பெப்சி மற்றும் கொக்கா கோலா ஆகிய குளிர்பானங்களை எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் விற்பனை செய்ய வேண்டாம் என, தமிழகத்தின் இரு பிரதான வணிக அமைப்புகள் தமது அங்கத்தவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

தமிழ்நாடு வணிகர் சங்கம் மற்றும் தமிழ்நாடு வர்த்தகர்களுக்கான அமைப்பு ஆகியனவே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன. என்றபோதும், குறித்த குளிர்பானங்கள் மீதான மக்களின் விருப்பங்கள் இந்தக் கோரிக்கையை குறித்த காலத்தினுள் நடைமுறைப்படுத்திவிடுமா என்ற சந்தேகமும் முளைத்துள்ளது.

ஜல்லிக்கட்டு மீதான தடை விதிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் இயங்கிவரும் பன்னாட்டு நிறுவனங்கள் மீதான அதிருப்தியை தமிழக மக்கள் மீது ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து குறித்த நிறுவனங்களின் உற்பத்தியைப் பயன்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கைகளும் சமூக வலைதளங்கள் ஊடாகவும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக மெரினாவில் திரண்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெப்ஸி, கோக் போன்ற பானங்களைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக மக்களுக்கு பகிரங்கமாக கோரிக்கைகள் விடுத்திருந்தனர். இதையடுத்தே இந்த குளிர்பானங்களை விற்க வேண்டாம் என மேற்படி வணிக நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமது அமைப்புகளில் சுமார் பதினைந்து இலட்சம் உறுப்பினர்கள் இருப்பதாகவும், இவர்கள் அனைவரும் தமது வேண்டுகோளுக்கு இணங்கி நாளை முதல் பெப்சி மற்றும் கொக்கா கோலா ஆகிய பானங்களை விற்கத் தடை விதிப்பார்கள் எனத் தாம் நம்புவதாகவும் இவ்வமைப்பினர்  தெரிவித்தனர்.