இலங்கைத்  தேயிலையின் 150 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வு அண்மையில் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றபோது, பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி அங்கு தேயிலைத் தொடர்பாக பேசியதை விட நுவரெலியா மாவட்டத்தில் மந்தபோஷன நிலைமைகள் பற்றியே பேசியிருந்தார்.  மலையகப் பெருந்தோட்ட மக்களின் சுகாதார முறைமை இன்னும் முழுமையாக தேசிய சுகாதார முறைமைக்குள் உள்வாங்கப்படாமையே இவ்வாறான நிலைக்கு காரணம் என  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார். 

சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட மருத்துவ சட்டத்திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தேயிலைக்கு  150 ஆண்டு கால வரலாறு இந்த நாட்டில் இருக்கின்றபோது அதனோடு இணைந்து வாழும் பெருந்தோட்ட மக்கள் சமூகத்தின் சுகாதார முறைமைக்கும் அதே அளவு கால வரலாறு ஒன்று உண்டு. அவர்கள் இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட நாளில் மன்னாரில் வைத்து மலேரியா வராமல் இருக்க தடுப்பு மருந்து கொடுத்து அழைத்துவந்த நிலையில்,  பின்னர் அத்தகைய ஒரு நடைமுறையே தொடர்ந்தும் தோட்டங்களில் பேணப்பட்டு வருகின்றது. இன்றும் கூட அந்த பாரம்பரிய மருத்துவ முறையாக இ.எம்.ஏ (Estate Medical Assistant) முறைமையிலான வைத்திய முறைமையை ட்ரஸ்ட் எனப்படும் தனியார் கம்பனிகளின் கூட்டு நிறுவனமான பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்படுகின்றதே தவிர அரச சுகாதார முறைமை அங்கு முழுமையாக உள்வாங்கப்படவில்லை. அரசாங்கத்தினால் மருந்துகள் வழங்கப்படுகின்றதே தவிர மருத்துவசேவை வழங்கப்படுவதில்லை. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பதாக தோட்ட வைத்தியசாலைகளை அரச வைத்தியசாலைகளாக மாற்றும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டபோதும் கடந்த ஆட்சி காலத்தில் அது கைவிடப்பட்டது. 

நமது நாட்டில் சுகாதார குறிகாட்டிகள் மிக மோசமான பெறுபேற்றைக் காட்டுகின்றதென்றால் அது பெருந்தோட்டப் பகுயில்தான் . அரச மருத்துவமுறை உள்வாங்கப்படாதமையே இந்நிலைக்குக் காரணம். இதனாலேயே மந்தபோஷாக்கும் அதிக நோய்வாய்ப்படலும், சுகாதார வசதிகளின்மையும் அவதானிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் ஜனாதிபதி   தேயிலை தினத்தை கொண்டாட வந்தபோதும் கூட அங்குள்ள சிறுவர்களைக் கண்டவுடன் அவர் மந்தபோஷாக்கு பற்றி பேச நேர்ந்தது. 

இந்த முறைமையை மாற்றியமைக்க நல்லாட்சி அரசாங்கம் முன்வர வேண்டும். இதுதொடர்பாக தற்போது பாராளுமன்றில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார துறை சார் மேற்பார்வை குழு உறுப்பினர் என்றவகையில் நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் கலந்துரையாடி,  தோட்ட வைத்தியசாலைகளை முழுமையாக அரச வைத்திய முறைமைக்குள் கொண்டு வருவதற்கான எனது யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அது தொடர்பான அறிக்கை ஒன்றைத் தயாரிக்கும் பொருட்டு ஒரு உப குழு அமைக்கப்பட்டு அதன் தலைவராகவும் நானே நியமிக்கப்பட்டிருக்கின்றேன். எங்களது குழு இப்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றது. ஆய்வறிக்கை தயாராகும் பட்சத்தில் அதனை சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளேன். அமைச்சர் இது குறித்து உரிய கவனமெடுத்து நாட்டில் ஒரு மில்லியன் மக்களை உள்வாங்கியுள்ள தோட்ட சுகாதார முறைமையை அரச மருத்துவ முறைமைக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்போது கூட நான் பிரதிநிதித்துவம் செய்யும் நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு பிரதான வைத்தியசாலைகள் குறித்த அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றேன். இந்தியா அரசாங்கத்தின் உதவியுடன் டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலை நவீனமயப்படுத்தப்பட்டதுடன் அது இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. அது மத்தியமாகாண சபையின் பொறுப்பில் உள்ளது. ஆனாலும் வைத்தியசாலை பெரிதாக்கப்பட்டதனால் தங்களால் அந்த வைத்தியசாலையை பராமரிக்க முடியாது என மத்திய மாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. எனவே இந்திய உதவியுடன் புனரமைக்கப்பட்ட அந்த வைத்தியசாலையின் ஊடாக மக்கள் பயனடைய முடியாத நிலை உள்ளது. 

மறுபுறத்தில் இன்னுமொரு வைத்தியசாலையான லிந்துல பிரதேச வைத்தியசாலை சுமார் 65000 சனத்தொகைக்கான இந்த வைத்தியசாலையில் வருடாந்தம் 250 இயற்கை பிறப்புகள் இடம்பெறுகின்றன. அண்மையில்,  அந்த வைத்தியசாலைக்கு நான் விஜயம் செய்தபோது அங்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் வைத்தியர்களைக் காணக்கிடைத்தது. அங்கு உள்ள பிரசவ அறையை அடைவதற்கு ஒரு கர்ப்பிணி தாய் 110 படிகளில் இறங்கிச் செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது. அதேபோல அங்கு சி.டி.ஜி இயந்திர வசதிகளும் இல்லை. எனவே கர்ப்பிணி தாய்மார் வசதி கருதி சிறுபாதை ஒன்றை அமைக்கவும் போதிய இயந்திரங்களைப் பெற்றுக்கொடுக்கவும் சுகாதார அமைச்சு முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

பாராளுமன்ற உறுப்பினர் திலகரின் உரையை செவிமடுத்த சுகாரதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, தோட்ட வைத்திய முறையை மாற்றியமைக்கும் யோசனை தொடர்பில் விரைவில் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்தததுடன், இந்திய உதவியுடன் புனரமைக்கப்பட்டுள்ள டிக்கோயா வைத்தியசாலைக்கு இந்திய அரசாங்கம் இன்னும் உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்கவில்லை என்றும் அதுவரை சாதாரணமாக அது திறந்துவைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

 மத்திய மாகாண சபை டிக்கோயா வைத்தியசாலையை கொண்டு நடாத்த முடியாது என மத்திய மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் எவ்வாறு அந்த வைத்தியசாலையை பராமரிப்பது என நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் குறுக்கிட்டு விவாதித்த போது, தான் அதிகார பகிர்வில் அதிக நாட்டம் உள்ளவன் என்றும் மாகாண அதிகாரங்களை மீளப்பறெ விருப்பமில்லை. அந்த வைத்தியசாலை மாகாணசபைக்கு கீழாகவே இயங்கட்டும். ஆனால், அதற்கு போதுமான நிதியினைத் தான் பெற்றுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த வாக்குறுதியை வரவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் அதற்காக அமைச்சருக்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.