ஆர்.ராம்
இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக பொறுப்புக்கூறலை தவிர்த்து வருகின்ற நிலையில், ஒரு சிவப்பு எச்சரிக்கையாக அமைந்துள்ள ஐ.நா. உயர்ஸ்தானிகரின் வாய்மூலமான அறிக்கையை தாம் வரவேற்பதாக தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூறச் செய்வதற்கான அழுத்தத்தினை ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச நாடுகள் வலுவாக பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை 53ஆவது கூட்டத் தொடரில் இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் தொடர்பிலான உயர்ஸ்தானிகர் வாய்மொழி மூலமான அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், அது குறித்து கருத்து வெளியிடும்போதே தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சி.வி.விக்னேஸ்வரன்
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில்,
ஐ.நா. உயர்ஸ்தானிகரின் வாய்மூலமான அறிக்கையானது, பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை சந்தித்துள்ள மக்களை மேலும் துன்புறத்தாமல், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் கட்சிகளுடன் முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தையும் வரவேற்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜனாதிபதி எம்முடனான பேச்சுவார்த்தையின்போது, அரச திணைக்களங்களினால் அபகரிக்கப்படும் காணிகள் பற்றி கரிசனை செலுத்தியிருந்தார்.
விசேடமாக வனத் திணைக்களம் 1985ஆம் ஆண்டு இருந்தவாறான வரைபடத்துக்குரிய காணிகளையே பரிபாலனம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆகவே, ஐ.நா. உயர்ஸ்தானிகர் வரவேற்றுள்ள நிலையில் அந்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அடுத்து, பொறுப்புக்கூறல் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொறுப்புக்கூறல் செய்யப்படாமல் எவ்விதமான எதிர்கால முன்னேற்றங்களையும் காணமுடியாது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பொறுப்புக்கூறல் நீதியாக முன்னெடுக்கப்பட வேண்டுமாயின், சுயாதீனமான விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.
மேலும், பயங்கரவாத தடைச் சட்ட விடயத்தில் எனது நிலைப்பாட்டுக்கு அமைவான விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் காணப்படுகின்ற குற்றவியல் சட்டம் மட்டுமே போதுமானதாகும். ஆகவே, பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதோடு, புதிய சட்டமும் அவசியமில்லை என்பதை உயர்ஸ்தானிகர் ஆணித்தரமாக கூறியுள்ளமை வரவேற்கத்தக்கது.
அதேநேரம், இந்த வாய்மொழி அறிக்கையில் போர் நிறைவுக்கு வந்து 14 ஆண்டுகளாகின்றபோதும், வடக்கு, கிழக்கில் உள்ள படையினர் வெளியேற்றப்படவில்லை என்ற விடயத்தினை சுட்டிக்காட்டியிருக்கலாம். ஆனால், அந்த விடயம் உள்ளீர்க்கப்படவில்லை.
அதேபோன்று எஞ்சியுள்ள அரசியல் கைதிகளுக்கான விடுதலையையும் அழுத்தமாக கூறியிருக்கலாம். ஆனால், அவ்விடயங்கள் கூறப்படாமை மனவருத்தத்தினை தருவதாக உள்ளது.
சுமந்திரன்
இலங்கை தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளரும், வெளி விவகாரங்களுக்கான செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,
ஐ.நா.உயர்ஸ்தானிகரின் வாய்மூலமான அறிக்கையானது, மிகக் காட்டமானதாக வெளிவந்துள்ள நிலையில் அதனை நாம் முழுமையாக வரவேற்கின்றோம்.
மிக முக்கியமாக இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக பொறுப்புக்கூறல் விடயத்தில் அசமந்தமான போக்கினை பிற்பற்றி வருகின்றமை பகிரங்கமாக உயர்ஸ்தானிகர் தனது வாய்மொழி மூலமான அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருப்பதையும், அது நீக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், புதிய பயங்கரவாத தடைச் சட்டம் சர்வதேச தரங்களைக் கொண்டதாக காண்பிக்கப்படுகின்றபோதும் அதில் பாரிய அடக்குமுறைகள் காணப்படுவதை வெளிப்படுத்தியுள்ளார். அது தற்காலிகமாக தாமதப்படுத்தப்பட்டுள்ள போதும் எதிர்காலத்திலும் அது நடைமுறைப்படுத்தப்படக் கூடாது என்பதை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பொருளாதார முன்னேற்றங்களை காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றபோதும், ஜனநாயகத்தை மீறும் வகையில் அடக்குமுறைகள் முன்னெடுக்கப்படுவதை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் கட்சிகளுடன் பேச்சுக்கள் நடைபெறுகின்றபோதும் அதில் திருப்திகரமான நிலைமைகளை அடைவதற்கு அரசாங்கம் போதியளவில் அர்ப்பணிப்பினை வெளிப்படுத்தவில்லை என்பதும், காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளபோதும், அவை திருப்திகரமான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் நடைபெற்ற விடயங்களுக்கு பொறுப்புக்கூறப்படாமல் நல்லிணக்கம் சாத்தியமில்லை என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆகவே, அரசாங்கம் பொறுப்புக்கூறலை செய்கின்ற தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பொருளாதார மீட்சியும் சாத்தியமில்லாத நிலைமையே ஏற்படும்.
அடுத்த கூட்டத்தொடரில் எழுத்துமூலமான அறிக்கையில் அதன் பிரதிபலிப்புக்களை அரசாங்கம் உணர்ந்துகொள்ளும். ஆகவே, உயர்ஸ்தானிகரின் வாய்மொழி மூலமான அறிக்கையை முன்னெச்சரிக்கையாகக் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.
கஜேந்திரகுமார்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,
53ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஐ.நா உயர்ஸ்தானிகரின் வாய்மொழி மூலமான அறிக்கையில் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியமை தொடர்பிலான பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகி நிற்கிறது என்ற விடயம் மிகவும் அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தினை ஏமாற்றுவதற்கான உத்திகளில் ஒன்றாக ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தின் செயலற்ற தன்மையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பொறுப்புக்கூறலின்றி நல்லிணக்கம் சாத்தியமில்லை என்பதும் அரசாங்கத்தின் சமகால அடக்குமுறைகள் பற்றியும் குறித்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நாம் ஐ.நா. உயர்ஸ்தானிகரின் வாய்மொழி மூலமான அறிக்கையை வரவேற்கின்றோம். ஆனால், குறித்த அறிக்கையில், இலங்கை அரசாங்கத்தின் அனைத்து விதமான செயற்பாடுகளுக்கும் அடிப்படையாக இருப்பது, சிங்கள பௌத்த பேரினவாதம் தான் என்ற விடயம் வெளிப்படுத்தப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
அதுமட்டுமன்றி, தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என்பதும், அதிகாரங்களை பகிர்வதற்கு அரசாங்கம் பின்னடிக்கின்றது என்ற விடயத்தினையும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
எம்மை பொறுத்தவரையில், தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட மக்கள்; அவர்களுக்கு பொறுப்புக்கூறப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பது நிலைப்பாடாகும்.
அத்துடன், இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்பட வேண்டுமானால், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடியவாறான அரசியல் தீர்வு அவசியமாகிறது.
அதனை எதிர்வரும் காலத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மற்றும் அலுவலகம் கவனத்தில்கொண்டு தமது அறிக்கைகள் தீர்மானங்களில் உள்ளீர்க்க வேண்டும் என்பது கோரிக்கையாகவுள்ளது. அதற்கான அழுத்தங்களை எமது தரப்பிலிருந்து நாம் முழுமையாக வழங்குவோம் என்றார்.
சுரேஷ் பிரேமச்சந்திரன்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,
ஐ.நா. உயர்ஸ்தானிகர் தனது வாய்மூலமான அறிக்கையில், இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்துக்கான முயற்சிகளை முன்னெடுப்பதாக கூறிவந்தாலும், பொறுப்புக்கூறுவதற்கு தயாரில்லாத நிலையிலேயே உள்ளது என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார்.
அதுமட்டுமன்றி, போரின்போதும், அதன் பின்னரும் அரசாங்கம் ஜனநாயக விரோதமான செயற்பாடுகளை முன்னெடுத்து பொதுமக்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்கிறது என்பதையும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.
உண்மையில், இலங்கை அரசாங்கத்தினை பொறுத்தவரையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்குவது தொடர்பில் கண்துடைப்புச் செயற்பாடுகளையே முன்னெடுக்கிறது. அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேசத்தினை ஏமாற்றும் வகையில் சில பேச்சுக்களை முன்னெடுத்து காலங்கடத்துகிறது.
இவ்விதமான பிற்போக்குச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அரசாங்கத்தினை இனங்கண்டு ஐ.நா. உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் அம்பலப்படுத்தியுள்ளார்.
எனினும், தற்போதைய சூழலில் ஐ.நா.வும், இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி தீர்மானத்தினை கொண்டுவந்து நிறைவேற்ற இணை அனுசரணை நாடுகளும், ஏனைய சர்வதேச சமூகமும் ஒன்றிணைந்து இலங்கை அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டியது அவசியமாகிறது.
இலங்கை பொருளாதார, அரசியல் ரீதியாக ஸ்திரமற்ற நிலையில் உள்ளது.
இதிலிருந்து மீள்வதாக இருந்தால் குறித்த செயற்பாடுகள் மிகவும் அவசியம் என்பதை தொடர்ந்தும் ஆணித்தரமாக வெளிப்படுத்துவதோடு நிற்காமல், அதற்கான செயல்வடிவங்களை முன்னெடுப்பதற்குரிய அழுத்தங்களை வலுவாக பிரயோகிக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM