(எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்)
அரச நிதி முகாமைத்துவத்தை வெளிப்படைத் தன்மையுடன் பேணுவதற்கு எதிர்வரும் நாட்களில் பல சட்டமூலங்கள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். நாடு என்ற ரீதியில் தனித்து செயற்பட முடியாது.
சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் சிறந்த பாதை நோக்கி பயணிக்க வேண்டும் அதற்கு பரிந்துரைக்கப்பட்ட யோசனைகள் சட்டமாக்கப்பட வேண்டும் என பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பொருளாதார பாதிப்புக்கு பின்னரே நிதி முகாமைத்துவத்தில் வெளிப்படை தன்மையை பேணுவதற்கு சட்டங்கள் ஊடாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார பாதிப்புக்கு முன்னர் வெளிப்படை தன்மைக்கான சட்டங்களை இயற்றியிருந்தால் பாரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கலாம்.பாராளுமன்ற வரவு - செலவு திட்ட அலுவலக சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதை வரவேற்கிறோம்.
வரவு செலவு திட்டத்தை தயாரிப்பது தொடர்பில் இந்த பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்தின் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியல் தலையீடு இல்லாத வகையில் பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்தின் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.
பொருளாதார முன்னேற்றம் ,நிதி விவகாரத்தில் வெளிப்படை தன்மையுடன் செயற்பட விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.
வெளிப்படை தன்மையை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்துவது எமது பிரதான நோக்கமாகும்.வரலாற்று ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களை திருத்திக் கொண்டு முன்னேற்றமடைவது அத்தியாவசியமானது.
நிலையான பொருளாதார முன்னேற்றத்துக்கு குறுகிய கால அடிப்படையில் கடுமையான தீர்மானங்களை செயற்படுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு சமூக கட்டமைப்பில் காணப்பட்ட தன்மைக்கும்,தற்போதைய தன்மைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.
நாடு வழமை நிலைக்கு திரும்புகிறது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. ஆகவே குறுகிய அரசியல் நிலைப்பாட்டை தவிர்த்து அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
அரச நிதி முகாமைத்துவத்தை மீளாய்வு செய்வதற்கு பாராளுமன்ற வரவு செலவு திட்ட காரியாலயம் முக்கிய பங்கு வகிக்கும்.
நாடு என்ற ரீதியில் தனித்து செயற்பட முடியாது. ஆகவே சர்வதேச நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள சிறந்த சட்டங்களை நாமும் இயற்ற வேண்டும்.
அரச நிதி விவகாரத்தில் வெளிப்படை தன்மையுடன் செயற்படுமாறு சர்வதேச நாணய நிதியம்,பிரதான நிலை கடன் வழங்குநர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
பொருளாதாரப் பாதிப்பில் இருந்து முன்னேற்றமடைவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கவும்,முதலீட்டாளர்களை பாதுகாக்கவும் அமைச்சு மட்டத்தில் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதல் தவணை கடன் ஒத்துழைப்பை தொடர்ந்து ஆசிய அபிவிருத்தி வங்கி,உலக வங்கி உட்பட நிதி நிறுவனங்கள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளன.
நாடு என்ற ரீதியில் பொறுப்புடன் செயற்படுகிறோம்.பொருளாதார பாதிப்புக்கு நிலையான தீர்வு காண எடுத்த தீர்மானங்களை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது.
நிலையான மாற்றத்துக்கு தேவையான சட்டங்கள் இயற்றப்படும்.நடைமுறையில் செயற்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்புக்களின் பெறுபேறு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது.எதிர்வரும் ஓரிரு மாதங்களில் சந்தை உறுதிப்பாட்டை ஸ்திரப்படுத்த முடியும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண முடியும் என எதிர்க்கட்சியின் ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.
பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ சகல தரப்பினருக்கும் பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.
நெருக்கடியான சூழலில் அரசாங்கத்தை பொறுப்பேற்க தற்துணிவு இல்லாதவர்கள் தற்போது தேர்தல் பிரசார மேடைகளில் வீர வசனம் பேசுகிறார்கள்.
மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரசார மேடை கருத்துக்கள் நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
பொருளாதார பாதிப்பால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொருளாதார பாதிப்பின் பாரதூரத்தன்மையை விளங்கிக் கொள்ளாதவர்கள் தான் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக அடிப்படையற்ற கருத்துக்களை குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.
பொருளாதார முன்னேற்றத்துக்கு எதிர்வரும் நாட்களில் பல சட்டமூலங்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM