உலகில் வேகமான மனிதன் என வர்ணிக்கப்படும் ஜாமெக்காவின் குறுந்தூர ஓட்ட ஜாம்பவான் உசைன் போல்ட் பங்கு பற்றிய அஞ்சல் ஓட்ட போட்டியில் பங்கு பற்றிய வீரர் ஒருவர் மருத்துவ சோதனையில் தோற்றதால் குறித்த குழு வென்ற தங்க பதக்கத்தை திருப்பி தரும் படி சர்வதேச ஒலிம்பிக் குழு கேட்டுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பற்றிய வீரர்களின் ஊக்கமருந்து பாவனை பற்றிய மீள் பரிசோதனை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பரிசோதனையில் 4X100 மீற்றர் அஞ்சல் ஓட்ட போட்டியில் ஜமேக்கா சார்பாக பங்கு பற்றிய உசைன் போல்ட் உள்ளிட்ட குழுவினரில் நெஸ்டா கார்ட்டர் ஊக்கமருந்து பவித்துள்ளமை இனம்காணப்பட்டுள்ளது. இதனால் அவர் பங்கு பற்றிய குழுவினர் வென்ற தங்கப்பதக்கத்தை திருப்பி தரும்படி சர்வதேச ஒலிம்பிக் ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

இதனால் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் தங்க பதக்கம் வென்றவர், எனும் சாதனை பெயரை உசைன் போல்ட் இழக்க வேண்டியுள்ளது. அத்தோடு 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய மீள் பரிசோதனைகளையும் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யா வீரர்களில் அதிகமானோர் ஊக்கமருந்து பாவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அவர்கள் வென்ற பதக்கங்கள் பறிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜமேக்க வீரர்களின் பதக்கம் பறிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.