என்.கண்ணன்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இருவேறு நகர்வுகள் கடுமையான வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
தொல்பொருள் திணைக்களத்தின் காணிகள் அபகரிப்பை தடுத்து நிறுத்துவது தொடர்பான சர்ச்சை முதலாவது.
இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை இரண்டாவது.
இந்த இரண்டு விவகாரங்களும் பெரும்பாலும் வடக்கு, கிழக்கை மையப்படுத்தியது என்பதுடன், காணிகள் அபகரிப்புடனும் தொடர்புடையது.
இவையிரண்டும், சிங்கள, பௌத்த பேரினவாதிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் விடயங்களாகவும் இருக்கின்றன.
வடக்கு, கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகளும், காணி அபகரிப்பும், பௌத்தமயமாக்கலும் இப்போது, முக்கியமானதொரு கட்டத்தை அடைந்திருக்கிறது.
வடக்கு, கிழக்கில் தொல்பொருள் திணைக்களம், இராணுவம் மற்றும் அரச நிர்வாகப் பிரிவுகளின் துணையுடன் முன்னெடுத்த காணி அபகரிப்பும், பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய சந்திப்புகளில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் அனுர மனதுங்கவின் கருத்தை ஜனாதிபதி கோரியிருந்தார்.
அதன்போது, அரசாங்க நிதி ஒதுக்கீட்டுக்கு அப்பால், வெளித்தரப்பினரின் நிதியுதவிகளைக் கொண்டு தொல்பொருள் திணைக்களம், காணி அபகரிப்பு, பௌத்தமயமாக்கலை முன்னெடுப்பது தெரியவந்தது.
இதையடுத்து, வெளியாரின் நிதியுதவியைப் பெறுவதற்கு ஜனாதிபதி தடைவிதித்தார். அத்துடன் தொல்பொருள் திணைக்களத்தினால் குருந்தூர்மலையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
ஆனால் தொல்பொருள் திணைக்களம் காணிகளை ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பிய போது, ஜனாதிபதியின் உத்தரவை செயற்படுத்துவதா என்று ஆராய்ந்து வருவதாக தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் கூறியிருந்தார்.
இந்தநிலையில் தமிழ்க் கட்சிகளுடன் நடந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று இணையத்தில் பரவியது.
தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளரிடம் காணிகளை விடுவிக்க மறுப்பது குறித்து ஜனாதிபதி கேள்வி எழுப்புவதும், அதற்கு அவர் தொல்பொருள் சட்டப்படி அவற்றை விடுவிக்க முடியாதென மறுப்பதும், அதனால் எரிச்சலடைந்த ஜனாதிபதி எனக்கு வரலாறு கற்பிக்கப் போகிறீர்களா என்று சீற்றத்துடன் கூறியதும் அந்தக் காணொளியில் பதிவாகியிருந்தது.
இதையடுத்து, தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் பதவியில் இருந்து அனுர மனதுங்க விலகியிருக்கிறார்.
அவரது ஒப்பந்தகாலம் முடிவுற்றதால் பதவி விலகியதாக நியாயப்படுத்தியிருக்கிறார் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க.
அதேவேளை, அவர் கட்டாயத்தின் பேரில், அச்சுறுத்தப்பட்டு பதவி விலகச் செய்யப்பட்டிருக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
இந்த நிலையில், பௌத்த மரபுரிமைகள் தொடர்பாக தீர்மானங்களை எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை கிடையாது என்று, தேசிய சுதந்திர முன்னணியின் அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, தெரிவித்திருக்கிறார்.
வடக்கு, கிழக்கில் தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களம் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து வருவதுடன், குறித்த இடங்களில் விகாரைகளை அமைக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறது.
இவ்வாறாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறே, தொல்பொருள் திணைக்களத்துக்கு விடுக்கப்பட்ட உத்தரவு செயற்படுத்தப்படாத நிலையில் தான், ஜனாதிபதி கடும்போக்கில் செயற்படும் நிலையை தோற்றுவித்திருக்கிறது.
இதுவும், தொல்பொருள் திணைக்களம் வெளியில் இருந்து நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என பிறப்பித்த உத்தரவும், சிங்கள பௌத்த கடும்போக்காளர்கள் மற்றும் பௌத்த மத பீடங்கள் மத்தியில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வடக்கு, கிழக்கில் காணிகள் அபகரிப்பு, பௌத்தமயமாக்கலை கண்டு கொள்ளாமல், தமிழர்கள் அமைதியாக இணக்கமாக வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பே அவர்களிடம் இருக்கிறது.
அதனால் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த உத்தரவுகள் அவர்களை கோபப்படுத்தியிருக்கிறது.
அதுபோலவே, இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கும் முயற்சிகளுக்கும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.
2009ஆம் ஆண்டில், 23 ஆயிரத்து 850 ஏக்கர் காணிகள் வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டன.
பின்னர் பல்வேறு காலகட்டங்களில் 20 ஆயிரத்து 775 ஏக்கர் காணிகள், இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் மேலும் 109 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் திரும்பக் கையளிக்கப்பட்டன.
இந்தநிலையில் தற்போது, 2 ஆயிரத்து 989 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இந்தக் காணிகளை உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைப்பது குறித்து தீர்மானங்களை எடுப்பதற்கு, செயலகம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
பிரிகேடியர் ஒருவரின் தலைமையில் இந்தச் செயலகத்தை நிறுவுமாறு, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவினால், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்தச் செயலகம் உயர்பாதுகாப்பு வலயக் காணிகள் தொடர்பான பிரச்சினையை தீர்க்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இராணுவத்தினர் கைப்பற்றி வைத்திருக்கும் நிலங்களை, அரசியல் நோக்கங்களுக்காக விடுவிக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக கூறியிருக்கிறார்.
இதனை தாம் எதிர்ப்பதாகவும் அவர் கருத்து வெளியிட்டிருக்கிறார். உயர்பாதுகாப்பு வலயக் காணிகள் தொடர்பாக சரத் பொன்சேகா, ஜெனரல் கமல் குணரத்ன, ஜெனரல் சவேந்திர சில்வா போன்றவர்கள் கடுமையான நிலைப்பாட்டில் இருந்தவர்கள்.
2002இல் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், விடுதலைப் புலிகளுடன் பேசிக் கொண்டிருந்த போது, பலாலி உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிப்பதற்கு சரத் பொன்சேகா கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்.
அதுபோன்று, நாகர்கோவில் உயர்பாதுகாப்பு வலயத்தை பின்நகர்த்துவதற்கு ஜெனரல் கமல் குணரத்ன மறுப்புத் தெரிவித்தார்.
இதுபோன்ற செயற்பாடுகளால் தான், இராணுவ அதிகாரிகள்,- புலிகளின் தளபதிகள் மட்டத்திலான பேச்சுக்கள் ஆரம்பத்திலேயே முறிந்து போயின.
அதன் தொடர்ச்சியாக, அரசியல் பேச்சுக்களும் முடிவுக்கு வந்தன.
தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதற்கு ஒரு பக்கம் இராணுவ ரீதியாகவும் முயற்சிக்கப்பட்டது. இன்னொரு பக்கம், தொல்பொருள் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்களைப் பயன்படுத்தியும் முயற்சிக்கப்பட்டது.
இரண்டு ஆக்கிரமிப்புகளினதும் அடிப்படை நோக்கம், தமிழர் தாயகம் என உரிமை கோரப்படும், வடக்கு, கிழக்கை சிங்கள, பௌத்தமயப்படுத்துவது தான்.
அதற்காகவே, இராணுவத்தினராலும், தொல்பொருள் திணைக்களத்தினாலும், தமிழர்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டதுடன், சிங்களக் குடியேற்றங்களும் முன்னெடுக்கப்பட்டன. பௌத்தமயமாக்கலும் முன்னெடுக்கப்பட்டது.
இவை உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், இதனை தடுக்காமல், இனப்பிரச்சினைத் தீர்வு சாத்தியமில்லை என்ற நிலை உருவானது.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு நடத்துவதாயின், இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படட வேண்டும் என்ற நெருக்கடி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டது.
அந்த நெருக்கடியில் தான் அவர், தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு போட்டதுடன் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிப்பது குறித்து தீர்மானிக்கும் செயலகத்தை நிறுவவும் உத்தரவிட்டார்.
அவரது இந்த உத்தரவுகள் சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது இனவாதத்தை கிளப்பி அரசியல் செய்வதற்கு பல்வேறு தரப்புகள் காத்திருக்கின்றன.
இத்தகைய சந்தர்ப்பத்தில் இந்த விவகாரங்களை முன்னிறுத்தி ரணிலுக்கு எதிரான அரசியலை முன்னெடுக்க பௌத்த தேசியவாதிகள் மாத்திரமன்றி எதிர்க்கட்சிகள் கூட முற்படலாம்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய வேட்பாளராக போட்டியிடும் கனவில் உள்ள அவர், பௌத்த சிங்கள தேசியவாதிகளின் எதிர்ப்பை எவ்வாறு சமாளிக்கப் போகிறார்?
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM