நேர்காணல்: எம்.மனோசித்ரா
•நாட்டில் தமிழ் பௌத்தர்கள் இருந்தமையை ஏற்கிறேன்
•தேசிய தொல்லியல் விவகாரத்தில் தேரர்கள் தலையிடக் கூடாது
•அரசியல்வாதிகள் இனவாதிகளாக செயற்படுகின்றனர்
வட, கிழக்கு மற்றும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் தொல்பொருள் விவகாரத்தை அரசியல் நலன்களுக்காக இனவாத மோதல்களை நோக்கி நகர்த்துகின்றனர். இந்த மோதல்கள் தீவிரமடையுமாயின் 30 ஆண்டுகால போரை விட பாரதூரமான அழிவுகளை மக்களும் நாடும் எதிர்கொள்ள நேரிடுமென புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு;
படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்
கேள்வி : தமிழ் மக்களின் பாரம்பரிய இடங்களான வடக்கு , கிழக்கு பகுதிகளில் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் காணிகளை அபகரிப்பதும் , குடிபரம்பலை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகளுமே முன்னெடுக்கப்படுவதாக காணப்படுகின்ற கரிசனைகள் தொடர்பில் உங்களது கருத்து என்ன?
பதில்: உண்மையில் அவ்வாறு கூறுவது யார்? மக்களா அல்லது வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகளா?
கேள்வி: அரசியல்வாதிகள் என்பவர்கள் மக்கள் பிரதிநிதிகளல்லவா?
பதில்: மக்கள் பிரதிநிதிகளெனக் கூறிக்கொண்டு ஒவ்வொரு அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கேற்ப செயற்பட முடியாது. அப்பாவி மக்களை முன்னிறுத்தி ‘அரசியல் சூது’ விளையாடுகின்றனர்.
30ஆண்டு உள்நாட்டு யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து முழுமையாக மீண்டு, தமது பிள்ளைகளுக்கான கல்வியை வழங்கி முன்னேற வேண்டுமென்பதே அந்த மக்களின் தேவையாகவுள்ளது.
வடக்கு, கிழக்கிலேயே மந்த போசனை, வேலையில்லா பிரச்சினைகள் உள்ளிட்ட வாழ்வாதார பிரச்சினைகள் அதிகம் காணப்படுகின்றன. எனவே அவற்றுக்கான தீர்வினையே அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இதனை மாத்திரம் கூறி இந்த பிரச்சினையிலிருந்து தப்பிக்க நான் விரும்பவில்லை.
தேர்தலுக்காக அல்லது வெளிநாடுகள் ஊடாக எமக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்காக ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஒவ்வொரு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றனர்.
கேள்வி : நீங்கள் குறிப்பிடுவதைப் போன்று வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகள் மாத்திரம் இவ்விவகாரத்தில் தொடர்புபடவில்லை. தொல்பொருள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் மக்கள் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்துவதற்கு சில தென்னிலங்கை அரசியல்வாதிகளும், பௌத்தவாதிகளும், முயற்சிக்கின்றனரல்லவா?
பதில்: இந்த விவகாரத்தில் தலையிடும் சகல அரசியல்வாதிகளினதும் இலக்கு வாக்குகளைப் பெற்றுக் கொள்வது மாத்திரமே.
கேள்வி: அவர்கள் தமது அரசியல் தேவைகளுக்காகவா மக்கள் மத்தியில் முரண்பாடுகளையல்லவா தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர்?
பதில்: ஆம், இவர்கள் இறுதியில் அங்கு செல்லவே முயற்சிக்கின்றனர். வடக்கு , கிழக்கில் மாத்திரமல்ல. தெற்கிலும் இந்த பிரச்சினை காணப்படுகிறது. மிகுந்த சிக்கலுக்கு மத்தியிலேயே இதனை நாம் முகாமைத்துவம் செய்கின்றோம். நாட்டில் தொல்பொருள் கட்டளை சட்டம் காணப்படுகின்றது. அது தொடர்பான முழுமையான அறிவைப்பெற்று அதன் பின்னரே தொல்பொருளியல் பற்றி பேச வேண்டும்.
தொல்பொருள் என்பது இந்து, பௌத்தம் அல்லது முஸ்லிம் என குறிப்பிட்டவொரு மதப்பிரிவினருக்கு மாத்திரம் உரித்துடையதல்ல. தொல்பொருளியல் என்பது முழு நாட்டுக்கு மாத்திரமின்றி , முழு உலகத்துக்கும் உரித்துடையதாகும்.
உதாரணமாக புராதன இந்து கோவிலொன்று கண்டு பிடிக்கப்பட்டால் அதனை அகற்றுமாறு நாம் கூறப்போவதில்லை. மாறாக அது குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு , அதனை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
கேள்வி: குருந்தூர்மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது இந்து ஆலயம் என்றல்லவா கூறப்படுகிறது?
பதில்: இது தொடர்பில் எமக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் அங்கு பௌத்த விகாரை அமைந்திருந்ததாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இதன் ஊடாக மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. இவ்வாறான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மக்கள் மத்தியில் முரண்பாடுகள் ஏற்பட்டதன் பின்னர் எவரும் வரப்போவதில்லை. ஒன்றில் அவர்கள் கொழும்பில் இருப்பர். அவ்வாறில்லையெனில் வெளிநாடு சென்று விடுவார்கள். இறுதியில் அப்பாவி மக்களே பாதிக்கப்படுவர். 30 ஆண்டு கால யுத்தத்தில் இதுவே இடம்பெற்றது. அவ்வாறானதொரு நிலைமையை மீண்டும் தோற்விப்பதற்கல்லவா இவர்கள் முயற்சிக்கின்றனர்?
கேள்வி : அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அது அனைத்து மக்களையும் பாதிக்கும். அதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமல்லவா?
பதில்: 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தத்தைப் போன்று மீண்டும் ஒரு பதற்ற நிலைமை நாட்டில் தோற்றம் பெற்றால், கடந்த சந்தர்ப்பத்தை விட பாரதூரமான அழிவுகளை ஏற்படுத்தும். அதனைத் தடுப்பதற்கு நாம் அனைவரும் சட்டத்துக்கமைய செயற்பட வேண்டும். சட்டம் என்பது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகும். எனவே அதில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமெனில் , அந்த அதிகாரமும் பாராளுமன்றத்துக்கே காணப்படுகிறது.
கேள்வி : அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனக் கூறுகின்றீர்கள். அவ்வாறெனில் தமிழ் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தைகள் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கையை எடுக்க முடியுமல்லவா?
பதில் : ஆம். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சார்ள்ஸ் நிர்மலநாதன், சிறிதரன் உள்ளிட்ட ஐவருடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போது தொல்பொருளியல் சார் செயற்பாடுகளை தாம் எதிர்க்கவில்லை என்றும், அதற்கு ஆதரவளிப்பதாகவும் அவர்கள் எம்மிடம் குறிப்பிட்டனர். நியாயமான கோரிக்கைகள் குறித்து அவதானம் செலுத்துவதாக நாம் குறிப்பிட்டோம்.
உண்மையில் அங்குள்ள காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சொந்தமானதாகும். அவர்களிடமே நாமும் கோரிக்கை முன்வைத்துள்ளோம். குறுந்தூர்மலைப் பிரதேசத்தில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், திரியாயவில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
இதில் குறிப்பிட்டுக் கூற வேண்டிய ஒரு விடயம் யாதெனில் பௌத்த தேரர்கள் இதில் தலையிடுவதாகும். பௌத்த தேரர்களது செயற்பாடுகளாலேயே தமது காணிகளை அபகரிக்க முயற்சிக்கப்படுவதாக மக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது.
எனவே தொல்பொருளியல் திணைக்களத்தினால் மாத்திரம் இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால் அதுவே சிறந்ததாகும்.
கேள்வி : விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் இவ்விடயத்தில் தலையிட வேண்டாமென பௌத்த தேரர்களிடம் உங்களால் நேரடியாகக் கூற முடியாதா?
பதில் : பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கின்றேன். அமைச்சின் மேலதிக செயலாளரும் தெரிவித்திருக்கின்றார். ஆனால் அவர்களை அதனைக் கேட்டு நடப்பதாகத் தெரியவில்லை. எவ்வாறிருப்பினும் எமது நிலைப்பாடு யாதெனில், தொல்பொருளியல் சட்டத்துக்கமையவே நாம் செயற்படுவோம். ஏதேனுமொரு வகையில் தொல்பொருளியல் இடம் காணப்பட்டால் அவ்விடம் யாருக்கும் வழங்கப்பட மாட்டாது.
கேள்வி : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருளியல் அதிகாரிகள் மற்றும் தமிழரசுக் கட்சியினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது , தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குறித்த பிரதேசங்களில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்ததாகத் தெரிவித்துள்ளமை குறித்து உங்கள் நிலைப்பாடு?
பதில்: ஜனாதிபதி கூறிய விடயங்களை முழுமையாக நான் பார்க்கவில்லை. எனினும் தமிழ் பௌத்தர்கள் காணப்பட்டனர் என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அது புதிய விடயமல்ல. இந்தியாவிலும், இலங்கையிலும் இன்றும் தமிழ் பௌத்தர்கள் உள்ளனர்.
கேள்வி: கலாசார அமைச்சர் என்ற ரீதியில் ஏனைய மதங்களின் பாரம்பரியங்களைப் பாதுகாப்பது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்ற ஒரு குறைபாடு முன்வைக்கப்படுகிறதே?
பதில்: அவ்வாறு கூற முடியாது. அனைத்து மக்களதும் மத பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். எனினும் அவற்றை விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பதில்லை.
கேள்வி: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து உங்கள் நிலைப்பாடு?
பதில்: அவற்றுடன் என்னால் முழுமையாக இணங்க முடியாது. காரணம் எமக்கு தேசிய பொருளாதாரம் தேவையாகும். இன்னும் நாம் உற்பத்தி பொருளாதாரத்துக்குச் செல்லவில்லை. விவசாயம், பெருந்தோட்டத்துறை, மீன்பிடி, தொழிற்சாலை உள்ளிட்டவற்றை இன்னும் பழைய நிலைமையை அடையவில்லை. எனினும் அது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தவறல்ல.
கொரோனா, அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் என கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளோம். அது எமக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியது. எனினும் இவற்றால் மாத்திரம் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை.
தற்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தூற்றினாலும், கொரோனா காலத்தில் பல சந்தர்ப்பங்களில் அவரால் மக்களுக்கு 5000ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதல்வா? ஆனால் இன்று எவரும் அதைப்பற்றி பேசுவதில்லை. எனவே ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டிருக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.
ஆனால் எம்மிலும் ஒருகுறைபாடு காணப்படுகிறது. நாம் வடக்கிலும், கிழக்கிலும் பாலங்கள் அமைத்துள்ளோம். ஆனால் அந்த மக்களுடனான உறவுப்பாலத்தை கட்டியெழுப்ப தவறியுள்ளோம். மக்களின் நம்பிக்கையை வெற்றி கொள்வதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.
கேள்வி : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதனை இலக்காகக் கொண்டா தமிழ் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்றார்?
பதில்: அது எனக்கு தெரியாது. அவர் ஒரு அரசியல்வாதியல்லவா? தேர்தலும் அண்மித்துக் கொண்டிருக்கிறது. எனவே அனைத்தையும் சமநிலைப்படுத்துவதற்கே அவர் முயற்சிக்கின்றார். ஆனால் சமநிலைப்படுத்துவதற்காக ஏதேனும் தவறான தீர்மானம் எடுக்கப்பட்டால் மறுபுறம் பாரிய பாதிப்பு ஏற்படும்.
கேள்வி: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தவறான தீர்மானத்தை எடுக்க முயற்சிப்பதாக நீங்கள் எண்ணுகின்றீர்களா?
பதில் : நான் அவ்வாறு நினைக்கவில்லை.
கேள்வி : ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் நீங்கள் அவரை ஆதரிப்பீர்களா? அல்லது முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் எவரேனும் போட்டியிட்டால் அவர்களை ஆதரிப்பீர்களா?
பதில் : ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் போது அதுதொடர்பில் தீர்மானிக்கலாம்.
கேள்வி : விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் எனத்தெரிவிக்கப்படுகின்றதே?
பதில் : அது குறித்து எனக்கு தெரியாது. அவ்வாறான செய்திகளை ஊடகங்களே உருவாக்குகின்றன.
கேள்வி : பொதுஜனபெரமுனவுக்குள் பிளவுகள் காணப்படுகின்றதா? ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சுப்பதவிகளை வழங்காமையால் அதிருப்திகளும் நீடிக்கின்றனவா?
பதில் : பொதுஜன பெரமுனவுக்குள் இரண்டுக்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளன. கடந்த பொதுத் தேர்தலில் சுமார் 146 ஆசனங்களைப் பெற்ற பொதுஜன பெரமுன மீண்டும் , அதைப் போன்ற வெற்றியை பதிவு செய்யும் என்று நான் நம்பவில்லை.
கேள்வி : நீங்கள் எந்த தரப்பில் இருக்கின்றீர்கள்?
பதில் : நான் மக்கள் பக்கமே இருக்கின்றேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM