ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்த இளைஞர்களை, பொலிஸார் களைக்க முற்பட்ட போது, இனந்தெரியாத நபர்கள் சென்னை ஐஸ்அவுஸ் பொலிஸ் நிலையம், வீடு மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு பொலிஸார் தீ வைக்கும் காணொளி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனாவில் அமைதியாக போராடி வந்த போராட்டகாரர்களை பொலிஸார் தடியடி நடத்தி களைக்க முயற்சி செய்தனர்.

மேலும் மெரீனாவிற்குள் வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதைக் கண்டித்து சென்னையில் மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மெரீனாவிற்கு அருகே உள்ள பகுதிகளில் வன்முறைகள் ஏற்பட்டன.

இதன்போது, வாகனங்கள் மற்றும் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களே  வாகனங்களுக்கு தீ வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

ஆனால் பொலிஸ் அதிகாரிகளே வீடு மற்றும் வாகனங்களுக்கு  தீ வைக்கும்  காட்சிகள் பதிவாகியுள்ளன. 

குறிப்பாக போராட்டக்காரர்கள் மீது களங்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் போராட்டத்தை திசை திருப்புவதற்காகவும்  பொலிஸார் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள் என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.