டெங்கு ஒழிப்பு : நோய்க்காரணி மற்றும் வைரஸின் அளவைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீதா அரம்பேபொல

Published By: Vishnu

15 Jun, 2023 | 05:19 PM
image

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நுளம்புகள் மூலம் டெங்கு பரவுவதால், அனைத்து காய்ச்சல் நோயாளிகளையும் நுளம்புகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற விடயத்தை மக்களிடம் விரைவில் கொண்டு செல்ல வேண்டும் என டெங்கு ஒழிப்பு நிபுணர் குழுவின் தலைவி இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.

எனவே, டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களைப் போன்று டெங்கு நோய்ப் பாதிப்பு உறுதிப்படுத்தப்படும் வரை காய்ச்சல் ஏற்பட்டுள்ள அனைத்து நோயாளிகளையும் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துவதற்கு  மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும்,  அது தொடர்பில் மக்களைத் தெளிவூட்ட ஊடகங்களின் ஆதரவு தேவை எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட மேல்மாகாண உபகுழு புதன்கிழமை (14) மேல்மாகாண தலைமைச் செயலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் கூடியபோதே இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் டெங்கு ஒழிப்புக்கான அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டதுடன், அந்த நிபுணர் குழு மாகாண மட்டத்தில் 09 உப குழுக்களையும் நியமித்துள்ளது.

நிபுணர் குழுவின் தலைவி இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தலைமையில் கூடிய மேல்மாகாண உபகுழு, எதிர்வரும் சில தினங்களுக்குள் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியது.

தற்போதைய சூழ்நிலையானது நோய்க் காரணி மற்றும் வைரஸின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க  வேண்டிய சந்தர்ப்பம் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மருத்துவமனைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்குவைக் கட்டுப்படுத்த தனி வழிகாட்டுதல்களைத் தயாரிக்குமாறு, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, மருத்துவமனைகளில் டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்ட இடத்தில் (Fever Corners) அவர்களை தனிமைப்படுத்தவும், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மூலம் வேறு ஒருவருக்கு நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் குறுஞ்செய்திகள் மூலம் தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு மேலும் அறிவுறுத்தப்பட்டது.

டெங்கு நுளம்புகள் அதிகம் பெருகும் பகுதிகளான பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள்,  அரச மற்றும் தனியார் நிறுவன வளாகங்கள், வியாபார பகுதிகள், கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பகுதிகள் ஆகியவற்றை சோதனையிடுவதற்காக வாரத்தின் ஐந்து நாட்களை ஒதுக்கிக்கொள்ளுமாறும், அப்பகுதிகளை சோதனையிடும் பணிகளுக்கு பொலிஸார் மற்றும் முப்படையினரின் உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறும் சீதா அரம்பேபொல உரிய தரப்புக்களுக்கு அறிவுறுத்தினார்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில்  டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த  உகந்த ஆடைகளை அணிந்து வருவதற்கு அவசியமான ஆலோசனைகளை வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டதோடு அதனை கட்டாயமற்றதாகவும் பெற்றோர்களுக்கு மேலதிக செலவுகளை ஏற்படுத்தாத வகையிலும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நுளம்புகளை விரட்டுவதற்குரிய திரவம் ஒன்றினை பாவனை செய்வது தொடர்பிலான யோசனைகளும் முன்வைக்கப்பட்டன.  

கொவிட் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகளின் போது சிறப்பாக பணியாற்றியிருந்த "டெங்கு தடுப்பு குழு" எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய சீதா அரம்பேபொல, அந்த பிரச்சினைகளை நிவர்த்திக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அவர்களின் உதவிகளை பெற்றுக்கொண்டு வலுவான டெங்கு கட்டுப்பாட்டுச் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.

விசேட தேவையாக கருதி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் போது சுகாதார வைத்திய அதிகாரிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை நிவர்த்திப்பதோடு அவர்களுக்கு அவசியமான வசதிகளை மேம்படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் மாகாண ஆளுநர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அதேபோல் சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுடன் கலந்துரையாடி நடைமுறைத் தகவல்களை அறிந்துகொண்ட பின்னரே  வராந்தம் இடம்பெறும் உப குழு கூட்டத்தில்   வலய சுகாதார பணிப்பாளர்கள்     கலந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேல் மாகாண பிரதமச் செயலாளர் பிரதீப் யசரத்ன, மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்தியர் தம்மிக்க ஜயலத்,  மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் காமினி தர்மசேன, மாகாண நிர்வாகச் செயலாளர்  ஏ.டீ.எஸ்.சதீகா, ஜனாதிபதியினக் சிரேஷ்ட உதவிச் செயலாளர் புத்திகா எஸ்.கமகே, ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் ஷானுக கருணாரத்ன மற்றும் மேல் மாகாண டெங்கு ஒழிப்புக்கான உப குழுவின் உறுப்பினர்கள்,  தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிரமங்கள் இருந்த போதிலும் 16,000 ஆசிரியர்களை...

2024-07-22 23:34:52
news-image

இலங்கையில் சுமார் 2000க்கும் மேற்பட்டவர்களை பலிகொள்ளக்கூடிய...

2024-07-22 22:32:21
news-image

22 ஆவது திருத்தத்தை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவோம்...

2024-07-22 17:16:25
news-image

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வட்டியில்லா...

2024-07-22 22:02:03
news-image

இந்து சமுத்திரத்தின் சுதந்திரம் மற்றும் பிராந்திய...

2024-07-22 21:54:12
news-image

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புனிதஸ்தலத்தில் சமய...

2024-07-22 21:31:10
news-image

22 ஆவது திருத்தம் ஜனாதிபதி தேர்தல்...

2024-07-22 17:15:15
news-image

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் 455 697...

2024-07-22 19:25:35
news-image

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி மக்களின் வரிப்பணத்தை...

2024-07-22 17:18:35
news-image

சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதில் இணையுமாறு வெளிநாட்டு...

2024-07-22 19:10:14
news-image

"தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு" : புரிந்துணர்வு...

2024-07-22 18:38:46
news-image

சுங்கத் திணைக்கள நிர்வாக அதிகாரி மீது...

2024-07-22 17:23:24