நல்லாட்சி அரசானது தமிழ் மக்கள் எதிர்பார்த்தவற்றை நிறைவேற்றாது தொடர்நதும் இழுத்தடித்து ஏமாற்றி வருவதால் நல்லாட்சி அரசிற்கு வழங்கி வருகின்ற ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகவியிலாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் தங்களுடைய பிரச்சனைகள் குறித்துப் பேசுவார்கள் தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்பiயில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமது வாக்குகளைப் போட்டு அவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றார்கள்.

அவ்வாறு பாராளுமன்றம் சென்ற கூட்டமைப்பு உறுப்பினர்களும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்குமென்ற நம்பிக்கையின் அடிப்படையில் புதிதாக அமைக்கப்பட்ட மைத்திரி- ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஏதோ ஒரு வகையில் தமிழர்களுக்கு நல்லது செய்யுமென்ற எதிர்பார்ப்பில் தமழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்து ஆதரவை வழங்கி வருகின்றது.

இந் நிலையில் எங்களுடைய பிரச்சனைகள் அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் காணி விடுவிப்பு உட்பட எமது பிரச்சனைகள் நாம் எதிர்பார்த்த அளவிலேனும் தீர்க்கப்படாமல் இருப்பதனை நாங்கள் பார்க்கின்றோம். இவ்வாறு நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதையும் நாங்கள் உணருகின்றோம்.

இவ்வாறான நிலையில் எம் மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்திருப்பதால் அவர்களுக்கு நாம் உண்மையைச் சொல்ல வேண்டும். இதனை விடுத்து வெறுமனே ஆதரவை வழங்கி வருவதால் எந்த பயனும் இல்லை. ஆகவே தொடர்ந்தும் இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு வழங்கி வருகின்ற ஆதரவை கூட்டமைப்பு மறு பரீசீலனை செய்ய வேண்டுமென்பது எங்களுடைய கோரிக்கையாக அமைகின்றது.

இதே வேளை கடந்த ஆட்சியில் தமிழ் மக்கள் தமது பல்வேறு பிரச்சனைகள் மற்றும் பாதிப்புக்கள் மற்றும் தேவைகள் என்பன தொடர்பில் பல கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வந்திருந்தனர். அதிலும் அரச தலைவர்கள் அல்லது அரச பிரதிநிதிகள் வருகின்ற போதும் தமது போராட்டங்களை முன்னெடுத்திருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் நல்லாட்சி அரசாங்கமானது அத்தகைய பிரச்சனைகளைத் தீர்ப்பதாக சொல்லியிருந்தது. ஆதனால் எமது மக்கள் பெரியளவிலான போராட்டங்களை மேற்கொள்ளாது அரசாங்க தரப்பினர்கள் எமது பகுதிகளிற்கு வருகின்ற போது தமது எதிர்ப்புகளையும் காட்டாமல் இருந்து வந்தனர்.

இந் நிலையில் இந்த அரசாங்கமும் அவற்றை முழுமையாகத் தீர்க்கவில்லை. மேலும் கடந்த ஆட்சியில் நடந்தது போன்றதான பிரச்சனைகள் இந்த ஆட்சியிலும் இடம்பெறுவதனைக் காணக்கூடியதாக உள்ளது. கடந்தகால அரசாங்கத்தை போன்று இந்த நல்லாட்சி அரசாங்கம் ஐனாதிபதி உட்பட அமைச்சர்கள் வருகின்ற போது எங்களுடைய மக்கள் எந்தவொரு போராட்டத்தையும் பெரிய அளவில் மேற்கொள்வில்லை.

ஆனால் ஐனாதிபதி வடக்கிற்கு வரும் போதே போராட்டங்களை செய்யப் போவதாகவும் தெரிவித்திருக்கின்றதுடன் போராடாங்களை முன்னெடுத்திருக்கின்றார்.இவ்வாறு தொடர்ந்தும் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருந்தால் இங்கு அவர்கள் வருகின்ற போது பரவலான போராட்டங்கள் தொடர்ந்தும் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதற்கான சூழலும் தோன்றியிருக்கின்றது.

ஆகையால் அமையப்பெற்றிருக்கின்ற நல்லாட்சியில் தொடர்ந்தும் எமது மக்கள் இவ்வாறான போராட்டங்கள முன்னடுப்பது நல்லாட்சி அரசிற்கு நல்லவிடயமல்ல. ஆனால் வேறு வழியில்லை. அவர்கள் சொன்னவற்றைச் செய்யவில்லை என்ற காரணத்தாலேயே போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய அந்த சூழலுக்குள் எம் மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

ஆகவே இதற்மைய அரசாங்கம் செயற்பட வேண்டியது அவசியம். அதே நேரம் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படுமென்ற நம்பிக்கையில் கூட்டமைப்பு ஆதரவை அரசிற்கு வழங்கியிருந்தாலும் இப்போது அவ்வாறான பிரச்சனைகள் தீர்க்கப்படாத நிலையில் அரசிற்கு வழங்கி வருகின்ற ஆதரவை மீள்பரிசீலனை செய்து கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.