கொழும்பு கண்டி வீதியில், பேலியகொட, தலுகம பிரதேசத்தில் நேற்று பிற்பகல் பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு கண்டி வீதியில், தலுகம பிரதேசத்தில் நேற்று பிற்பகல்,   லொறி ஒன்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் விபத்துக்குள்ளானதையடுத்து, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி விட்டு செல்லும் போது, பிரிதொரு நபரினால் மோட்டார் வாகனத்தில் இருந்தவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்களை அங்கிருந்த போக்குவரத்து பொலிஸார் துரத்திச் சென்றுள்ளனர்.

இவ்வாறு துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீதும் அந்த நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால் காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை முதலில் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கான மோட்டார் வாகனத்தில் இருந்தவர் உடனடியாக அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள போதும் தற்போது அவர் பொலிஸாரின் பாதுகாப்பில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் விசேட பொலிஸ் பிரிவு மேற்கொண்டு வந்த விசாரணையில் பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்களை இனங் கண்டுள்ளனர்.

பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாகி பிரயோகம் இடம்பெற்று இருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.