நாட்டில் தற்போதுள்ள கல்விமுறைமைகளில் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். காலனித்துவ காலத்து கல்வி முறைகளும் பாடத்திட்டங்களும் இந்த நவீன காலத்துக்குப் பொறுத்தமானதாக இல்லை என கல்வியியலாளர்களும் பல வருடங்களாக கூறி வருகின்றனர்.
ஆனால் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் தைரியங்கள் எந்த அரசாங்கத்திடமும் இது வரை ஏற்படவில்லை. உலகில் வேறு எந்த நாடுகளிலும் இல்லாத ஐந்து வருடங்களுக்கும் மேலான பல்கலைக்கழக கல்வி முறை இங்கு தான் உள்ளது. தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிற்கல்வி முறைகள் பல்கலைக்கழகங்களில் மிகவும் குறைவாக உள்ளன.
பல்கலைக்கழக கல்வி முறைக்கு ஏற்பவே பாடசாலைகளும் மாணவர்களை தயார்ப்படுத்தி அனுப்புகின்றன. அதற்கு ஏற்றாற் போல் தான் பாடசாலை கல்வி திட்டமும் உள்ளது. இலவச கல்வி, புலமை பரிசில் திட்டம் என்ற வரப்பிரசாதங்களை தவிர்த்துப் பார்த்தால் இலங்கையின் கல்வி முறையானது புதிய சீர்திருத்தங்களை உருவாக்காத ஒன்றாக உள்ளது. அதாவது தற்போதுள்ள கல்வி முறையில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர்களாலேயே கல்வி முறை சீர்திருத்தங்கள் பற்றி சிந்திக்க முடியவில்லையா என்ற கேள்வி எழுகின்றது.
இது இப்படியிருக்க அரசாங்க பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றமையானது இலவச கல்வியின் எதிர்காலம் குறித்த கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. 2017 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரை 56 அரச பாடசாலைகள் பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதே காலப்பகுதியில் 34 தனியார் பாடசாலைகள் நாட்டில் தோற்றம் பெற்றுள்ளன. அரச பாடசாலைகள் மூடப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் பிரதானமாக மூன்று விடயங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
1) ஆசிரியர் பற்றாக்குறை
2) மாணவர் சேர்க்கையில் வீழ்ச்சி
3) மட்டுப்படுத்தப்பட்ட நிதி வளங்கள்
2017 ஆம் ஆண்டிலிருந்து பார்த்தால் அதிக பாடசாலைகள், 2018 ஆம் ஆண்டே மூடப்பட்டுள்ளன. இவ்வாண்டு மட்டும் 19 பாடசாலைகள் நாடெங்கினும் மூடப்பட்டுள்ளன.இவ்வாண்டு இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையிலும் 4.5 வீத வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதே போன்று, 2019 ஆம் ஆண்டு 19 தனியார் பாடசாலைகள் உருவாக்கம் பெற்றுள்ளன.
2015 ஆம் ஆண்டு அரச பாடசாலைகளில் கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கையானது 41 இலட்சத்து 29 ஆயிரத்து 634 ஆக இருந்த அதே வேளை 2022 ஆம் ஆண்டு 40 இலட்சத்து 24 ஆயிரத்து 207 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குப்பிறகு பலர் சாதாரண தரம் அல்லது உயர்தர கல்வியுடன் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக நாட்டின் தேசிய பல்கலைக்கழகங்களிலும் மாணவர் வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றது. இது நாட்டின் கல்வித்துறையில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியதாகும்.
நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தமைக்கு கொரோனாவை மாத்திரம் காரணங் காட்டிக் கொண்டிருக்க முடியாது. பல காரணங்களில் அது ஒன்றாக இருக்கலாம். மேலும் கொரோனா தொற்றானது இலங்கையை மாத்திரம் தாக்கவில்லை. இலங்கையை விட மிக மோசமான பொருளாதார நிலைமைகளைக் கொண்டிருந்த நாடுகளிலும் அது பரவியது.
ஆனால் அந்த நாடுகள் இலங்கையைப் போன்று ஒரேடியாக வீழ்ந்து விடாமல் எழுந்து நின்றன. இங்கு அப்படி நடப்பதற்கு சாத்தியங்கள் இல்லாமல் போனதற்கு பிரதான காரணங்களாக ,அரசியல்வாதிகளின் ஊழல் செயற்பாடுகளும் அரச யந்திரத்தின் நிர்வாக சீர்கேடுகளுமே சுட்டிக்காட்டப்படுகின்றன.
இப்போதும் கூட, பொருளாதார சீர்கேடுகளுக்குக் காரணமானவர்கள் அது குறித்த எந்த வருத்தங்களும் இல்லாது சொகுசு வாழ்க்கையையே அனுபவித்து வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக பல தொழில்கள் முடக்கப்பட்டன. பலர் வெளிநாடுகளுக்கு பறந்தனர். பல மத்தியதர வர்க்கத்தினரின் அமைதியானதொரு வாழ்க்கை கட்டமைப்பு இப்போது இலங்கையில் சிதைந்து விட்டது. பாடசாலைகளில் மாணவர் வீழ்ச்சிக்கு வறுமை பிரதான காரணமாக உள்ளது. இடை விலகல் வீதம் அதிகரிக்க இதுவே பிரதான காரணம்.
கொரோனாவுக்கு முன்பே இலங்கையின் கல்வித்துறை வீழ்ச்சி தொடர்பில் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டாலும் தொற்றுக்குப் பின்னரான படுமோசமான நிலைமைள் அச்சம் தரும் செய்தியாக உள்ளது.
அரச பாடசாலைகள் மூடு விழா கண்டு வரும் அதே வேளை தனியார் பாடசாலைகள் உருவாவதை அரசாங்கம் ஊக்குவிக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இலவச கல்வியின் தாற்பரியங்கள் குறித்த கேள்விகள் எழுகின்றன. நாட்டில் வறுமை கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் ஏழை மாணவர்களின் கல்வித் தாகத்தை தீர்க்கும் வழிவகைகள் பற்றிய எந்த சிந்தனைகளும் இல்லாது செயற்படுகின்றமை வேதனைக்குரியதாகும்.
நாட்டின் பல அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் வகையில் காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. அதில் கல்வித்துறையும் இணைந்து விடுமோ என்ற அச்சம் தற்போது உருவாகியுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM