தலைமை இல்லாத கூட்டணி

Published By: Vishnu

25 Jun, 2023 | 12:36 PM
image

கபில்

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற போர்வையுடன் இயங்கும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் நிர்வாகத் தெரிவு அண்மையில் வவுனியாவில் இடம்பெற்றிருக்கிறது.

உள்ளூராட்சித் தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிடலாம் என, தமிழ் அரசுக் கட்சி கூறிய பின்னர், கூட்டமைப்பின் பங்காளிகளான, ரெலோவும் புளொட்டும்- ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து, புதிய கூட்டணியை அமைத்து, தாங்கள் தான் உண்மையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று அறிவித்தன.

புளொட் முக்கியஸ்தர் ராகவனை செயலாளராக கொண்டு, பதிவு செய்யப்பட்டிருந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற கட்சியின் கீழ், இந்த ஐந்து கட்சிகள் இணைந்து கொண்டாலும், தங்களையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று காண்பிக்க பெருமுனைப்பு எடுத்து வருகின்றன.

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தமிழர் அரசியலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயருக்கு உள்ள வசீகரத்தைப் பயன்படுத்தி அரசியலில் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் தான், இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

இந்தப் புதிய கூட்டு உருவாக்கப்பட்ட போது, உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்பட்டிருந்தது.

உள்ளூராட்சித் தேர்தல் கைவிடப்பட்டதால், இந்தக் கூட்டும் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பின்னர், இந்த அரசியல் கூட்டணியின் நி்ர்வாகிகள் தெரிவு இடம்பெற்றிருக்கிறது.

இந்தக் கூட்டத்தில், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் தலைமை என ஒன்று இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. 

வவுனியா கூட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர் பதவி குறித்து ரெலோவும், புளொட்டும் முன்மொழிந்த போது, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதனால், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு தலைவர் பதவி இருக்காது என்றும், பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஐந்து பேரும் இணைத் தலைவர்களாக செயற்படுவார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ் அரசுக் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த போது, நாங்கள் புதிய கட்சிகளை இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடுவோம் என்று அறிவித்திருந்த ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சுழற்சி முறையில் கூட்டமைப்பின் தலைமைப் பதவியை பகிர்ந்து கொள்வோம் என்று கூறியிருந்தார். புளொட்டும் அந்த யோசனைக்குத் தலையாட்டியிருந்தது.

கூட்டமைப்பின் தலைவர் பதவியைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற கனவில் இருந்த செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு, தலைமை இல்லை என்ற முடிவை எடுக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருப்பவர் சிறிகாந்தா.

தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரான அவர், முன்னர் ரெலோவில் இருந்து, முரண்பட்டுக் கொண்டு, சிவாஜிலிங்கத்துடன் இணைந்து புதிய கட்சியைத் தொடங்கியவர்.

தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டு பின்னர் ரெலோவின் முதல்வராகவும் பதவி வகித்தவர்.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு தலைமை இல்லை முடிவு, தற்போதைய நிலையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியில் - தலைமை தாங்கக் கூடிய ஒரு ஆளுமை இல்லை என்ற உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் பின்புல ஆதரவுடன் உருவாக்கப்பட்ட போது, அதன் பாராளுமன்றக் குழுத் தலைவரான இரா.சம்பந்தனே கூட்டமைப்பின் தலைவராக செயற்பட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தன் செயற்படுவதற்கு விடுதலைப் புலிகளும் அங்கீகாரம் அளித்திருந்தார்கள். 

தலைமைப் பதவியில் இருந்தபோது இரா.சம்பந்தனும், சுமந்திரனும் இணைந்து தன்னிச்சையாக முடிவுகளை எடுத்தனர் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தே, சிறிகாந்தா, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு தலைவர் வேண்டாம் என்று வாதிட்டிருந்தார்.

இரா.சம்பந்தன் குறித்த பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அவர் ஆளுமைமிக்க தலைவராக விளங்கினார் என்பதில் சந்தேகமில்லை.

அதனால் தான், பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அவரை எதிர்த்துச் செயற்பட முடியாமல் இருந்தது. அவர்கள் ஆளுமையுள்ளவர்களாக இருந்திருந்தால், தலைமைப் பதவியில் இருந்த இரா.சம்பந்தனை தங்களுடன் இணைந்து செயற்படும் நிலைக்கு கொண்டு வந்திருக்க முடியும். அல்லது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

இரா.சம்பந்தனை சுமந்திரன் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து முடிவுகளை எடுப்பதில் ஆளுமை செலுத்த முடியும் என்றால், ஏன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரால் அவ்வாறு செயற்பட முடியாமல் போனது?

இது தவிர, இரா.சம்பந்தனின் ஆளுமை சர்வதேச ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்டிருந்ததை மறுக்க முடியாது. தமிழ்த் தேசியப் பிரச்சினையை கையாளுவதில் அவர் தவறிழைத்திருக்கலாம், தன் ஆளுமையை பயன்படுத்த முடியாதிருக்கலாம், ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு தசாப்தங்களாக தலைமை தாங்கியவர் அவர்.

அவரைப் போன்றதொரு ஆளுமைமிக்க தலைமை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் இல்லை என்பது வெளிப்படையானது. 

மொழிப்புலமை, அரசியல் ஆளுமை, கொள்கை உறுதிப்பாடு, வாக்காளர் மத்தியில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய ஆளுமை ஆகிய நான்கையும் கொண்ட தலைமைத்துவம் இப்போது தமிழர் தரப்பில் இல்லை.

அல்லது, இருக்கின்ற ஆளுமைகளைப் பயன்படுத்தி தம்மைத் தலைமை தாங்கக் கூடியவராக வெளிப்படுத்தி- நிலைப்படுத்திக் கொள்ளக் கூடியவர்கள் யாரும் இல்லை.

அந்தக் குறைபாடு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் பொருத்தமானது தான்.

அதனால் தான், கட்சிக்கு தலைமை தாங்க கூடிய ஒருவரை அந்தக் கூட்டணியினால் இனங்காட்ட முடியவில்லை.

எங்கே ஒருவரை தலைவராக்கி விட்டால், அவர் தங்களின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று விடுவாரோ என்ற பயம் பங்காளிக் கட்சிகளுக்குள் இருக்கிறது.

அதனால் தான் இணைத் தலைவராக பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் செயற்படுவார்கள் என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் இப்போது, முடிவுகளை எடுப்பதாயின், ஐந்து கட்சிகளின் தலைவர்களும் சேர்ந்தே எடுக்க வேண்டும். அவசரமாக முடிவுகளை எடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

தலைமை விடயத்தில் இந்தளவுக்கு கறாரான முடிவை எடுத்திருக்கும் பங்காளிக் கட்சிகள், கூட்டணியின் செயலாளர் விடயத்தில் புளொட்டிடம் இருக்கும் அதிகாரத்தை எவ்வாறு கட்டுப்படுத்தப் போகின்றன என்ற கேள்வி இருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், தமிழ் அரசுக் கட்சியின் செயலாளரிடம் தான் அப்போது ‘சுக்கான்’ இருந்தது. அவர் பல சமயங்களில் செயற்பட்ட விதம் விமர்சனங்களுக்குரியதாகவும் காணப்பட்டது.

அதேநிலை தான் இப்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிலும் காணப்படுகிறது. புளொட் அமைப்பு ராகவனை செயலாளராக கொண்டு பதிவு செய்து வைத்திருந்த கட்சியைத் தான் புதிய கூட்டணி தத்தெடுத்திருக்கிறது.

எனவே, ராகவன் தான் கூட்டணியின் செயலாளராக இயங்கப் போகிறார். அவர் தான் தேர்தல் திணைக்களத்துடன் தொடர்புகளை வைத்துக் கொள்வார்.

அவரே, வேட்புமனுக்களில் கையெழுத்திடுவார்.  கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்களை அனுப்பி தகுதியிழப்பு செய்யும் அதிகாரம் கொண்டவராகவும் இருப்பார்.

இதனைக் கருத்தில் கொண்டு தான், சி.வி.விக்னேஸ்வரன் புதிய கட்சியை தொடங்கிய போது, அதன் செயலாளர் நாயகம் பதவியை தன்னுடன் வைத்துக் கொண்டார்.

முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கை அது.

ஆனால், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில், இணைத்தலைவர்கள் முடிவுகளை எடுத்தாலும், கட்சியின் செயலாளர் என்ற வகையில் புளொட் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சுழற்சி முறையில் தலைவர் பதவியை பங்கிடவுள்ளதாக, அறிவித்திருந்த செல்வம் அடைக்கலநாதன் இப்போது இணைத் தலைவராக மாத்திரம் இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

இங்கு புளொட்டுக்கு எந்த இழப்பும் இல்லை. ஏனென்றால் அதற்கு கட்சியில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய செயலாளர் பதவி இருக்கிறது.

இந்த இடத்தில் ஏமாந்து போனது, செல்வம் அடைக்கலநாதனும் அவரது தூரநோக்கற்ற அரசியல் உத்தி வகுப்பும் தான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிதைவுக்கு, தமிழ் அரசுக் கட்சிக்கு உள்ள அதே பொறுப்பு ரெலோவுக்கும் இருக்கிறது. 

ரெலோவின் கடந்த சில ஆண்டு செயற்பாடுகள், சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் போன்ற அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களையே வெளியேறும் நிலைக்குத் தள்ளியது என்பதை மறுக்க முடியாது.

இவ்வாறான நிலையில்,  ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினால், அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வகித்த பாத்திரத்தை வகிக்க முடியுமா, அதற்கு மக்களாதரவு கிடைக்குமா என்பதை, வரும் தேர்தல்களின் மூலம் தான் தெரிந்து கொள்ள முடியும்.

எனினும், தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தலைமைகள் மத்தியில் காணப்படும், அரசியல் வெறுமையும், வரட்சியும், தூர நோக்கற்ற செயற்பாடும், கட்சிகள், கூட்டணிகளின் எண்ணிக்கையைத் தான் அதிகமாக்கிக் கொண்டிருக்கிறதே தவிர, தமிழ்த் தேசிய அரசியலின் முன்னேற்றத்துக்கோ, தமிழர் உரிமைகளை வென்றெடுக்கும் பயணத்தின் முன்னேற்றத்துக்கோ துணையாக அமையவில்லை என்பது தான் உண்மை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆந்திராவில் பொது - தனியார் கூட்டாண்மையில்...

2025-11-10 11:01:05
news-image

போலித் தகவல்களுக்கு எதிரான போர்க்களத்தில் லித்துவேனியாவின்...

2025-11-10 09:43:55
news-image

வலுவற்ற அரச எதிர்ப்புக் கூட்டு

2025-11-09 16:41:00
news-image

கடற்படையை பலப்படுத்துகிறதா ஐ.நா.?

2025-11-09 15:57:54
news-image

வால் அறுந்த பட்டமாய் முஸ்லிம் கட்சிகள்

2025-11-09 15:52:30
news-image

மனம் திறந்த உரையாடலே ஐக்கியத்தை வளர்க்கும்

2025-11-09 14:56:09
news-image

தொழிலாளர் வேதன முன்மொழிவுகள் அமுல்படுத்தப்படுமா?

2025-11-09 14:34:13
news-image

கேள்விக்கு இலக்காகும் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கை

2025-11-09 14:31:32
news-image

இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட வடபுல முஸ்லிம்களின்...

2025-11-09 16:13:18
news-image

பலஸ்தீன இனப்படுகொலைகளும் காஸா அழிவும்

2025-11-09 16:12:58
news-image

நியூயோர்க்கில் முஸ்லிம் மேயர்

2025-11-09 12:36:03
news-image

சுற்றுலாவும் தூயமின்சக்தியும்

2025-11-09 12:16:16