சிவலிங்கம் சிவகுமாரன்
முதலாம் உலக நாடுகளின் அபிவிருத்தி, அங்கு நிலவும் ஜனநாயகத் தன்மை, ஊழழற்ற ஆட்சி முறைக்கு என்ன காரணங்கள்? மக்களுக்கு பொறுப்பு கூறத்தக்கதான அரசியலமைப்பு ஏற்பாடுகள் பிரதான காரணங்களாக உள்ளன. உலகத்திலேயே மிகவும் அதிகாரமிக்க பதவியாக அமெரிக்க ஜனாதிபதி பதவியை வர்ணிப்பர். என்ன தான் சக்தி வாய்ந்த பதவியாக இருந்தாலும் ஜனாதிபதியானவர் பதவி காலத்திலும் அதற்குப் பின்னரும் நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவராகவே இருக்கின்றார்.
வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளும் மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய கடப்பாட்டை கொண்டிருப்பதால் அங்கு ஜனநாயகத்துக்கு எதிரான சிறு சம்பவங்களும் உடன் கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. நாட்டின் தலைவர் தவறு செய்திருந்தால் ஒன்று பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண்டும்.
இவ்வாறான உலகின் கவனத்தை ஈர்த்த இரண்டு சம்பவங்கள் கடந்த வாரம் இடம்பெற்றிருந்தன. இங்கிலாந்து முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது எம்.பி. பதவியை இராஜிநாமா செய்தமை மற்றும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான புதிய குற்றச்சாட்டுகளே அவை.
கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த பொரிஸ் ஜோன்சன் கொரோனா காலத்தில் நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் தனது வீட்டில் பிறந்த நாள் நிகழ்வை கொண்டாடினார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானார்.
அதற்காக நாடாளுமன்றில் மன்னிப்பும் கோரினார். பின்பு இங்கிலாந்து கடுமையான பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியிருந்தமைக்கு இவரின் மோசமான நிர்வாகமே காரணம் என விமர்சனங்கள் எழுந்ததையடுத்து நிர்வாக தோல்வியை ஏற்றுக்கொண்ட அவர் கடந்த வருடம் ஜுலை மாதம் தனது பிரதமர் பதவியை இராஜிநாமா செய்தார்.
எனினும் கொரோனா காலத்து பிறந்த நாள் நிகழ்வானது ‘பார்ட்டிகேட்’ ( Party Gate) சம்பவம் என பெயரிடப்பட்டு சிறப்பு குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த விசாரணை அறிக்கைகளின் பிரகாரம் பொரிஸ் ஜோன்சன் பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளார் என்பதை தெரிவித்துள்ள குழு அவர் தனது எம்.பி பதவியை பத்து நாட்களுக்குள் இராஜிநாமா செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தது. அதன் படியே அவர் செயற்பட்டிருக்கின்றார். மீண்டும் தேர்தல் ஒன்றை சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதே போன்று அமெரிக்க சம்பவமும் இன்று உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி நிக்சன் வாட்டர் கேட் ஊழலில் சிக்கி பதவியை இராஜிநாமா செய்த பிறகு அதிக குற்றச்சாட்டுக்களுக்கு முகங்கொடுத்த ஒருவராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விளங்குகிறார்.
ட்ரம்ப்பின் பதவி காலத்தில், அவர் தனது புளோரிடா இல்லத்தில் நூற்றுக்கணக்கான அரச ஆவணங்களை வேண்டுமென்றே வைத்திருந்ததாகவும் அவை உரிய அதிகாரிகளிடம் சென்றடைவதை தடுக்க சதி செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தனது பகிரங்க கைதை தடுக்க அவர் மியாமி நீதிமன்றில் சரணடைந்தார். ஆனாலும் சட்ட விதிகளின் படி அவர் நீதிமன்றில் கைது செய்யப்பட்டார். தன் மீதுள்ள குற்றங்களை மறுத்துள்ள அவர் பின்பு விடுவிக்கப்பட்டார்.
இந்த இரண்டு சம்பவங்களும் இரண்டு விடயங்களை எமக்கு உணர்த்துகின்றன. முதலாம் உலக நாடுகளின் தலைவர்களும், இலங்கை உட்பட தென் மற்றும் தென் கிழக்காசியாவில் உள்ள மூன்றாம் உலக நாடுகளின் தலைவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை தமது அண்மைக்கால நடவடிக்கைகளின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களும் இந்த நாட்டு தலைவர்களைப் பார்த்து வழி தவறி போய் விட்டார்களோ என்று சிந்திக்கத் தோன்றுகின்றது.
இரண்டாவதாக, அவர்களும் விசாரணைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை சுமந்தும் அடுத்த தேர்தலில் களம் காண்பதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றார்கள். இவை இரண்டுமே ஆட்சி காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்காக குற்றச்சாட்டுகளை சுமந்து வாழ்ந்து வரும் முன்னாள் தலைவர்களின் இயல்பாகவே உள்ளன.
இலங்கையில் இவை போன்ற சம்பவங்கள் தாராளமாக இடம்பெற்றாலும் அவை மதம், இனம் மற்றும் அதிகாரம் என்ற பெயர்களால் மூடி மறைக்கப்பட்டு மக்களை திசை திருப்பும் சம்பவங்களாகவே உள்ளன. என்ன தான் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுக்கான சாட்சியங்கள் இருந்தாலும் , தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் இலங்கை போன்ற நாடுகளில் அவை மூடி மறைக்கப்படுகின்றன.
நாட்டின் அரசியல் நெருக்கடிகளை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் தேசிய கட்சிகளின் தலைவர்கள், தமக்கிடையேயான ஒப்பந்தங்கள், சலுகை பரிமாறல்கள், தமது எதிர்கால அரசியல் இருப்பு போன்றவற்றை கருத்திற்கொண்டு பரஸ்பரம் ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொள்ளும் ஒரு ‘தராதரமற்ற அரசியல்’ கலாசாரத்தில் ஊறிப்போனவர்களாகவே உள்ளனர்.
தமக்கு தேவையானது நடக்க வேண்டுமென்றால் சகல சட்டங்களையும் மீறி செயற்படும் ஒரு தராதரமற்ற அரசியல் செல்நெறிகளை இலங்கையின் அனைத்து அரசியல்வாதிகளும் கொண்டிருக்கின்றனர்.
கொரோனா சட்ட விதிகளை மீறி தனதில்லத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடியமைக்காக பொரிஸ் ஜோன்சன் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால் இப்படியான காலகட்டத்தில் இலங்கை தேர்தல்களையே நடத்தியது. சுகாதார விதிகளை மீறி கட்சிக் கூட்டங்கள், நிகழ்வுகள் இடம்பெற்றன.
எவரும் கண்டிக்கப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை. இவற்றை ஊடகங்கள் மாத்திரமே சுட்டிக்காட்டின. இலங்கை அரசியல்வாதிகளின் வெட்கமற்ற தன்மை, எம்மை யார் கேள்வி கேட்பது என்ற அதிகார போதைகளே பின் வந்த காலங்களில் மக்களை அவர்களுக்கெதிராக கொதித்தெழ வைத்தது என்பதை இப்போதும் அவர்கள் உணர்கிறார்கள் இல்லை.
‘அரகலய’ வுக்குப் பிறகு இலங்கையில் இடம்பெற்று வரும் அண்மைக்கால சம்பவங்கள் அதை உணர்த்தி நிற்கின்றன. கடந்த மாதம் டுபாயிலிருந்து நாட்டுக்கு தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், நாட்டின் உயர்பீடம் தன்னை காப்பாற்றாதால் அரசாங்கத்துக்கு எதிராகவே பாராளுமன்றில் இயங்கப்போவதாக வெட்மில்லாமல் ஊடகங்களுக்கு கருத்துரைத்தார். அதன்படியே, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கம் செய்யும் யோசனைக்கு அவர் எதிராகவே வாக்களித்திருந்தார்.
அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றச்செயற்பாடுகளில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதோ இல்லையோ உரிய அதிகாரிகள் என்ன செய்கின்றனர் என்பதுவும் இப்போது கேள்விக்குறியாகவே உள்ளது.
அதற்கு அலி சப்ரி ரஹீமின் சம்பவமும் நல்ல உதாரணம். அவர் கடத்தி வந்ததாகக் கூறப்படும் தங்கம் உட்பட ஏனைய பொருட்களின் பெறுமதி சுமார் ஏழரை கோடியாகும். ஆனால் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் வெறும் 75 இலட்சமாகும். அவருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை. விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
சில நாட்களுக்குப் பிறகு இதே அளவு பெறுமதியான தங்கத்துடன் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் பிடிபட்டார். அவர் கொண்டு வந்த தங்கத்தின் பெறுமதி எட்டரை கோடி ரூபாயாகும். ஆனால் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ஏழு கோடியாகும். அபராதத்தை செலுத்த முடியாது அவர் பின்பு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவராலும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எவரும் பதில் தர தயாராக இருக்கவில்லை. இப்படி பல சம்பவங்களைக் கூறலாம்.
மேலைத்தேய நாடுகள் மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய விடயத்தில் மிகவும் கவனமாக உள்ளன. இங்கு அப்படியில்லை. அதிகாரிகளிலிருந்து அரசியல்வாதிகள் வரை அனைவருமே தமக்குள்ள பொறுப்பை மறந்து செயற்படுகின்றனர்.
இதற்கு மக்களும் பழகி விட்டனர். இலங்கை போன்ற நாடுகளில் உள்ள சராசரி அரசியல்வாதிகள் போன்று இப்போது அமெரிக்கா , இங்கிலாந்து போன்ற நாடுகளின் தலைவர்களும் மாறி வருகின்றனரோ என்ற சந்தேகம் தோன்றுவதை தவிர்க்க முடியாதுள்ளது.
கடுமையான சட்டங்களும் மக்களுக்கான ஜனநாயக பண்புகளை கொண்ட ஆட்சி முறையை உறுதி செய்யும் கலாசாரத்தையும் கொண்ட இந்த நாட்டின் தலைவர்களே இப்படி மாறும் போது, ஏற்கனவே அரசியல் தராதரங்களின்றி செயற்பட்டு பழகி விட்ட இலங்கை அரசியல்வாதிகளின் அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வளவு மோசமாக இருக்கப்போகின்றன? நினைக்கவே அச்சமாகத்தான் உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM