(நெவில் அன்தனி)
தென் கொரியாவின் ஜியொஞ்சி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 12ஆவது ஆசிய இளையோர் (21 வயதின்கீழ்) வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் சிங்கப்பூரிடம் தனது முதலாவது தோல்வியை இலங்கை தழுவியது.
செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்ற போட்டியில் மிகவும் மோசமாக விளையாடிய இலங்கை 29 - 51 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
தென் கொரியா, புருணை ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மிகத் திறமையாக விளையாடி முழு ஆதிக்கத்துடன் வெற்றியீட்டிய இலங்கை, சிங்கப்பூருடனான போட்டியில் தடுமாற்றம், தவறுகளுக்கு மத்தியில் மிக மோசமாக விளையாடியது.
பல சந்தர்ப்பங்களில் கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்ட இலங்கை, எதிரணிக்கு இரட்டை வாய்ப்புகளை தாராளமாக அள்ளி வழங்கியது.
இரண்டு அணி வீராங்கனைகளும் உடல், உயரம் ஆகியவற்றில் சமமாகத் தோன்றியபோதிலும் ஆற்றல் வெளிப்பாடுகளில் சிங்கப்பூர் வீராங்கனைகள் சிறந்து விளங்கினர்.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததால் அரை இறுதிப் போட்டியில் பெரும்பாலும் நடப்பு சம்பியன் மலேசியாவை சந்திக்கவுள்ள இலங்கை அப் போட்டியில் இதனைவிட கூடுதல் சவாலை எதிர்கொள்ளும் என கருதப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பி குழுவுக்கான போட்டியில் வெற்றிபெறுவதை மாத்திரம் குறிக்கோளாகக் கொண்டு விளையாடிய சிங்கப்பூர் முதலாவது ஆட்ட நேர பகுதியில் மிகத் திறமையாக விளையாடி 11 - 8 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை அடைந்தது.
இரண்டாவது பகுதியில் இலங்கை இழைத்த தவறுகளைப் பயன்படுத்திக்கொண்ட சிங்கப்பூர், அப் பகுதியையும் 10 - 5 என தனதாக்கி இடைவேளையின்போது 21 - 13 என முன்னிலையில் இருந்தது.
இந்த இரண்டு ஆட்ட நேர பகுதிகளிலும் இலங்கை வீராங்கனைகள் சிறந்த புரிந்துணர்வுடன் விளையாடாததுடன் ஏகப்பட்ட தவறுகளை இழைத்து சிங்கப்பூருக்கு கோல்களை தாரைவார்த்தனர்.
இடைவேளையின் பின்னர் இலங்கை வீராங்கனைகள் தவறுகளைத் திருத்திக்கொண்டு விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் கடும் அழுத்தங்களை எதிர்கொண்டதுடன் ஆற்றல்களும் வெளிப்படாமல் போனது.
3ஆவது ஆட்ட நேர பகுதியையும் 15 - 9 என்ற கோல்கள் கணக்கில் தனதாக்கிய சிங்கப்பூர், கடைசி ஆட்ட நேர பகுதியிலும் திறமையாக விளையாடி அப் பகுதியையும் 15 - 7 என தனதாக்கி அபார வெற்றியீட்டியது.
இலங்கை சார்பாக தில்மி விஜேநாயக்க 19 முயற்சிகளில் 16 கோல்களையும் அணித் தலைவி சஜினி ரத்நாயக்க 13 முயற்சிகளில் 9 கோல்களையும் பாஷி உடகெதர 4 முயற்சிகளில் 4 கோல்களையும் போட்டனர்.
சிங்கப்பூர் சார்பாக உஸ்மா ரஷாத் 48 முயற்சிகளில் 37 கோல்களையும் கேப்றியல் நோரா போல் 24 முயற்சிகளில் 14 கோல்களையும் போட்டனர்.
இலங்கை தனது கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை புதன்கிழமை (14) எதிர்த்தாடவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM