தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதற்கான வீடியோ ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது.

மூன்று நாட்களுக்கு முன் மதுரையில் போராட்டம் நடத்தியவர்கள் விமான நிலையத்தைச் சுற்றிலும் குவிந்து மறியல் செய்து வந்ததால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகளும் சிப்பந்திகளும் குறுக்கு வழியால் மதுரை விமான நிலையத்தை அடைய வேண்டி ஏற்பட்டது.

இதன்போது, விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பாதுகாப்புக்காகப் போடப்பட்டிருந்த முள் வேலிகளின் ஊடாகப் புகுந்தே இவர்கள் குறித்த விமானத்தை அடைய வேண்டி ஏற்பட்டது.

இது தொடர்பான காணொளிக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகளும், ஆண்-பெண் விமானப் சிப்பந்திகளும் முட்கம்பிகளுக்கு உள்ளே புகுந்து மிகுந்த சிரமத்தோடு விமான நிலையத்திற்குள் வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன அதிகாரியொருவர், மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலும் தங்களது பணியைச் செவ்வனே செய்ய முயற்சித்தமைக்காக தமது ஊழியர்களைப் பாராட்டுவதாகவும், அவர்கள் இந்த முயற்சியை எடுத்திராவிட்டால், மதுரை மட்டுமன்றி கொழும்பு விமான நிலையத்திலும் தேவையற்ற குளறுபடிகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.