உலக சம்பியன் ஆர்ஜென்டினா, இந்தோனேஷியாவுடன் இன்று மோதுகிறது

Published By: Sethu

19 Jun, 2023 | 01:40 PM
image

-ஆர்.சேதுராமன்-

உலக சம்பியனான ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி, இன்று திங்கட்கிழமை 19) இந்தோனேஷியாவுடன் மோதவுள்ளது.

ஜகர்த்தா நகரில் இலங்கை, இந்திய நேரப்படி இன்று மாலை 6.00 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.

ஆர்ஜென்டீன, இந்தோனேஷிய அணிகள் இதற்கு முன் ஒன்றையொன்று எதிர்கொண்டதில்லை. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது கால்பந்தாட்டப் போட்டி இதுவாகும். 

கடந்த டிசெம்பர் 18 ஆம் திகதி கத்தாரில் நடைபெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் பிரான்ஸை வென்ற பின்னர், ஆர்ஜென்டீனா பங்குபற்றவுள்ள 4 ஆவது சர்வதேச போட்டி இதுவாகும்.

உலகக் கிண்ணத்தின் பின்னர் பனாமாவை 2:0 கோல்கள் விகிதத்திலும் கியூராசோவை 7:0 கோல்கள் விகிதத்திலும் ஆர்ஜென்டீனா வென்றது. 

இறுதியாக கடந்த 15 ஆம் திகதி சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுடனான சினேகபூர்வ போட்டியில் லயனல் மெஸி தலைமையிலான ஆர்ஜென்டீன அணி 2:0 கோல் விகிதத்தில் விகிதத்தில் வென்றிருந்தது. அவ்வணி இறுதியாக விளையாடிய 10 போட்டிகளில் தோல்வியைத் தழுவவில்லை.

இதேவேளை, இந்தோனேஷிய அணி இறுதியாக விளையாடிய 11 போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரம் தோல்வியைத் தழுவியுள்ளது.

 கடந்த ஜனவரி மாதம் வியட்னாமுடனான போட்டியில் 2:0 விகித்தில் இந்தோனேஷியா தோல்வியுற்றது. அவ்வணி இறுதியாக கடந்த 14 ஆம் திகதி பலஸ்தீனத்துடன் மோதியது. போட்டி கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிவடைந்தது.

மெஸி விளையாட மாட்டார்

நடப்பு  உலக சம்பியனான ஆர்ஜென்டீன தமது நாட்டின் அணியுடன் தமது மண்ணில் போட்டியிடுவதைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். 

எனினும், இன்றைய போட்டியில் லயனல் மெஸி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

லயனல் மெஸி, லயனல் ஸ்கலோனி

லயனல் மெஸி,  ஏஞ்சல் டி மரியா, நிக்கலஸ் ஒட்டாமென்டி ஆகியோருக்கு இப்போட்டியிலிருந்த ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக ஆர்ஜென்டி அணியின் பயிற்றுநர் லயனல் ஸ்கலோனி கூறியுள்ளார்.

இவ்வறிப்பையடுத்து சமூக வலைத்தளங்களில் இந்தோனேஷிய ரசிகர்கள் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து இந்தோனேஷிய ரசிகர்கள் கவலை கொண்டுள்ளதை தான் அறிந்துள்ள போதிலும், இவ்வீரர்களுக்கு ஓய்வளிக்க வேண்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார். எனினும் ஆர்ஜென்டீனாவின் ஏனைய வீரர்களின் ஆட்டம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என தான் நம்புவதாகவும் லயனல் ஸ்கலோனிகூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right