சிவலிங்கம் சிவகுமாரன்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 74 ஆவது பிறந்த நாள் கடந்த 20 ஆம் திகதியாகும். இவரது பிரத்தியேக செயலாளராக விளங்கிய சுகீஸ்வர பண்டார, கோட்டாபயவின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆங்கில வார இதழுக்கு சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தார். தனது பத்திக்கு அவர் கொடுத்திருந்த தலைப்பு தான் ‘வரலாற்றால் அநீதி இழைக்கப்பட்ட ஜனாதிபதி’.
‘அரகல’ போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை நெருங்கிக்கொண்டிருக்கும் தறுவாயில், மாளிகையின் உள்ளே ஜனாதிபதியுடன் இருந்த சிலரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதித் தருணங்களில் உள்ளே என்ன நடந்தது என்பதை அவர் தனது எழுத்தில் கொண்டு வந்திருக்கின்றார்.
‘நீல நிற மேற்சட்டையும் கருப்பு காற்சட்டையும் அவர் அணிந்திருந்தார். தனது அலுவலகத்தின் இருக்கையில் அமர்ந்திருந்த அவர் எந்தவித உணர்ச்சிகளையும் வெளியே காட்டாமல் ஒரு அமைதியான தீவைப் போன்று இருந்தார். அடுத்து அவர் என்ன உத்தரவுகளைப் பிறப்பிக்கப் போகின்றார் என நானும் ஏனையோரும் ஆவலோடு எதிர்ப்பார்த்த வண்ணம் இருந்தோம். ஜனாதிபதி மாளிகையை நெருங்கும் போராட்டக்காரர்களின் நடவடிக்கைகளை நாம் நிமிடத்துக்கு நிமிடம் பெற்றுக்கொண்டிருந்தோம்.
ஜுலை 9 ஆம் திகதி வரலாற்றில் முக்கியமானதொரு நாள் என்று குறிப்பிட்டுள்ள சுகீஸ்வர பண்டார, அந்த நாளில் அமெரிக்க சுதந்திர பிரகடனம் அறிவிக்கப்பட்டமையையும் (1776) ஆபிரிக்க ஒன்றியம் உருவானதையும் (1963) ஒப்பிட்டு, அதே போன்றதொரு தினமான 2022 ஆம் திகதியோ இலங்கையில் என்ன இடம்பெற்றது என்பதை கூறுகிறார்.
‘அனைத்து இலங்கையர்களின் மனங்களிலும் வன்முறை பொறிக்கப்பட்ட நாளாக அது மாறியிருந்தது. சட்டத்தை மதிக்காத ஒரு மக்கள் கூட்டம் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு அவரை பதவி விலகி போகும்படி கட்டாயப்படுத்தியது. பின்பு பாதுகாப்பு தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த கூட்டத்தினர் அங்குள்ள உடைமைகளுக்கு பெரும் சேதம் விளைவித்தனர்.
இந்த நிகழ்வுகள் பற்றிய சம்பவங்கள் பதிப்புகள் ஏற்கனவே இங்கேயும் வெளிநாடுகளின் புத்தகங்களுக்கும் வரலாறாக போய் விட்டிருந்தன. ஆனால் ஜனாதிபதி கோட்டாபய பற்றிய சொல்லப்படாத கதைகள் இன்னும் வெளிவராமலுள்ளன. அவர் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறும் நேரத்தில் என்ன நடந்தது என்பது இது வரை எவராலும் சொல்லப்படாததாகவே உள்ளது. கடைசி நிமிடம் வரை ஜனாதிபதியுடன் இருந்த நபர்களில் நானும் ஒருவன் என்பதால் அவை இன்னும் என மனதில் பதிந்துள்ளன என்கிறார் பண்டார.
மாளிகைக்கு வெளியே போராட்டக்காரர்களின் கூச்சல்கள் அதிகரிக்க அதிகரிக்க அங்கிருந்த இராணுவ அதிகாரிகள் தமது பொறுமையை இழந்திருந்தனர் என்று கூறும் சுகீஸ்வர, ஒரு கட்டத்தில் இராணுவ அதிகாரிகள் ஜனாதிபதியை நோக்கி, ‘ ஜனாதிபதி அவர்களே இந்த கலகக்காரர்களை சுடுவதற்கு எமக்கு உத்தரவு தாருங்கள்….ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனாதிபதியை இவ்வாறு பொறிக்குள் சிக்க வைக்க முடியாது’ என்று கூறியதாக தெரிவிக்கிறார்.
முதல் தடவையாக மெளனம் கலைத்த ஜனாதிபதி கோட்டாபய, உங்களுக்கு என்ன பைத்தியமா எனக்கு வாக்களித்து ஆட்சிக்கு கொண்டு வந்தவர்கள் இவர்கள். இவர்களை எப்படி சுட முடியும் என்று கோபத்தோடு கேட்டிருக்கிறார்.
ஒரு இராணுவ வீரராக கடினமான முடிவுகளை எடுக்க வல்லவர் என்ற பெருமை கொண்ட அவர் கோட்டா கோ கிராமத்தை கலகக்காரர்கள் அமைத்த போதே அதை அகற்றுவதற்கு மறுத்து விட்டார். தனது மீரிஹான இல்லம் தாக்கப்பட்ட போதும் அவர் மிகக் குறைவான படைகளையே பாதுகாப்புக்கென பயன்படுத்தினார்.
அவரது இந்த சகிப்புத்தன்மை கொண்ட மனப்பான்மையே சட்டத்தை மீறுபவர்கள் மீது அவர் தண்டிக்கும் வகையில் செயற்பட மாட்டார் என்ற முடிவை எடுக்கத் தூண்டியது என்கிறார் அவரது பிரத்தியேக செயலாளர்.
துப்பாக்கிச்சூடு நடத்தும் படி இராணுவத்தினருக்கு உத்தரவிட்டு எவருக்கும் காயங்கள் ஏற்படுவதற்கு இடமளிக்க விரும்பாத அவர் மாளிகையை விட்டு வெளியேற முடிவு செய்தார். ஆனால் மறுபக்கம் உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் அவரை ஒரு சர்வாதிகாரியாகவும் ஏதேச்சதிகாரம் கொண்டவராகவும் சித்திரித்து தாக்கத் தொடங்கின.
அவர் வெளியேறும் போது அங்கிருந்த மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு கூறிய வார்த்தைகள் இன்னும் நினைவிருக்கின்றன….’நான் சென்ற பிறகும் நீங்கள் இங்கேயே இருக்க வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட சொத்து அல்ல. இது அரசின் சொத்து. இங்கே எதுவும் சேதமடையாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்’ என்று அவர் கூறினார்.
கொரோனா தொற்றுக்கு முன்னரே இலங்கையானது பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க ஆரம்பித்து விட்டது என்றும் கூறும் சுகீஸ்வர பண்டார, அதற்கு கோட்டாபாய ராஜபக்ச பலிகடாவாகி விட்டார் அல்லது பலிகடாவாக்கி விட்டனர் என்கிறார்.
இத்தனை மாதங்கள் கழித்து திடீரென சிலர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மிகவும் நல்லவர் என்று புகழ் பாட தொடங்கியிருப்பது எதற்கு என்று தெரியவில்லை. ஏனென்றால் இடம்பெற்ற சம்பவங்களுக்கு தன்னிலை விளக்கம் கொடுக்க இது வரை கோட்டாபய எந்த பொது மேடைகளுக்கும் வரவில்லை. அதை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும்.
எனினும் தற்போது ரணிலுக்கும் மொட்டு கட்சிக்குமிடையே ஒரு பனிப்போர் நிலவி வருவதை அனைவரும் அறிவர். நாடாளுமன்றத்தை எப்போதும் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி ரணில் கொண்டிருக்கின்றார். நாட்டு மக்கள் இன்னும் மஹிந்த அணியினருக்கு எதிரான போக்கையே கொண்டிருக்கின்றனர்.
பொதுத் தேர்தலொன்று இடம்பெறுமாயின் நிச்சியமாக மொட்டு கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களை மக்கள் நிராகரிப்பர் என்பதே யதார்த்தம். இந்நிலையில் மீண்டும் பாராளுமன்றம் வரும் ஆசை கோட்டாபயவுக்கு இல்லாமலில்லை. தனது பக்க நியாயத்தை அவர் பேசுவதற்கு ஒரு அதிகார பீடம் அவசியம். எனவே அவர் அதற்கு காய் நகர்த்துகின்றாரோ தெரியவில்லை.
‘கோட்டாபய எப்போதும் தனிமையை விரும்புபவர். ஒரு மூலையில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருப்பதை விரும்புபவர். அவரது கொள்கைகளைப் பற்றி அறியாதவர்கள் அவரை குடும்பத்துடன் இணைத்துக் கொண்டனர். ஆளுமை ரீதியாக அவர் தனது சகோதரர்களிடமிருந்து வேறுபட்டவர். தனது உறவினர்களுடன் இருக்கும் போது கூட மகிழ்ச்சியடைவதில்லை.
அவருடன் நெருங்கி பணியாற்றியவன் என்ற வகையில் நான் கூறுவதென்னவென்றால் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்ற விடயம் ஒரு நாள் வெளிவரும். ஒரு நாள் உண்மை வெளிவரும் என நான் நம்புகிறேன்…… இவ்வாறு தெரிவித்துள்ளார் அவரது பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார.
கோட்டாபய நல்லவரா கெட்டவரா என்ற ஆராய்ச்சி இப்போது தேவையற்ற ஒன்று தான். ஆனால் அவர் ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்த பிறகு அவரைப்பற்றிய நல்ல விடயங்களை இது வரை மொட்டு கட்சியினர் மறந்தும் கூட சொல்லவில்லை.
மாறாக மஹிந்தவை உயர்த்தியும் கோட்டாபயவை ஆளுமை இல்லாத ஒருவராகவே சித்திரித்து வருகின்றனர். மீண்டும் கோட்டாபய அரசியல் களம் கண்டு விடக்கூடாது என்ற எச்சரிக்கையே அது.
அவரின் மோசமான நிர்வாகத்தினாலேயே இன்று மஹிந்த தரப்பினர் மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து நிற்கின்றனர் என்பதையும் மறுக்க முடியாது.
ஆனால் சுகீஸ்வர பண்டார போன்றவர்கள் என்னதான் கோட்டாபய நல்லவர் என்றும் அவரது சகோதரர்கள் போன்று ஊழல் குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்படவில்லை என்று அர்த்தப்பட கத்தினாலும் மக்கள் காதில் போட்டுக்கொள்ளப் போவதில்லை.
ஏனென்றால் கோட்டாபயவும் சகோதரர்களில் ஒருவர் தானே ! அவர் வரலாற்றால் அநீதி இழைக்கப்பட்டவராக இருக்க முடியாது. வரலாற்றில் சில அநீதிகளுக்கு துணை போன ஜனாதிபதியாகவே என்றும் கருதப்பட இடமுண்டு.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM