(நெவில் அன்தனி)
இலங்கையில் பிரதான கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டிகள் ஒரு வருடத்துக்கு மேல் நடைபெறாத நிலையில், கால்பந்தாட்டத்துக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் சிட்டி புட்போல் லீக் பிரதான கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியை நடத்தவுள்ளது.
சோண்டர்ஸ், ஜாவா லேன், கலம்போ எவ்.சி. ஆகிய முதல் தர கழகங்களுடன் மொரகஸ்முல்லை, மாளிகாவத்தை யூத் ஆகிய கழகங்களும் பங்குபற்றும் 6ஆவது சிட்டி புட்போல் லீக் தலைவர் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி சனிக்கிழமை 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
நடப்பு சம்பியன் சோண்டர்ஸ் கழகமும் ஜாவா லேன் கழகமும் சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் மோதவுள்ளன.
சோண்டர்ஸ் அணிக்கு இந்த்ரீவ உதாரவும், ஜாவா லேன் அணிக்கு மொஹமத் அலீமும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரது தலைமைகளில் இரண்டு அணிகளிலும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் இடம்பெறுவதால் அப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் பிரதான கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறாத போதிலும், இந்த இரண்டு கழகங்களும் தொடர்ச்சியாக பயிற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளதால் உயரிய தரத்திலான காலபந்தாட்டத்தை எதிர்பார்க்கலாம்.
இந்த சுற்றுப் போட்டி தொடர்பாக நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சிட்டி புட்போல் லீக் தலைவர் ஆர். புவனேந்திரன், 'ஒரு வருடத்துக்கு மேல் பிரதான கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டிகள் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக பல வீரர்கள் கால்பந்தாட்டத்துக்கு விடைகொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகினர். இந்நிலையில், கால்பந்தாட்டத்துக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் இப்போட்டியை நடத்துகின்றோம். இந்த சுற்றுப் போட்டி மூலம் கால்பந்தாட்டம் உத்வேகம் அடையும் என நம்புகிறேன். இப்போட்டிக்கு மொத்தம் 15 இலட்சம் ரூபா செலவாகிறது. எனது சொந்த அனுசரணையிலேயே இந்த சுற்றுப் போட்டியை நடத்துகிறேன்' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 'நாங்கள் வருடா வருடம் பல்வேறு கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்திவருகிறோம். அண்மைக் காலத்தில் நாங்கள் நடத்திய போட்டிகளில் 19 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்டப் போட்டி பெரு வெற்றியைத் தந்தது என்பதை அனைவரும் அறிவர். ஏனெனில், அந்த சுற்றுப் போட்டியில் பங்குபற்றிய பல வீரர் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணியில் இடம்பெற்றனர்' என்றார்.
இதேவேளை, இந்த வருடப் போட்டியில் பிரபல கழகங்களில் ஒன்றான றினோன் கழகம் பங்குபற்றாதது குறித்து வினவியபோது, 'றினோன் கழகம் பங்குபற்றுவதற்கு கால அவகாசம் கோரப்பட்டது. அதற்கு நாங்கள் சம்மதித்தோம். ஆனால், நாட்கள் செல்ல செல்ல அக்கழகத்திடம் இருந்து எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. றினோன் கழகம் பங்குபற்றாதது எங்களுக்கு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் தருகிறது. ஆனால், காலத்தை கடத்த முடியாது என்பதால் வேறு வழியின்றி போட்டியை ஆரம்பித்தோம்' என போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஷபிர் ரஹிம் பதிலளித்தார்.
சிட்டி லீக் தலைவர் கிண்ண சுற்றுப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் ஒன்றரை இலட்சம் ரூபாவும் 2ஆம் இடத்தைப் பெறும் அணிக்கு ஒரு இலட்சம் ரூபாவும் பணப்பரிசு வழங்கப்படும்.
இந்தப் பரிசுத்தொகை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது என புவனேந்திரன் கூறினார்.
இந்த சுற்றுப் போட்டி லீக் சுற்று அடிப்படையில் நடத்தப்படும். ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று ஒரு தடவை எதிர்த்தாடும். 10 போட்டிகளைக் கொண்ட லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பெறும் அணிகள் ப்ளே ஓவ் சுற்றில் விளையாட தகுதிபெறும்.
முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் முதலாவது தகுதிகாண் போட்டியில் விளையாடும். அதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். 3ஆம், 4ஆம் இடங்களைப் பெறும் அணிகள் நீக்கல் போட்டியில் விளையாடும்.
முதலாவது தகுதிகாண் போட்டியில் தோல்வி அடைந்த அணியும், நீக்கல் போட்டியில் வெற்றிபெற்ற அணியும் 2ஆவது தகுதிகாண் போட்டியில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணி முதலாவது தகுதிகாணில் வெற்றிபெற்ற அணியை இறுதிப் போட்டியில் எதிர்த்தாடும்.
லீக் சுற்று, ப்ளே ஓவ் சுற்று ஆகிய இரண்டு சுற்றுகளிலும் நடைபெறும் ஒவ்வொரு போட்டியிலும் அதிசிறந்த வீரர் தெரிவுசெய்யப்பட்டு விசேட விருது வழங்கப்படும்.
முழு சுற்றுப் போட்டியிலும் அதிசிறந்த கோல் காப்பாளர், அதிசிறந்த பின்கள வீரர், அதிசிறந்த மத்திய கள வீரர் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டு விருதுகளுடன் பணப்பரிசுகளும் வழங்கப்படும் என சிட்டி புட்போல் லீக் பொதுச் செயலாளர் அன்டன் ஜோய் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, 'இலங்கையில் பிரதான கழகங்களுக்கு இடையிலான போட்டிகள் கிட்டத்தட்ட ஒரு வருடம் நடத்தப்படவில்லை. இதனால் பிரதான கழகங்களின் வீரர்கள் பெரும் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்தனர். ஆனால், சிட்டி புட்போல் லீக் நிருவாகத்தினர் இந்தப் போட்டியை நடத்த முன்வந்ததன் மூலம் கால்பந்தாட்டத்துக்கு புத்துயிர் அளிக்கப்படவுள்ளது. லீக் நிருவாகிகளின் இந்த முயற்சியை கழகங்களின் சார்பாக பாராட்டுகின்றேன்' என சோண்டர்ஸ் கழகத் தலைவர் இந்த்ரீவ உதார தெரிவித்தார்.
(படப்பிடிப்பு: எஸ். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM