பெற்ற தாயை தேடும் குழந்தைகளின் கண்ணீர்க் கதை

Published By: Vishnu

18 Jun, 2023 | 11:53 AM
image

கனராசாசரவணன்

வெளிநாடுகளில் இருந்து தமது  உண்மையான அம்மாவை, அப்பாவைக் கண்டுபிடிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்து பல்வேறு அனுபவங்களைக் கொண்டவர்களின் மாறுபட்ட கதைகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த 10வருடங்களாக என்னைப் பெற்ற தாயைத்தேடிக் கொண்டிருக்கின்றேன் என்கிறார் நெதர்லாந்தை தற்போதைய வசிப்பிடமாகக் கொண்ட அமெண்டா ஜோன்சன்.

அவர் கடுமையான பதைகளை கடந்து வந்துள்ளதோடு, கசப்பான அனுபவங்களையும் பெற்றுக்கொண்டுள்ளார். இதனால் தன்னைப்போலவே, பெற்றோரைத் தேடிவருபவர்களுக்கு உதவி செய்வதற்காக டி.என்.டி என்ற அமைப்பை உருவாக்கிச் செயற்பட்டு வருகின்றார்.

எமக்கு இன்னல்கள் ஏற்படுமிடத்து இயல்பாகவே உதடுகள் உச்சரிக்கும் வார்த்தைகள் அம்மா என்பதாகும். அத்தகைய அம்மாவை விட்டுப் பிரிந்திருப்பது இயலாத காரியம் என்கிறார் அமெண்டா ஜோன்சன்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் இங்குள்ள  குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டு சென்ற நிகழ்வுகள் 1980களில் ஆரம்பமாகி 1990 ஆகின்றபோது தீவிரமான நிலையை அடைந்திருந்தது.

அவ்வாறான பிள்ளைகள் தற்போது இளைஞர்களாக உள்ளனர். அவர்களிடத்தில் தத்தெடுத்த பெற்றோர் உண்மைக்கதைகளை குறிப்பிடுகின்றனர். 

இதனையடுத்து. அந்த இளையோருக்கு தமது உண்மையான அம்மாவை, அப்பாவைக் காண்பதற்கு ஆழமான விருப்பம் ஏற்படுகின்றது. அவர்கள் அதற்காக ஆவலுடன் இலங்கைக்கு வருகின்றார்கள்.

தன்னை என்ன காரணத்தினால் வளர்க்க முடியாத நிலைமை தாய்க்கு, தந்தைக்கு என்ன நிலை ஏற்பட்டதோ என்பதை கண்டறிவதற்கும், அவர்கள் இப்போது எப்படி உள்ளார்கள். அவர்களுக்கு உதவிகள் தேவையா போன்ற பல்வேறு கேள்விகளுடன் வருகை தருகின்றார்கள். 

அவ்விதமானவர்களிடத்தில் வேறெந்தவிதமான மனேநிலையும் இல்லை. குறிப்பாக வெறுப்பு, கோபம் போன்ற குணாம்சங்கள் காணப்படவில்லை. அவர்களிடமிருப்பது அன்பும், பாசமுமே.

இவ்வாறான நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு வரையில் இலங்கையிலிருந்து மேலை நாட்டுப் பெற்றோர்கள் மூலம் தத்தெடுக்கப்பட்டு 15 ஆயிரம் குழந்தைகள் காணப்படுவதாக புள்ளிவிபரத் தகவலொன்று கூறுகின்றது. எனினும் இந்தப் புள்ளிவிபரம் முழுமையானது அல்ல. 

இதில் தோட்ட தொழிலாளர்களின் தமிழ் பிள்ளைகள் அதிகளவில் காணப்படுவதுடன் முஸ்லிம் குழந்தைகளும் காணப்படுகின்றார்கள். அதிகமானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தத்துக்கொடுத்துள்ள போதும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் தத்துக் கொடுத்தவர்களும் இல்லாமில்லை. 

இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள், இலங்கையின் நீதிமன்றங்களின் ஊடாக உரிய அனுமதிகளுடன் சட்டரீதியாகவே கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவே பதிவுகள் உள்ளன. ஆனால் அவர்களிடத்தில் காணப்படுகின்ற ஆவணங்களில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. 

குறிப்பாக, தத்தெடுக்கப்பட்ட நிலையில் தமது உண்மையான பெற்றோரைத் தேடியறிவதற்காக வருகை தரும் இளைஞரோ அல்லது யுவதியோ கொண்டுவருகின்ற ஆவணங்களில் பல போலியானவையாக உள்ளன. 

குறிப்பாக பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவை போலியானதாகவே உள்ளன. இதனால் பெற்றோரைக் கண்டறிவதற்காக இலங்கை வருகின்றவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மிகவும் மோசமானவையாக உள்ளன. 

அவ்விதமான நிலைமைக்கு முகங்கொடுத்துள்ள அனுபவத்தினை அமெண்டா ஜேன்சன், பகிருகையில், “என்னை வளர்ப்பதற்காக இலங்கையிலிருந்து கொண்டு சென்றுள்ளனர்;. என்னைப் போன்றே தங்கை ஒருவரையும் இவ்வாறு வளர்ப்பதற்காக கொண்டு சென்றுள்ளனர். இந்த விடயம் எனக்கு பின்நாட்களிலேயே தெரிந்தது.

என்னை வளர்த்த நெதர்லாந்து அம்மா, அப்பா இலங்கையிலுள்ள என்னைப் பெற்ற தாயின் விபரங்களுடன் பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை எனக்கும் தந்தார்கள். அதனை வைத்து தோடிப்பார்க்கும் போது எனக்கு இரண்டு பிறப்புச் சான்றிதழ் இருப்பது கண்டறிப்பட்டது. 

ஒரு பிறப்பு சான்றிதழ் தம்பதெனியா வைத்தியசாலையிலும் மற்றது கொழும்பு பெண்கள் வைத்தியசாலையிலும் உள்ளது. எனவே நான் உண்மையான அம்மாவை கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று. 

தம்பெதெனிய வைத்தியசாலையில் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழுக்கு அமைய நான் அம்மாவை தேடிச் செல்லும் போது அவர் இறந்துவிட்டார். பின்னர் அவருடைய மகனை சந்தித்தேன் அவரை டி.என்.ஏ பரிசோதனைக்குட்படுத்திய போது என்னுடைய டி.என்.ஏ.வுடன் இணையவில்லை. 

அதன் பின்னர் எனது, டி.என்.ஏ. அறிக்கையினை வேறு யாருக்கும் பொருந்துகின்றதா எனப்பார்க்கும்வேளை எனது நெதர்லாந்து பெற்றோர் இலங்கையில் இருந்து கொண்டுசென்ற எனது தங்கையின் டி.என்.ஏ. பொருந்தியதை உறுதிப்படுத்தினார்கள். அதற்கமைய எனது தங்கையின் சகோதரன் குடும்பத்தை கண்டுபிடிக்க முடிந்தது” என்றார்.

ஆனால் நான் இன்னமும் எனது தாயைத் தேடிக்கொண்டு தான் உள்ளேன். அவரைக் கண்டு பிடிக்கும் வரையில் ஓயப்போவதில்லை என்றும் அமெண்டா ஜோன்சன் கூறினார்.

இதேவேளை, சுற்றுலா வழிகாட்டியான நீர் கொழும்பில் வசிக்கும் அன்ரூ சில்வா என்பவர் பல வருடங்களாக வெளிநாட்டிலிருந்து பெற்றோரைத் தேடிவருபவர்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றார்.  

அவர் இதுவரையில் சுமார் 200பேர் தமது உண்மையான பெற்றோரைக் கண்டறிவதற்கு உதவிகளை வழங்கியதாக கூறுகின்றார்.

“நான் 2000ஆம் ஆண்டில் இருந்து இவ்விதமாக வெளிநாட்டிலுள்ளவர்களுக்கு தமது பெற்றோரைத் தேடிக் கொடுக்கும் பணியினை முன்னெடுத்து வருகின்றேன். நான் சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரிந்து கொண்டிருக்கும்போது தான் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அமெண்டா ஜோன்சன் மூலம் இலங்கையிலுள்ள அவரது தாயை தேடி தருமாறு விண்ணப்பமொன்று வந்தது. 

அதன் பின்னர் தான் இலங்கையிலிருந்து தத்தெடுத்துக் கொண்டு செல்லப்பட்டு வெளிநாடுகளில் இருக்கும் இளையவர்கள் தமது பெற்றோரைக் கண்டறிந்து தருமாறு தொடர்ச்சியாக என்னிடத்தில் கோரிக்கை விடுப்பதற்கு முனைந்தனர்.  

வெளிநாடுகளில் உள்ளவர்களின் பெற்றோர்களை கண்டறிந்து இணைப்பது மிகவும் சிரமமான பணியாகும்.  பிள்ளைகளை இலங்கையிலிருந்து அழைத்துச் செல்லும் போது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் புகைகப்படங்கள் பிறப்பு அத்தாட்சிப்பத்திரங்கள் பொய்யானவையாக காணப்படுகின்றன. 

சில குழந்தைகளுக்கு பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் இரண்டு காணப்படுகின்றது. உண்மையானதை கண்டுபிடிப்பது மிகக் கடினமான பணியாகும். அக்காலத்தில் பிள்ளைகளை கொண்டு செல்லும் போது அம்மாக்களின் புகைப்படங்களை கொண்டு சென்றுள்ளனர்.

அப்புகைப்படங்களிலுள்ள அம்மாக்களைத் தேடிவருபவர்களுக்கு அவர்கள் கிடைப்பதில்லை. சில தருணங்கள் அப்புகைப்படங்களில் உள்ளவர்கள் கூட பொய்யானவர்களாக உள்ளனர்.

சில வேளைகளில் புகைப்படத்தின் பிரகாரம் தமது பெற்றோரை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்வாதரத்தினை மேம்படுத்தி வசதி வாய்ப்புக்களையெல்லாம் செய்தபின்னர் அவர்களும் உண்மையான பெற்றோர் இல்லை என்ற கசப்பான அனுபவங்களையும் சில பிள்ளைகள் கொண்டுள்ளனர் என்றார்.

இவ்வாறான உணர்வுரீதியான விடயத்தினை முன்னெடுக்கும் எவருக்கும் உதவிகளை அளிப்பதற்கு தயாராக இருப்பதாக அமெண்டா ஜோன்சன் குறிப்பிடுகின்றார். அவருடைய மனிதாபிமான முன்வருகை பல உறவுகளுக்கு உறவுப்பாலமாக அமையப்போகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கறுப்பு பைலுடன் சபைக்கு வந்த ஜனாதிபதி...

2025-02-17 21:09:44
news-image

இலங்கையராகவும் தமிழராகவும் இருந்து தமிழில் தேசிய...

2025-02-17 14:25:08
news-image

‘தோட்ட மக்களாகவே’  அவர்கள் இருப்பதற்கு யார்...

2025-02-16 16:19:01
news-image

சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக் கட்சியின் அஸ்தமித்துப்போன...

2025-02-16 15:54:02
news-image

இந்தியா, சீனாவை இலங்கை ஜனாதிபதி எவ்வாறு...

2025-02-16 15:08:22
news-image

நமீபிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர் சாம்...

2025-02-16 15:01:55
news-image

'வார்த்தை தவறும் அரசாங்கமும் பலவீனமான எதிர்க்கட்சியும்'

2025-02-16 14:24:02
news-image

'இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்' என்ற...

2025-02-16 12:44:24
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறந்த வேட்பாளர்கள்...

2025-02-16 12:03:58
news-image

தையிட்டி விகாரை இனஅழிப்பின் குறியீடு

2025-02-16 12:03:38
news-image

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க உறுதியான நிலைப்பாடு...

2025-02-16 12:01:43
news-image

குழப்புகின்ற கட்டமைப்புகள்

2025-02-16 11:53:51