யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரை 566 கிலோ மீற்றர் தூரத்தை மூன்று நாட்களில் நடந்து சென்று, சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பொகவந்தலாவையை சேர்ந்த இரட்டையர், தங்களது சாதனை நடைப்பயணத்தை நேற்று (14) புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பித்ததை தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்றைய தினம் (15) பிற்பகல் 2.20 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் இதுவரை 427 கிலோ மீற்றர் தூரத்தை 36 மணிநேரங்களில் கடந்து வந்த மாபெரும் சாதனையை அங்கீகரிக்கும் வகையில், சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இந்த சாதனைக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் இரட்டையருக்கு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு, காலிமுகத்திடல் வரையான இந்த நடைபயண சாதனையே இதுவரை யாரும் முறியடிக்காத ஒன்று என்பதால் கொழும்பிலேயே இந்த இரட்டையரின் நடைபயணம் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது.
அதேவேளை, இந்த இரட்டையர் நேற்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் தங்களது நடைபயணத்தை ஆரம்பிக்கவிருந்த வேளையில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய வாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளால் தகாத முறையில் நடத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், பலர் இவ்விளம் இரட்டையருக்கு ஆதரவும், இவர்களது சாதனை முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்திய பொலிஸாருக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
பொகவந்தலாவை, கொட்டியாக்கலை பகுதியை சேர்ந்த இரட்டையரான ஆர்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் ஆர்.ஏ. தயாபரன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரையான 566 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து சென்று, உலக சாதனை படைப்பதற்காக நேற்று யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக பயணத்தை ஆரம்பிக்க தயாராயிருந்தனர்.
இவ்விரு இரட்டையரின் உலக சாதனைக்கான நடைப்பயணத்துக்கு விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் அனுமதி கடிதம் வழங்கியிருந்தது. அத்தோடு, இவர்களது நடைப்பயண முயற்சிக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒத்துழைப்பு வழங்குவதாக முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடைபயணம் மேற்கொள்ளவிருந்த இரட்டையரோடு, அவர்களை ஊக்கப்படுத்தச் சென்ற பொகவந்தலாவை, நுவரெலியாவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலரும் அங்கே நிற்க, அப்போது பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவரால் இளைஞர்களின் சாதனை முயற்சிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
அதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மதுபானம் அருந்திய நிலையில் அங்கிருந்த இளைஞர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, சட்டையை பிடித்து இழுத்து, அங்கிருந்து துரத்த எத்தனித்ததாகவும், தங்களிடம் பொலிஸார் ஜாதி, இனம் குறித்தும் வீண் வாக்குவாதம் செய்ததாகவும் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் இருவருக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, நீண்ட நேரத்துக்குப் பின்னர், பொலிஸ் மேலதிகாரியின் தலையீட்டில் நிலைமை சுமுகமாகி, போக்குவரத்து பொலிஸாரின் பாதுகாப்பு ஒத்துழைப்போடு சரியாக அதிகாலை 4 மணிக்கு இரட்டையரின் நடைபயணம் ஆரம்பமானது.
யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளத்துக்கு சென்று, அங்கிருந்து கொழும்பை அடைந்துள்ள இவர்கள், காலி நோக்கிய தங்களது நடைபயணத்தை தொடர்ந்து, நாளை 16ஆம் திகதி காலியில் தங்களது பயணத்தை நிறைவு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இன்றைய தினமே கொழும்பு காலிமுகத்திடலில் மிகப் பெரும் சாதனையோடு இந்நடைபயணம் நிறைவுற்றது.
கடந்த காலத்தில் இவ்விருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து காலி வரையிலான 566 கிலோ மீட்டர் தூரத்தை 4 நாட்கள் நடந்தும், புத்தளத்தில் இருந்து சீதுவை வரையிலான 147 கிலோ மீட்டர் தூரத்தினை வெறுமனே 6 மணித்தியாலங்களில் நடந்து பயணித்தும், கொழும்பில் இருந்து பொகவந்தலாவை வரையிலான 184 கிலோ மீட்டர் தூரத்தை 18.5 மணித்தியாலங்களில் நடந்து சென்றடைந்தும் சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM