170 ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு 50 இலட்சம் வசனங்கள்: பின்தங்கிய கிராம ஆசிரியர் சாதனை

Published By: Devika

24 Jan, 2017 | 05:03 PM
image

வெறும் 170 ஆங்கில வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி 50 இலட்சம் வசனங்களைக் கொண்ட கட்டுரையொன்றைத் தயாரித்து, மகாராஷ்ட்ர மாநில ஆசிரியர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

பாலாசாஹேப் சாவன் (37) என்பவர் ஒரு ஆங்கில ஆசிரியர். இவர் மகாராஷ்ட்ராவின் மிகப் பின்தங்கிய மாவட்டமான தஹனுவில் உள்ள பாடசாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் ஆங்கில வார்த்தைகளை ஞாபகத்தில் வைத்திருக்கவும் அவற்றைக் கொண்டு வசனம் அமைக்கவும் சிரமப்படுவதைக் கண்டு வருந்திய இவர், அவர்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்று விரும்பினார்.

அதன்படி, தனது மாணவர்கள் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான வசனங்களை, மிகக் குறைவான வார்த்தைகளைக் கொண்டு அமைக்கத் தொடங்கினார். இதுவே நாளடைவில் உத்வேகமாக மாறவே, மேலும் மேலும் வசனங்களை வடிவமைக்கத் தொடங்கினார்.

இந்த முயற்சியை சாவன் ஆரம்பித்த மூன்றாவது மாதமே இந்திய சாதனைப் புத்தகத்தில் சாதனையாக இது பதியப்பட்டது. அப்போதும் தனது முயற்சியை நிறுத்தாத சாவன், குழந்தைகளுக்கு எப்படி கல்வி புகட்டுவது என்பது குறித்து 50 இலட்சம் வசனங்களைக் கொண்ட பெரியதொரு கட்டுரைத் தொகுப்பை தற்போது பூர்த்தி செய்துள்ளார்.

இதற்காக அவர் பயன்படுத்திய ஆங்கில வார்த்தைகளின் எண்ணிக்கை.... வெறும் 170 தான்! இந்த வார்த்தைகளையே மாற்றி மாற்றி ஒழுங்கமைத்தே இந்தப் புத்தகத்தை சாவன் எழுதியுள்ளார்.

இவரது முயற்சியைப் பெரிதும் பாராட்டும் பாடசாலை அதிபர், தற்போது தங்களது மாணவர்கள் எவரும் ஆங்கிலத்தைக் கண்டு பயப்படுவதே இல்லை என்று பெருமைபடக் கூறுகிறார். மேலும், இதற்குக் காரணமாக இருக்கும் ஆசிரியர் சாவனை தங்களது பாடசாலைக்குக் கிடைத்த பொக்கிஷம் என்றும் குதூகலிக்கிறார்.

இதுபோன்ற முயற்சி இதுவரை செய்யப்படாததால், கின்னஸ் சாதனையாகவும் இது பதியப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right