இந்தியாவின் 68 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தேசிய கொடி ஏற்றி, அணி வகுப்பு மரியாதையை ஏற்றார்.

தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே அரசு சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டும் காந்தி சிலை அருகே இன்று குடியரசு தின விழா நடைபெற்றது.

காலை 8.00 மணியளவில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

முன்னதாக போர் நினைவுச் சின்னத்திற்கு சென்ற முதலமைச்சர், உயிர்நீத்த இராணுவ வீரர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து முப்படைத் தளபதிகளும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். குடியரசு தின நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். 

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் குடியரசு தின விழாவின்போது தேசியக்கொடியை கவர்னர் ஏற்றி வைப்பதுதான் வழக்கம். மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதால் அவர் குடியரசு தினத்தன்று மராட்டிய மாநிலத்தில் தேசியக் கொடி ஏற்றுகிறார். எனவே, இன்று தமிழகத்தில் நடந்த விழாவில் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக தேசியக்கொடி ஏற்றினார். 

முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து தொடர்ந்து முப்படையினரின் பீரங்கி, சிறிய போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்கள் போன்றவை ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. தமிழக பொலிஸ் பிரிவுகளின் அணிவகுப்பு, தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை விளக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 

குடியரசு தின விழாவையொட்டி கடற்கரை சாலை பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் வன்முறை ஏற்பட்டதால் குடியரசு தினவிழாவின்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வகையில், பொலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.