அமெரிக்காவின் உதவியுடன் கடந்த 100 நாட்களாக நடத்திய தாக்குதல்களையடுத்து, மொசூலின் கிழக்குப் பகுதி பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக ஈராக் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈராக்கியப் பிரதமர் ஹைதர் அல் அபாதியுடனான சந்திப்பின் பின்னரே அந்நாட்டுப் பாராளுமன்ற பிரதி சபாநாயகர் ஷேக் ஹமாம் ஹமோதி இந்தத் தகவலை வெளியிட்டார்.

மொசூலின் கிழக்குப் பகுதியே ஐஎஸ் தீவிரவாதிகளின் கடைசி பலம் வாய்ந்த பகுதியாக விளங்கியது. இந்தப் பகுதியை மீட்பதற்காக கடந்த சுமார் மூன்று மாதங்களுக்கு முன் அமெரிக்க-ஈராக்கிய கூட்டுப் படைகள் தாக்குதல்களை ஆரம்பித்தன.

மொசூலின் திக்ரிஸ் நதியின் கிழக்குக் கரைப் பகுதியான ரஷீதியா மாவட்டத்தில், கடந்த ஞாயிறன்று ஐஎஸ் மீது அரச கூட்டுப் படைகளுக்கு கடும் தாக்குதல்களை ஆரம்பித்தன. இதை எதிர்கொள்ள முடியாத ஐஎஸ் தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியோடிச் சென்றனர்.

தற்போது, கைப்பற்றப்பட்டுள்ள ரஷீதியாவில் தேடுதல் நடவடிக்கைகள் நடந்த வண்ணமிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.