( ரி.விரூஷன்)

தலையின் பின்பகுதியில் பலமாக தாக்கப்பட்டதால் மூளை சிதைவடைந்தமையே மரணத்திற்கான காரணமென பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியிலுள்ள வீடொன்றில் கொள்ளையிட வந்தவர்களால் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணொருவர்  (வயது 27) மிகக் கொடூரமான முறையில் அடித்துக்கொலை செய்யப்பட்டிருந்தார்.

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றது.

இதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் நேற்று கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் தலையில் பலமாக தாக்கப்பட்டதையடுத்து மூளை சிதைவடைந்தமையே இறப்பிற்கான பிரதான காரணமெனவும் கழுத்தில் வெட்டுக்காயம் காணப்படுவதாகவும் தோள் மற்றும் முதுகுப்பகுதி எலும்புகள் முறிவடைந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அறையில் பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அடையாள அணிவகுப்பிற்காக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதிவரை சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.