(நெவில் அன்தனி)
ஸிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் பி குழுவில் இடம்பெறும் டுலீப் மெண்டிஸின் பயிற்றுவிப்பிலான ஓமான் இரண்டாவது வெற்றியை ஈட்டி சுப்பர் 6 சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை சிறுக சிறுக அதிகரித்துவருகிறது.
அயர்லாந்துக்கு எதிராக முற்றிலும் எதிர்பாராத வெற்றியை ஈட்டிய ஓமான், புதன்கிழமை (21) நடைபெற்ற போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை 5 விக்கெட்களால் வெற்றிகொண்டது.
ஆக்கிப் இலியாஸ், உபாதைக்கு மத்தியில் ஷொயெப் கான், மொஹமத் நடீம் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் அயான் கானின் சிறப்பான துடுப்பாட்டமும் ஓமான் வெற்றிபெற உதவின.
புலாவாயோ அத்லெட்டிக் விளையாட்டரங்கில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஐக்கிய அரபு இராச்சியம் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்ப வீரர்கள் இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தபோதிலும் விரித்தியா அரவிந்த் (49), ரமீஷ் ஷாஹ்ஸாத் (38), அசிப் கான் (27) ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடியதன் பலனாக ஐக்கிய அரபு இராச்சியம் 29ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதனிடையே விரித்தியா அரவிந்த், ரமீஷ் ஷாஹ்ஸாத் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
தொடரந்து தடுமாற்றத்திற்கு மத்தியில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 32ஆவது ஓவரிலிருந்து விக்கெட்களை சீரான இடைவெளியில் இழந்த வண்ணம் இருந்தது. எனினும் 8ஆம் இலக்க வீரர் அயான் அப்ஸால் கான் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் 58 ஓட்டங்களைப் பெற்று தனது அணியை கௌரவமான நிலையில் இட்டார்.
பந்துவீச்சில் ஜெய் ஓடேத்ரா 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பிலான் கான் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பயாஸ் பட் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் 46 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 228 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஐக்கிய இராச்சியத்தைப் போன்றே முதல் 2 விக்கெட்களைக் குறைந்த ஓட்டங்களுக்கு இழந்த ஓமான், பின்னர் திறமையாகத் துடுப்பெடுத்தாடி வெற்றியீட்டியது.
ஆக்கிப் இலியாஸ் (53), ஷொயெப் கான் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 100 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது இலியாஸ் ஆட்டம் இழந்தார்.
மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 2 ஓட்டங்கள் சேர்ந்தபோது ஷொயெப் கான் 47 ஓட்டங்கள் பெற்ற நிலையில் தசை இழுப்பு காரணமாக வீரர்கள் அறைக்கு திரும்பினார்.
அணித் தலைவர் ஸீஷான் மக்சூத் 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
எனினும் மொஹமத் நடீம், அயான் கான் (41) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணி வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர்.
கான் ஆட்டம் இழந்த பின்னர் மீண்டும் துடுப்பெடுத்தாட வந்த ஷொயெப் கானுடன் மொஹமத் நடீம் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அடைய ஓமானுக்கு உதவினார்.
ஷொயெப் கான் 52 ஓட்டங்களுடனும் மொஹமத் நடீம் 50 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் ஜுனைத் சித்தீக், ரொஹான் முஸ்தபா ஆகிய இருவரும் தலா 31 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM