(நெவில் அன்தனி)
ஸிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றை வெற்றிவாகையுடன் நிறைவு செய்து சுப்பர் 6 சுற்றுக்குள் நுழைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் சிறப்பாக விளையாடி வரும் இலங்கை, தனது கடைசி பி குழு தகுதிகாண் போட்டியில் ஸ்கொட்லாந்தை வீழ்த்த முழு அளவில் முயற்சிக்கவுள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டி புலாவாயோவில் இன்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஸ்கொட்லாந்துடனான போட்டி சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கவுக்கு வரலாற்றுச் சாதனை படைக்கக்கூடிய முக்கிய போட்டியாக அமையவுள்ளது.
தகுதிகாண் சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் 5 விக்கெட் குவியல்களைப் பதிவு செய்த ஹசரங்க, இந்தப் போட்டியிலும் 5 விக்கெட்களைக் கைப்பற்றினால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்த முதலாவது வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.
அத்துடன் இதுவரை தொடர்ச்சியாக 5 போட்டிகளில் அரைச் சதங்கள் குவித்துள்ள திமுத் கருணாரட்ன இந்தப் போட்டியிலும் அரைச் சதம் பெற்றால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இலங்கையர்களில் தொடர்ச்சியாக 6 அரைச் சதங்கள் குவித்த முதலாவது வீரராவார்.
சனத் ஜயசூரிய, திலக்கரட்ன டில்ஷான், குமார் சங்கக்கார, தினேஷ் சந்திமால் ஆகிய இலங்கை வீரர்கள் 5 தொடரச்சியான அரைச் சதங்களைப் பெற்றிருந்தனர்.
எனவே, அவர்கள் இருவரும் தத்தமது தனிப்பட்ட சாதனைகளுக்கு குறிவைக்கும் அதேவேளை, இலங்கையின் வெற்றிக்காகவும் கடுமையாக முயற்சிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையும் ஸ்கொட்லாந்தும் ஏற்கனவே சுப்பர் 6 சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ள நிலையில் இந்த இரண்டு அணிகளில் எந்த அணி தோல்வி அடையாமல் முன்னேறிச் செல்லும் என்பதை இன்றைய போட்டி தீர்மானிக்கவுள்ளது.
இலங்கை தனது 3 போட்டிகளிலும் ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான், அயர்லாந்து ஆகிய அணிகளை இலகுவாக வெற்றிகொண்டிருந்தது. அத்துடன் அந்த 3 அணிகளில் எந்த அணியும் 200 ஓட்டங்களை எட்டவில்லை.
அயர்லாந்து பெற்ற 192 ஓட்டங்களே இலங்கைக்கு எதிராக தகுதிகாண் சுற்றில் ஒரு அணி பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.
கடைசிப் போட்டியிலும் ஸ்கொட்லாந்தை 200 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி இலங்கை வெற்றிபெற முயற்சிக்கவுள்ளது.
பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணராட்ன ஆகிய இருவரும் கடந்த போட்டிகளில் போன்றே சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த போட்டியில் கவனக் குறைவால் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்த குசல் மெண்டிஸ் மிண்டும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி கணிசமான ஓட்டங்களைப் பெறுவார் எனவும் சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா துடுப்பாட்டத்தில் திறமையைத் தொடர்வர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் முதல் 3 போட்டிகளில் விளையாடிய பந்துவீச்சாளர்களே தொடர்ந்து விளையாடுவர் என கருதப்படுகிறது.
வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித்த, லஹிரு குமார ஆகிய நால்வரும் பந்துவீச்சாளர்களாக இடம்பெறுவர்.
தசுன் ஷானக்க, தனஞ்சய டி சில்வா, தேவைப்படின் சரித் அசலன்க ஆகியோர் 10 ஓவர்களை தங்களிடையே பகிர்வர்.
தகுதிகாண் சுற்றில்ஸ்கொட்லாந்து தனது 3 போட்டிகளில் அயர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம். ஓமான் ஆகிய அணிகளை வெற்றிகொண்டிருந்தது. இலங்கைக்கு எதிரான போட்டியில் ஸ்கொட்லாந்து சாதிக்கும் என எதிர்பார்க்க முடியாது.
இலங்கைக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் இதுவரை நடைபெற்ற 3 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை வெற்றிபெற்றுள்ளது. எனவே இன்றைய போட்டியிலும் இலங்கை வெற்றிபெறும் என எதிர்பார்க்கலாம்.
அணிகள்
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க டி சில்வா, மஹீஷ் தீக்ஷன, லஹிரு குமார, கசுன் ராஜித்த.
ஸ்கொட்லாந்து: கிறஸ்டோபர் மெக்ப்றைட், மெத்யூ க்ரொஸ், ப்றெண்டன் மெக்முலென், ஜோர்ஜ் மன்சி, ரிச்சி பெறிங்டன் (தலைவர்), தொமஸ் மெக்கின்டோஷ், மைக்கல் லீஸ்க், கிறிஸ் க்றீவ்ஸ், மார்க் வொட், சபியான் ஷரிப், கிறிஸ் சோல்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM