து அவர்களின் பிரசன்னம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.