தென் சீனக் கடலுக்கு சொந்தம் கொண்டாடும் விவகாரத்தில் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 தென் சீன கடல் தொடர்பாக பிலிப்பைனஸ், மலேசியா, தைவான் மற்றும்  வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே ஆக்கிரமிப்பு மோதல்கள் வலுப்பெற்றுள்ளன.

குறித்த கடல் பிராந்தியம் வர்த்தக முக்கியத்துவமிகு பகுதியென்பதால், தென் சீனக் கடல் சர்வதேச செயல்பாடுகளுக்கு உரிய பகுதி என்றும், அதற்கு சீனா சொந்தம் கொண்டாட முடியாது. என அமெரிக்கா எச்சரித்து வந்தநிலையில், குறித்த விவகாரத்தில் தங்களுக்கும், பிற நாடுகளுக்கும் இடையே நிலவும் பிரச்சினையில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என சீனா எச்சரித்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில்  தென் சீனக் கடல் விவகாரத்தில் முட்டுக்கட்டை ஏற்படுத்தினால் போருக்குத் தயாராக இருக்குமாறு அமெரிக்காவுக்கு சீனா கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தது.

குறித்த விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் குறிப்பிட்டுள்ளதாவது, "தென் சீனக் கடல் என்னைப் பொறுத்தவரை சர்வதேச செயல்பாடுகளுக்கு உரியது என்றே நான் நினைக்கிறேன். அதனை சீனா சொந்தம் கொண்டாட முடியாது. அதனால் அமெரிக்கா தொடர்ந்தும் தென் சீனக்கடல் பாதுகாப்பை உறுதி செய்யும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சீன் ஸ்பைசரின் கருத்து தொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹவா சுன்யிங் குறிப்பிட்டுள்ளதாவது 'தென் சீனக்கடலில், சீனா தனது இறையான்மையை நிலைநாட்டியே தீரும்.  அத்தோடு தங்கள் நாட்டின் உரிமைகளையும், நலன்களையும் உறுதி செய்யும்' எனக்கூறி அமெரிக்காவிற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.