காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கான நியாயங்களை வேண்டி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளவர்களுக்கு உரிய தீர்வை பெற்று தருமாறு வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தான் பல்வேறு சந்தர்ப்பங்களில் கடிதம் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்துள்ளதோடு, தற்போது சாகும்வரை உண்ணாவிரதத்தில் இருப்பவர்கள் சார்பில் குறித்த கடிதத்தை எழுதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் அநேகமானவர்கள் வயோதிபர்கள் என்பதோடு அவர்களில் சிலர் கவலைகிடமாகவுள்ளனர். அவர்களின் நலனை கருத்திற்கொண்டு ஜனாதிபதி அரசியலிற்கு அப்பால் மனிதாபிமானத்துடன் தீர்வை எடுக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் தமது உறவுகளுக்கான தீர்வை கோரி தொடர்ந்து நான்காவது நாளாகவும் வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணாவிரதம் இடம்பெறுவதோடு, சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களின் நிலைமைகள் கவலைக்கிடமானதாக மாறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.