ஆடத் தெரியாதவர்களின் மேடை 

Published By: Vishnu

18 Jun, 2023 | 06:19 PM
image

ஏ.எல்.நிப்றாஸ் 

பணம் நிரப்பப்பட்ட வங்கி ஏ.ரி.எம். மையங்களுக்கு முன்னால் கையேந்தி நிற்கும் யாசகர்களை இப்போதெல்லாம் அடிக்கடி காண நேர்வதுண்டு. இவர்களுள் சிலர் ஒரு காலத்தில் மிகவும் ‘நல்ல நிலையில்’ இருந்து, வங்குரோத்து அடைந்து, கேட்பாரற்ற நிலைக்கு வந்தவர்களாகவும் இருப்பார்கள். 

இவ்வாறு, வசதியாக இருந்து விதியின் காரணமாக வீதிக்கு வந்தவர்கள் அல்லது வசதியிருந்தும் குடும்பத்தால் கைவிடப்பட்ட நபர்களை எதிர்கொள்ள நேரிடுகின்ற தருணங்களில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் கையறுநிலைதான் ஏனோ நினைவுக்கு வந்து போகின்றது. 

இலங்கை முஸ்லிம்களுக்கு கட்சிகள், தலைவர்கள், எம்.பிக்கள் என அரசியல் ரீதியாக எல்லா விதமான பலங்களும் இருந்தும் கூட, அதன்மூலம் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்படவும் இல்லை. வாழ்வியல் நெருக்கடிகள் போக்கப்படப்படவும் இல்லை. 

ஒருவகையில் பார்த்தால், ஏ.ரி.எம். மையங்களுக்கு முன்னால் அமர்ந்திருந்து தமது கஷ்டங்களைச் சொல்லி உதவி கேட்கின்ற ஒரு நபரைப் போலவே, இன்று முஸ்லிம் சமூகம் தமது உரிமைகளைப் பெறுவதற்காகவும், பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் ஆட்சியாளர்களிடம் மன்றாட வேண்டி இருக்கின்றது. 

ஏ.ரி.எம்.மில் இலட்சக்கணக்கில் பணமிருக்கின்றது. ஆனால் அது நமக்கு உதவக்கூடியதாக நமது கைக்கு வரப்போவதில்லை. அல்லது, நமது கணக்கில் இருக்கின்ற பணத்தை, இயந்திரத்தில் ஏற்பட்ட ஏதோவொரு கோளாறு காரணமாக பெற்றுக் கொள்ள முடியாமலேயே முடக்கப்படலாம். அதுபோலவும் இதனைக் கொள்ள முடியும். 

இத்தனைக்கும் முஸ்லிம் சமூகம் என்பது வரலாற்றில் இப்படி இருந்த சமூகம் அல்ல என்பதை மறந்து விடக்கூடாது. ‘துருக்கித் தொப்பி’ அணிவதற்காக போராடிய ஒருசமூகம். ஆயுதக்குழுக்களின் அடக்கு முறைக்கு எதிராக எழுந்து நின்ற இனக்குழுமம், இன்று கேட்பாரற்ற நிலைக்கு வந்துள்ளது. 

ஏனென்றால், அப்போது முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்களும், புத்திஜீவிகளும், பள்ளிவாசல்   உள்ளிட்ட அமைப்புக்களின் தலைமைத்துவங்களும் அந்தளவுக்கு சமூக சிந்தனையுள்ளதாக, பலம்பொருந்தியதாக, துணிச்சல் மிக்கதாக இருந்தன. குறிப்பிட்ட ஒரு உரிமை சிறியதாயினும் அதுமுக்கியமானது என்றால், அதனை பெறமுழுமூச்சுடன் செயற்பட்டது. 

கடந்த 25 வருடங்களில் முஸ்லிம் அரசியல் வியாபாரத் தனமாக மாறியுள்ளது. எம்.பி.பதவி, அமைச்சுப் பதவி, பணம், வாகனம், கொந்தராத்து, தேர்தல் செலவுகள், செல்வாக்கு, அதிகாரம் ஆகியவற்றை மையப்படுத்திய ‘டீல்’களின் அடிப்படையிலேயே பெரும்பாலான அரசியல் தலைவர்களும், எம்.பி.க்களும் காலத்தை இழுத்துக் கொண்டு போகின்றார்கள். 

கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் எம்.பி.யாக இருந்தவர்கள் மற்றும் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் இக்காலப்பகுதியில் என்ன செய்திருக்கின்றார்கள் என்று ஒரு பட்டியலைப் போட்டுப் பார்த்தால் எல்லாம் வெளிச்சத்திற்கு வரும். எந்த உரிமையைப் பெற்றுத் தந்திருக்கின்றார்கள். என்ன இமாலய அபிவிருத்தியை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றார்கள் என்று தொகுத்து நோக்கினால் யதார்த்தம் புரியும். 

90களின் இறுதிப் பகுதியில் இருந்து தற்போது வரை முஸ்லிம் அரசியலை நிரப்பிய, இன்றும் நிரப்பிக் கொண்டிருக்கின்ற இரண்டு அல்லது மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டும்தான் கொஞ்சமேனும் திருப்திப்படக் அபிவிருத்தி அரசியலைச் செய்திருக்கின்றார்கள். மற்றையவர்கள் தங்களது கஜானாக்களையே நிரப்பியுள்ளனர். 

ஆனால் உரிமை அரசியலைப் பொறுத்தமட்டில் மர்ஹம் அஷ்ரபுக்குப் பிறகு வந்த கிட்டத்தட்ட எல்லா அரசியல்வாதிகம் முஸ்லிம் சமூகத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதிலும் உரிமைசார் அரசியலில் முன்னின்று சாதிக்கின்ற விடயத்திலும் ‘வெற்றிகரமாக தோல்வி’ கண்டிருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல முடிகின்றது. 

கோட்டபாய இந்நாட்டை வழிநடாத்தியதை விடமோசமாக முஸ்லிம் சமூகத்தை வழிநடாத்திய, வழிநடாத்திக்கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளை இன்னும் சமூகம் துரத்தியடிக்கவில்லை. மாறாக, அவர்களை தலையில் வைத்துக்கொண்டாடுவது மட்டுமன்றி, அதுபோன்ற ஒன்றுக்கும் உதவாத அரசியல் பிரதிநிதிகளைத்தான் தொடர்ந்தும் தெரிவு செய்து கொண்டும் இருக்கின்றார்கள். 

ஐந்துக்கு குறையாத முஸ்லிம் கட்சிகள் உள்ளன. இதில் மூன்று கட்சிகள் பெரியவை. இதனடிப்படையில், தேசிய தலைவர்கள் உள்ளனர். புpராந்திய தலைவர்கள் உள்ளனர். துளபதிகள் இருக்கின்றனர். அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் கடந்தகாலத்திலும் இருந்தனர். இப்போதும் உள்ளனர். கடந்த 15வருடங்களாக சாராசரியாக 20பாராளுமன்ற உறுப்பினர்களை முஸ்லிம் சமூகம் கொண்டுள்ளது.  

எவ்வாறாயினும், உரிமைகளை வென்றெடுக்கும் விடயத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமன்றி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தமிழர் அரசியலிடம் இருந்து பல விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டிய நிலையிலேயே இன்னும் இருக்கின்றது. இதற்காக தமிழ் அரசியல்வாதிகளை புகழ்வதாக என்று எண்ணி விடக் கூடாது. முஸ்லிம் அரசியலின் நிலைமை அவ்வாறுதான் இருக்கின்றது என்ற நிதர்சனத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். 

90வயதில் இரா.சம்பந்தனுக்கு இருக்கின்ற தைரியமும். நெஞ்சுரமும், தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதில் உள்ள வேட்கையும் 60வயதில் உள்ள முஸ்லிம் தலைமைகள் மற்றும் 40, 50வயதுகளில் உள்ள எம்.பிக்களுக்கு ஏன் ஏற்படவில்லை? என்ற கேள்வி அடிக்கடி எழுவதுண்டு. 

ஓரிரு முஸ்லிம் எம்பி.க்கள் இப்போது பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்ற போதிலும், முஸ்லிம்களுக்காக இன்னும் சரியாக உரையாற்றாத எம்.பி.க்கள் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். முஸ்லிம்களின் பிரச்சினைகளை, அதன் ஆழ அகலங்களை அறியாத அரசியல்வாதிகள் உள்ளனர். சமூகத்தின் நலனை விட ‘தமது கல்லாப் பெட்டிகளுக்கு’ முக்கியத்துவம் கொடுக்கின்ற ஏராளம் பேர் உள்ளனர். (அளவானவர்கள் மட்டும் தொப்பியைப் போட்டுக் கொள்ளலாம்) 

தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றும் புண்ணிய காரியம் செய்யவும் இல்லை. முற்றுமுழுதாக சமூக சேவை செய்யவும் இல்லை. அவர்களும் அரசியலே செய்கின்றார்கள். தம்மையும் சமூகத்தையும் கவனிக்கின்றார்கள். ஆனாலும் பொதுவெளியில் சமூக விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றார்கள். பேதங்களை மறந்து ஒருபுள்ளியில் சந்திக்கின்றார்கள். இதுதான் முஸ்லிம் அரசியலில் இல்லாத பண்பாகும். 

சிறிதரனைப் போல பிரச்சினைகளை தொகுத்துப் பேசுகின்ற முஸ்லிம் எம்.பி.க்களை மருந்துக்கு கூட காணக் கிடைக்கவில்லை. சாணக்கியனைப் போல துடிப்புள்ள முஸ்லிம் எம்.பி.க்களை முஸ்லிம்கள் தெரிவு செய்யவில்லை. சுமந்திரனைப் போல விடயங்களை மிக நுட்பமாக அணுகக்கூடிய சட்ட அறிவுள்ள யாரும் முஸ்லிம் பிரதிநிதியாக களத்தில் இருப்பதாக தெரியவில்லை. 

தமிழ் அரசியல்வாதிகள் இவ்வாறு துடிப்புடன் இருந்ததால் தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைத்துவிட்டனர் என்று கூற வரவில்லை. இனப்பிரச்சினை தீர்வு போன்ற விடயங்கள் அவ்வளவு எளிதில் சாத்தியமும் இல்லை என்றாலும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் முறையாக முன்வைக்கப்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது.

இதனையெல்லாம் ஏன் முஸ்லிம் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பிக்கள் செய்யவில்லை. இதுவிடயத்தில் உருப்படியாக ஒரு காலடியைக்கூட முன்னோக்கி எடுத்து வைக்க எத்தனிக்கவில்லை? என்ற கேள்விக்கு விடையென்ன.

முன்னதாக ‘மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் ஒரு தொங்கு அரசாங்கம். அவர் ஒன்றும் செய்ய மாட்டார்’ என்றீர்கள். ‘கோட்;டாபய எங்களது கதையைக்கேட்காமல் இனவாதிகளின் தாளத்திற்கு ஆடுகின்றார்’ என்றீர்கள். இப்போது ரணில் விக்கிரமசிங்கவிடம் பேசுவதற்கான வாய்ப்பை தவற விட்டுக்கொண்டிருப்பதற்கு என்ன காரணம் கூறப்போகின்றீர்கள்? 

அப்படியென்றால், யார் ஜனாதிபதியாக வந்தால். யார் ஆட்சி அமைத்தால், எப்போது முஸ்லிம்களின் உரிமைகளைப் பற்றி தைரியமாக, சமூக சிந்தனையுடன் பேசுவீர்கள்? முஸ்லிம் சமூகத்தின் அரசியல் மடமையை போக்கி சரியாக வழிநடாத்துவீர்கள்? என்பதை முஸ்லிம் அரசியல்வாதிகள் சொல்ல வேண்டும். 

‘வேலைக்காரிக்கு பிள்ளைச்சாட்டு’ என்று எங்கள் ஊரில் சொல்வார்கள். ‘ஆடத்தெரியாதவனுக்கு மேடை கோணல்’ என்பார்கள். நீங்கள் கூறுகின்ற கதைகள் எல்லாம் இந்த ரகமானவை என்பதை மக்கள் அறியாதவர்களல்லர். ஆனாலுமென்ன. தேர்தல் வந்தால் மறந்து போவார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச சவால்களை முறியடித்த இலங்கை சுற்றுலாத்துறை...

2026-07-14 18:22:05
news-image

ஆசியாவின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல்...

2026-07-14 14:49:21
news-image

பாகிஸ்தானின் முடிவில்லா உள்நாட்டுப் போர் : ...

2026-07-14 14:10:51
news-image

கார்மேகங்கள் சூழும் மாகாண சபை தேர்தல்கள்...

2026-07-14 11:13:28
news-image

‘எல்நினோ’ காலநிலை மாற்றங்களால் பொருளாதார விளைவுகளை...

2026-07-14 05:44:12
news-image

  3 சதவீத பொருளாதார வளர்ச்சியெனும் எதிர்வு ...

2026-07-14 05:18:56
news-image

தேசிய ஆவணக்காப்பகத்திலுள்ள மலையக ஆவணங்களின் எதிர்காலம்

2026-07-13 10:54:03
news-image

இரத்தம் தோய்ந்த சிறை வன்­மு­றைகள்

2026-07-12 16:08:33
news-image

புதிய ஆயரும் சர்ச்­சையும்

2026-07-12 15:17:06
news-image

வேர்­களைத் தேடிய பயணம்

2026-07-12 14:47:22
news-image

துருக்கிய - இந்திய முரண்

2026-07-12 13:47:18
news-image

500,000 ரூபாவை மீறும் ரொக்கப் பரிவர்த்தனைகள்...

2026-07-12 13:45:21