காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நியாயம் வழங்கக் கோரி வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட உணவுத் தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்து 4வது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.

அதேவேளை, இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டிச் சாரதிகள் 500ற்கு மேற்பட்டோர் ஒன்றிணைந்து பேரணியாக பிரதான பஜார் வீதி வழியாக மணிக்கூட்டுக் கோபுரம் ஊடாக உணவு தவிர்ப்பு மேற்கொள்ளப்படும் இடத்திற்குச் சென்று தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.  

அதேநேரம் வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாகச் சென்ற வவுனியா வர்த்தகர் சங்க உறுப்பினர்கள், உரிமையாளர்கள் உணவு தவிர்ப்பு இடத்திற்குச் சென்று அமைதியான முறையில் ஆதரவினை வழங்கியுள்ளனர். 

இன்று காலை உணவு தவிர்ப்பவர்களைச் சந்தித்து கலந்துரையாடிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன், கழக உறுப்பினர்களும் தமது ஆதரவினை வழங்கியுள்ளனர். கொட்டும் மழையிலும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பேரணியாகச் சென்று உணவு தவிர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதியில் அமைதியான முறையில் அமர்ந்திருந்து ஆதரவினை வழங்கி வருகின்றனர். 

இன்று உணவு தவிர்ப்பில் ஈடுபடுபவர்களின் நிலை மேலும் சோர்வான நிலையில் காணப்படுகின்றது.