மக்களின் உண்மையான கவலைகள் 

Published By: Vishnu

25 Jun, 2023 | 11:59 AM
image

ஏ.எல்.நிப்றாஸ்  

ஒரு நாட்டின் அரசியல், பொருளாதார மற்றும் சமூகக்குறிகாட்டிகளை உயர்ந்த மட்டத்தில் பேணுவதற்கு அல்லது அவ்வாறானதொரு தோற்றப்பாட்டை வெளியுலகுக்கு காண்பிப்பதற்கு அரச இயந்திரம் முழுமூசசாக செயற்படுவது உலக வழக்கம் தான். 

கௌரவமாக வாழ விரும்புகின்ற குடும்பங்கள் பொதுவாக தமது சொந்தப் பிரச்சினைகள், கஷ்டங்களை ஒரு குறிப்பிட்ட கட்டம் வரைக்கும் பக்கத்து வீட்டுக் காரருக்கோ, உறவினருக்கோகூட சொல்ல விரும்புவதில்லை. அதுபோலத்தான் இதனையும் கொள்ள வேண்டியிருக்கின்றது. 

ஆனால், இதுவெல்லாம் ஒருகட்டம் வரைதான் சாத்தியப்படும். நாட்டுப் பிரச்சினையும், வீட்டுப் பிரச்சினையும் ஒரு கட்டத்தில் வெளிப்பட்டு விடும். இந்த நிலைமை இப்போது இலங்கையில் ஏற்பட்டுள்ளதை காண்கின்;றோம். 

‘இலங்கையில் ஒருசாதாரண குடும்பத்தின் சராசரி மாதச் செலவு 76ஆயிரத்தை தாண்டியுள்ளதாக’ பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் இத்துறைசார் வல்லுனருமான அசங்க அதுகோரள சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளார். 

இதில் 53சதவீதமான தொகை (40632 ரூபா) உணவுக்காக முழுமையாக செலவிடப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.நா. உணவு மற்றும் விவசாய அபிவிருத்தி அறிக்கையை மேற்கோள்காட்டி அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

இது இவ்வாறிருக்க, இலங்கை மத்திய வங்கியானது ஒரு தனிநபரின் வருமானம் 13ஆயிரத்து 777 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தனது வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நாட்டில் மக்கள் படுகின்ற கஷ்டங்களை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் புள்ளி விபரங்களாக இவற்றைக் கொள்ளலாம். 

2019ஆண்டு ஏப்ரலுக்கு பின் இலங்கைப் பிடித்த துரதிஷ்டகாலம் இன்னும் நீங்கிச்செல்லவில்லை. அதிலும் குறிப்பாக கொவிட் 19வைரஸ் தொற்றுக்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் அது ஏற்படுத்திய விளைவுகளும் இன்று ஒவ்வொரு குடும்ப அலகிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தி நிற்கின்றன. 

கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக நாம் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றியே அதிக நேரம் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றோம். சர்வதேச உதவிகள், சர்வதேச நாணய நிதிய கடனுதவிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு முன்னெடுப்புகள் பற்றி தினந்தோறும் செய்திகள் வெளியாகின்றன. 

நேரடியாக உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்படுகின்ற மாற்றத்தை விட டொலரின் விலையில் ஏற்படுகின்ற மாற்றம் குறித்து ஒவ்வொரு பொதுமகனும் கவனம் செலுத்துமளவுக்கு நிலைமைகள் மாறியிருக்கின்றன என்றும் சொல்லலாம். 

வெளிப்படையானதும் மூடிமறைக்க முடியாததுமான இத்தனை பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கூட சர்வதேச ஆதிக்க, அரசியல் நகர்வுகளும், உள்நாட்டு அரசியல் காய்நகர்த்தல்களும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. 

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல், மாகாண சபை தேர்தல், இனப்பிரச்சினை தீர்வு, 13ஆவது திருத்தம் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் அரசியல் களத்தில் நிரம்பிக் கிடக்கின்றன. அரசாங்க நிறுவனங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் காணி ஆக்கிரமிப்பு மற்றும் தொல்லியல் விவகாரங்களும். இதன் நடுவே ஜெனிவா கூட்டத்தொடரும் ஆரம்பமாகி மீண்டும் அதேபல்லவிகள் பாடப்படத் தொடங்கியுள்ளன. 

இதுவெல்லாம் சரிதான்! அதாவது, தேசிய மட்டத்திலான அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களில் அக்கறை செலுத்துவதும் நீண்டகால பிரச்சினைகளை தீர்ப்பதில் தொடர்ச்சியாக முனைப்புக் காட்டுவதும் வரவேற்கத்தக்க விடயமே என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 

ஆனால், இவ்வாறான பெரிய விவகாரங்களின் ஆழ அகலங்கள் கணிசமான மக்களுக்கு தெரியாது. அத்துடன் உண்மையிலேயே சாதாரண மக்களின் நிகழ்கால பிரச்சினையும் கவலையும் இவையல்ல. அல்லது, இவற்றை விட அவர்கள் முன்னுரிமை அடிப்படையில் முக்கியத்துவம் கொடுக்கின்ற வேறு பிரச்சினைகள் உள்ளன

இன்று நாட்டிலுள்ள முக்கால்வாசி நடுத்தர, கீழ்-நடுத்தர, வறிய மக்களின் கவலை அவர்களது வாழ்வாதாரம், வாழ்க்கைச் செலவு, குடும்பத்தின் பொருளாதார கஷ்டம் பற்றியதாகும்.இதனையே இக்கட்டுரை அழுத்தமாக குறிப்பிட விளைகின்றது. 

நாட்டு மக்கள் தேசிய முக்கியத்துவமான விவகாரங்கள், நகர்வுகள், மாற்றங்களில் அக்கறை இல்லாமல் இருக்கின்றார்கள் என்பது இதன் அர்த்தம் அல்ல. மாறாக, இன்று ஒவ்வொருவரும் எதிர்கொண்டுள்ள சொந்த நெருக்கடிகள், கவலைகள் அவர்களை மேற்குறிப்பிட்ட தேசிய விவகாரங்களில் கவனத்தை குவிக்க விடாது என்பதாகும். 

நாளைக்கு செலவை எவ்வாறு சமாளிப்பது? என்ன கறி வாங்குவது? பிள்ளைகளின் செலவுகளை எவ்வாறு ஈடுகட்டுவது? கடன் தவணைக் கொடுப்பனவுகளை எவ்வாறு  செலுத்துவது? மருத்துவச் செலவுகளை எவ்விதம் ஈடுசெய்வது? இம்மாத செலவுகளுக்கெல்லாம் தேவையான பணத்தை எங்கிருந்து பெற்றுக் கொள்வது? என்ற ஆயிரத் தெட்டு கேள்விகளுடன்தான் இலங்கையர் ஒவ்வொருவரின் பொழுதுகளும் தொடங்குகின்றன – முடிகின்றன. 

ஆகவே, சொந்தப் பிரச்சினைகள் தலைக்கு மேலால் போய்க்கொண்டிருக்கின்ற போது, மக்கள் முழு நேரமாக நாட்டின் கடன் மறுசீரமைப்பு, டொலர் விலை, அரசியல் நெருக்கடி, தேர்தல், இனப் பிரச்சினை, அரசியல் யாப்பு, பற்;றியெல்லாம் நாள் முழுக்க சிந்தித்துக் கொண்டிருப்பது சாத்தியமில்லை என்பதே நிதர்சனமாகும்.  

அரசாங்கம் என்ன கூறினாலும், ‘சிறு தொகைப் பணத்தை வைத்து வாழ்க்கை நடத்த முடியும்’ என்று சில அரசியல்வாதிகள் முட்டாள்தனமான அறிக்கைகளை விட்டாலும், யதார்த்தம் தலைகீழாக உள்ளது என்பது கவனிப்பிற்குரியது. அதனையே பேராசிரியர் அத்துகோரள மற்றும் மத்திய வங்கியின் மேற்குறி;ப்பிட்ட புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. 

நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருக்கின்றது. அதற்காக ஜனாதிபதிக்கு  ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். ஆயினும், நாட்டின் பொருளாதாரம் மீட்சி பெறுவதான ஒரு தோற்றப்பாடு ஏற்பட்டாலும் கூட நிஜத்தில் ஒவ்வொரு குடும்பமும் எதிர்கொள்கின்ற நெருக்கடிகளில் இன்னும் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.

கிட்டத்தட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. அதுமட்டுமன்றி: சவர்க்காரம், சலவைத் தூள், தேயிலை, பால்மா, பிஸ்கட், நூடில்ஸ், கோதுமை மா என ஏனைய தினசரிப் பாவனைப் பொருட்களின் விலைகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளன. 

நான்கைந்து அத்தியாசியப் பொருட்களின் விலை உயர்வு பற்றித்தான் நாம் அதிகம் பேசுகின்றோம். ஆனால், அன்றாடம் பயன்படுத்தும் பல நூற்றுக்கணக்கான பொருட்களின் விலைகள் அடிக்கடி அதிகரிக்கப்படுவது பற்றி யாரும் கண்டு கொள்வதில்லை. இவ்வாறு விலையை உயர்த்துகின்ற பல்தேசியக் கம்பனிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் அரச இயந்திரம் எடுப்பதும் இல்லை. 

அதேபோல், பிரதான கறி வகைகள், மரக்கறிகள், பலசரக்குப் பொருட்களின் விலைகளும் உயாந்துள்ளன. ஆடைகள், அத்தியாவசியமல்லா பொருட்களை கொள்வனவு செய்வதே முடியாத காரியமாகியுள்ளது. இதேவேளை, மின்சாரக் கட்டணம், குடிநீர்க்கட்டணம், தொலைபேசிக் கட்;;டணங்கள், போக்குவரத்து கட்டணங்கள் தலைக்கு மேலால் போய்க் கொண்டிருக்கின்றன. 

அரசியல்வாதிகள், வியாபாரிகள், பணம் படைத்தோர், கொழுத்த சம்பளம் பெறுவோர் மற்றும் வெளிநாடுகளில் உழைப்போரின் குடும்பங்களில் இவற்றின் தாக்கம்  குறைவாக இருக்கலாம் ஆனால், நடுத்தர வர்க்கத்திற்குக் கீழுள்ள அனைத்து குடும்பங்களிலும் இது; கணிசமாக உணரப்படுகின்றது. 

ஐ.நா.வும் மத்திய வங்கியும் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தரவுகள் இதற்கு நல்ல எடுத்துக் காட்டாகும். அதாவது நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பத்தில் 40ஆயிரம் நிரந்தர வருமானம் கிடைத்தாலும் ஒருமாத உணவுச் செலவை சமாளிக்க முடியாது என்பது தெளிவாகின்றது. 

அப்படியென்றால், ஏனைய செலவுகளை சமாளிப்பது எவ்வாறு? 40ஆயிரம் கூட வருமானம் இல்லாத குடும்பத் தலைவர்கள் தமது பிள்ளைகளுக்கு உணவு கொடுப்பதும் அக்குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் செல்வதை தடுப்பதும் எவ்வாறு என்று பலகேள்விகள் எழுகின்றன.  

இந்தப் பின்னணியில், கடன் மறுசீரமைப்பு, நாணய மாற்றுவிகித உபாயங்கள், வெளிநாட்டு உதவிகள், மூலோபாய திட்டங்களை மேற்கொள்வதன் ஊடாக தேசிய பொருளாதார குறிகாட்டிகளில் முன்னேற்றத்தைக் கொண்டுவரலாம் என்றும் அதன் பலனை ஒவ்வொரு குடும்பமும் காலஓட்டத்தில் அனுபவிக்க முடியும் என்றும் அரசாங்கம் கூறலாம்.  

அந்த நம்பிக்கை இன்னும் மக்களுக்கும் இருக்கின்றது. ஆனால், அதுவரைக்கும் இறங்கு முகமாக சென்று கொண்டிருக்கின்ற குடும்பப் பொருளாதார நிலைமைகளை சமாளிப்பது எவ்வாறு என்பதுதான் ஒவ்வொரு குடும்பத் தலைவனிடமும் உள்ள வினாவாகும். 

எனவே தேசிய விவகாரங்கள், நீண்டகாலப் பிரச்சினைகளை கையாளுகின்ற சமகாலத்தில் சாதாரண மக்களின் குடும்பக் கஷ்டங்கள் தீர்வதற்கும் அரசாங்கம் வழி செய்ய வேண்டும். அதற்கு எதிர்கட்சிகள் துணைநிற்க வேண்டும். 

அதைவிடுத்து, ‘கடல் வற்றினால் கருவாடு தின்னலாம்’ என்ற நம்பிக்கையை மட்டும் பிரசாரம் செய்து கொண்டு, கொக்குகளை (அதாவது மக்களை) காத்திருக்கச் சொல்வதில் தார்மீகம் இல்லை.  எப்போதாவது ஒருநாள் பட்டுவேட்டி கிடைக்கும் என்ற கனவில் மூழ்கி, இப்போது கோவணத்தையும் இழந்து விட முடியாது!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் கத்தாரில் அமெரிக்காவின் அல் உதெய்த்...

2025-06-24 12:12:47
news-image

நீடித்திருக்கக்கூடிய மாற்றத்துக்கான கருத்தொருமிப்பை கட்டியெழுப்புதல்

2025-06-24 09:11:11
news-image

அத்திடிய பறவைகள் சரணாலயத்தின் தூய்மை, பராமரிப்பு...

2025-06-23 16:19:39
news-image

ஏழு பி-2 குண்டு வீச்சு விமானங்கள்...

2025-06-23 12:53:08
news-image

யு.எஸ்.எயிட். நிறுத்தத்தால் சமாதானப் படையின் பணிகள்...

2025-06-23 12:50:05
news-image

காற்றில் பறந்த அரசியல் கொள்கைகள்

2025-06-22 17:08:25
news-image

கேட்டும் கிடைக்காத நீதி

2025-06-22 16:34:30
news-image

தமிழ் அரசின் கலைந்து போன கனவு

2025-06-22 16:31:36
news-image

ஈரான் மீதான போர் உணர்த்தும் உண்மை

2025-06-22 16:31:16
news-image

தலைநகரில் அநுரவிடமும் மலையகத்தில் ஜீவனுடனும் தோல்வியுற்ற...

2025-06-22 16:30:52
news-image

யுத்தக் குற்றவாளி நெதன்யாகுவால் ஈரான் மீது...

2025-06-22 15:28:59
news-image

காஸாவைத் தொடர்ந்து ஈரான்

2025-06-22 15:21:12