பல்கலைக்கழகங்களில் பாலியல் இலஞ்சம் “உலகெங்கிலும் ஆழ வேரூன்றிய நெருக்கடியைத் தீர்க்க நைஜீரியாவின் முன்னுதாரணம்”

Published By: Vishnu

11 Jun, 2023 | 06:59 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை                                                                

நைஜீரியாவின் பாராளுமன்றம் கடந்த வாரம் முக்கியமான சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த சட்டமூலம் பல்கலைக்கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் இம்சைகள் தொடர்பானது.

இத்தகைய பாலியல் இம்சைகளைத் தடுப்பது சட்டமூலத்தின் நோக்கம். இதன் பிரகாரம், விரிவுரையாளர்கள் பாலியல் நோக்கத்துடன் மாணவ, மாணவியரை அணுகுவது சட்டவிரோதமானது.

ஏந்தவொரு விரிவுரையாளராவது மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்டார் என்பது நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 14 வருடகால சிறைத்தண்டனை கிடைக்கலாம்.

உயர் கல்வி நிறுவனங்களில் பாலியல் இம்சை என்பது புதிய பிரச்சினை அல்ல. அது நைஜீரியாவிற்கு மாத்திரம் பொதுவானதும் அல்ல. இந்தப் பிரச்சினை நீண்டகாலமாக நீறு பூத்த நெருப்பாக கண்ணுக்குத் தெரியாமல் தொடர்கிறது. உலகம் முழுவதும் பல வடிவங்களில் தொடர்கிறது.

இந்த விடயம் தொடர்பாக அமெரிக்கப் பல்கலைக்கழங்கள் சங்கம் ஆய்வொன்றை மேற்கொண்டது. இங்குள்ள 27 பல்கலைக்கழகங்களில் 11.7சதவீத மாணவியர் துன்புறுத்தல்களை அனுபவித்துள்ளார்கள். தம்மை விருப்பமில்லாமல் தொடுவது போன்ற செயல்களை அவர்கள் பட்டியிட்டார்கள்.

ஸ்வீடனில் 77சதவீத மாணவியர் கல்விக் கூடங்களில் பாலியல் இம்சைகளை அனுபவித்துள்ளதாக தெரிவித்தனர். ஆபிரிக்க நாடுகளில் நிலைமை மோசம். இங்கு இரண்டாம் நிலை பாடசாலைகளில் கூட ஆண் ஆசிரியர்களாலும், மாணவர்களாலும் பாலியல் இம்சைக்கு உட்படுத்தப்பட்டதாக 16சதவீதம் முதல் 47 சதவீதம் வரையான பெண்கள் கூறினார்கள்.

இந்த விடயம் பற்றி, கல்வித்துறை சார்ந்த உலகளாவிய ஊழல்கள் என்ற தொனிப்பொருளில் ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் ஆய்வறிக்கையை வெளியிட்டது.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளில் கல்வி கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் பிள்ளைகளை வன்கலவி செய்த சம்பவங்கள் ஏராளம் நிகழ்ந்திருப்பதை ஆதாரங்களுடன் அறிக்கை பட்டியலிட்டது.

உயர்கல்வி நிறுவனங்களில் பாலியல் இம்சை என்பது பொதுவான விடயமாக இருந்தாலும், இந்தப் பிரச்சினைக்குரிய காரணிகளும், பிரச்சினையின் வடிவங்களும் தாக்கங்களும் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகின்றன. 

இந்த வேறுபாடுகள் அதிகாரக் கட்டமைப்பு, சமூக நம்பிக்கைகள், கலாசாரம் போன்றவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டவை. இதனைப் புரிந்து கொள்வதற்கு சில விடயங்களை அறிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

பாலியல் இம்சைப்படுத்தல் என்பது ஒரு வகை பாலியல் பாரபட்சம் தான். பல வழிகளில் பாலியல் பாரபட்சம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. சிலர் சூசகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி, என்னுடன் உறவு கொள்ள வருகிறாயா என்று கேட்பார்கள். 

என்னுடன் உறவு கொண்டால், உனக்கு வேண்டியதை செய்து தருவேனென இன்னும் சிலர் நிபந்தனை விதிப்பார்கள். சிலர் ஆபாச வார்த்தைகளை உச்சரிப்பார்கள். சிலர் விருப்பத்திற்கு மாறாக தொட்டுப் பார்ப்பார்கள்.

தமது பாலியல் இச்சைகளைத் தீர்க்க மாணவிகளை பலிக்கடாக்களாக ஆக்கிக் கொள்ளும் மோசமான விரிவுரையாளர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உனக்கு பரீட்சையில் நல்ல பெறுபேறுகள் வேண்டுமா, அப்படியானால் என் ஆசைக்கு உடன்படு என்பார். என் ஆசையைத் தீர்க்காவிட்டால், உன் படிப்பு நாசமாகி விடும் என்று  அச்சமான சூழ்நிலையை ஏற்படுத்துவார்.

இத்தகைய காமாந்தகர்களின் இச்சையை பூர்த்தி செய்தால் மாத்திரமே தமது பரீட்சையில் தேற முடியும் அல்லது தாம் விருப்பப்பட்ட நிலையை அடைய முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகையில், ஒரு மாணவி பாலியல் இம்சைப்படுத்தலுக்கு உள்ளாவதை தவிர்க்க முடியாமல் போகிறது.

உயர் கல்விக்கூடங்களில் பட்டப்படிப்பை பூர்;த்தி செய்ய வேண்டுமாயின், ஆய்வுக் கட்டுரையை எழுத வேண்டும். அதற்கு மேற்பார்வையாளர் நியமிக்கப்படுவார். ஆய்வுக்கட்டுரை எவ்வாறு எழுதப்பட வேண்டும், அதற்கு எத்தகைய புள்ளிகள் வழங்கப்படும் என்பதையெல்லாம் மேற்பார்வையாளராக இருக்கக்கூடிய விரிவுரையாளர் தீர்மானிப்பார். தீயநோக்கம் கொண்ட விரிவுரையாளர், தமை நாடும் மாணவியை பாலியல் இச்சைக்கு இரையாக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்.

எதேச்சாதிகாரமான, படிமுறைகள் நிறைந்த நிர்வாகக் அதிகாரத்தையும், நம்பிக்கையையும் மிகவும் தவறான முறையில் பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பத்தை விரிவுரையாளர்களுக்கு வழங்குகிறது.

பாதிக்கப்பட்ட மாணவியொருவரின் சார்பில் குற்றச்சாட்டுடன் முறைப்பாடு முன்வைக்கப்படுவதாக கருதுவோம். விரிவுரையாளர்களை பாதுகாக்க முனையும் அதிகாரக் கட்டமைப்பு முறைப்பாட்டைப் புறந்தள்ளும். பிரச்சினையைத் திசை திருப்பும்.

பல்கலைக்கழகங்களில் மோசமான விரிவுரையாளர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தீய நோக்கத்துடன் மாணவிகளை அணுகுவதை எவ்வாறு தடுக்க வேண்டுமென ஆராய்வதைத் தவிர்க்கும். விரிவுரையாளர் அல்ல, சக மாணவனால் தான் உனக்குத் தொல்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும். மாணவர்கள் மத்தியில் அதிகம் குற்றச் செயல்கள் நிகழ்வதாகக் கூறி, அதனைத் தடுப்பதற்குரிய கொள்கைகளை உருவாக்கிய சந்தர்ப்பங்கள் ஏராளம் உண்டு என்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தமக்கு நேர்ந்த விரும்பத்தகாத அனுபவங்களை மாணவிகள் வெளியே சொல்வது கிடையாது. வெளியே சொன்னால் பெயர் கெட்டுவிடும் என்ற அச்சம் பிரதானமான காரணம். சொன்னாலும் பலனிருக்குமா, உதவி கிடைக்குமா என்ற சந்தேகம். எங்கே சொல்வது, யாரிடம் சொல்வது என்ற கேள்வி. புள்ளிகளுக்காக, பதவிக்காக ஆசைப்பட்டு தவிர்க்க முடியாமல் விரிவுரையாளரின் பாலியல் இச்சைக்கு உடன்பட்ட மாணவியென்றால், அது பற்றி குற்ற உணர்வு.

இவை தவிர, தனக்கு நேர்ந்த அனுபவமொன்றும் பாரதூரமானது அல்ல. அதுவழமையானது தான் என்று மாணவிகளை ஆறுதல் கொள்ள வைக்கும் வகையில், சில பல்கலைக்கழங்களில் ஆழமாக ஊடுருவியிருக்கும் சிந்தனைப் போக்கும் இத்தகைய இம்சைப்படுத்தல்களை வெளித்தெரியாமல் மறைத்து விடுகிறது.

பாலியல் இம்சைப்படுத்தலால் பாதிக்கப்பட்ட மாணவியரின் நிலை பரிதாபகரமானது. இத்தகைய மாணவியர் உளரீதியாகவும், உடல் ரீதியாகவும் தீவிரமாக பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு வாழ்க்கையின் மீது எரிச்சலும், அதிருப்தியும், பயமும், அழுத்தமும் ஏற்படுகிறது. 

சிலர் பல்;கலைக்கழகங்களுக்கு வருவதைத் தவிர்க்கிறார்கள். கல்வித் திறமைகள் மழுங்கி விடுகின்றன. இணைப் பாடவிதான செயற்பாடுகளில் அக்கறையில்லாமல் போகின்றது. கல்வியில் இருந்த அர்ப்பணிப்பு காணாமல்போகிறது.

உலகம் முழுவதிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் இத்தகைய பாதிப்புக்கள் நிகழ்ந்தாலும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததை ஆய்வுகள் சுட்டிக்காட்டியிருந்தன. குறிப்பாக, நைஜீரியா, கானா போன்ற நாடுகளில். இங்கு ஆணாதிக்க சமூக கலாசார கட்டமைப்பிற்குள் தமக்கு நிகழ்ந்த அட்டூழியங்கள் குறித்து பெரும்பாலான மாணவிகள் மௌனம் சாதித்தாலும், ஆங்காங்கே எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இந்தக் குரல்களுக்கு அடிபணிய வேண்டிய தேவை அதிகாரிகளுக்கு இருக்கவில்லை.

இத்தகைய சூழ்நிலையில் தான் மூன்றாண்டுகளுக்கு முன்னதாக, பி.பி.சி. நிறுவனம் நிலைமையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இந்த நிறுவனத்தின் செய்தியாளர் மாணவியாக வேடந்தரித்தார். மாணவியென்ற பாத்திரத்தை ஏற்றுக் கொண்டு இரு பல்கலைக்கழகங்களுக்கு சென்றார். விரிவுரையாளர்களை அணுகினார்.

இவரின் உடலில் பொருத்தப்பட்ட இரகசிய கமராக்களின் மூலம் இருமோசமான விரிவுரையாளர்களின் நடத்தைகள் பதிவு செய்யப்பட்டன. இவர்கள் மாணவிகளை இரையாக்க எத்தகைய பசப்பு வார்த்தைகளை பேசுகிறார்கள், நேரடியாக என்னுடன் படுக்கை அறைக்கு வருகிறாயா என்று கேட்காமல் தமது மொழியாற்றலைப் பயன்படுத்தி கபடத்தனமாக நாட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதையெல்லாம் காணொளிப் பதிவுகள் புட்டு வைத்தன.

இதுதவிர, இதுவரை காலமும் பாலியல் இம்சைப்படுத்தல்களால் பாதிக்கப்பட்டு தமது மனக்குமுறல்களை அடக்கி வைத்திருந்த மாணவிகள் பலர், நிகழ்ச்சியின் மூலம் உணர்வுபூர்மாக தமது ஆற்றாமையை வெளிப்படுத்தனார்கள். 

இதன்மூலம், பல்கலைக்கழகங்களில் பாலியல் இம்சைப்படுத்தலும் பாரபட்சமும் எவ்வளவு தீவிரமாக பரவியிருக்கிறது என்பது மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது.

நைஜீரியாவில் மாத்திரமல்ல, உலகின் பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழங்களில் பாலியல் இம்சைப்படுத்தல்களைத் தடுத்து நிறுத்தும் ஏற்பாடுகள் உண்டு. அவை கொள்கைகளாக, விதிமுறைகளாக, ஒழுக்கநெறிக் கோவைகளாக இருக்கலாம். 

இவற்றில் உள்ள ஏற்பாடுகளின் அடிப்படையில், குற்றமிழைத்தவருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்தால், அதற்குரிய பரிகாரங்கள் கிடைப்பதில்லை. பல்கலைக்கழக அதிகாரக் கட்டமைப்புக்களில் விரிவுரையாளர்கள் பலம் பொருந்தியவர்களாக இருப்பதாலோ என்னவோ, முறைப்பாடு திசைதிருப்பப்பட்ட சந்தர்ப்பங்கள் அனேகம் என்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

நைஜீரியாவிற்கு அப்பால், சில நாடுகள் பல்கலைக்கழகங்களில் பாலியல் இம்சைப்படுத்தல்களைத் தடுக்க தேசிய மட்டத்திலான கொள்கைகளை வகுத்துள்ளன. அத்தகைய கொள்கையொன்று பாகிஸ்தானிலும் உண்டு.

இந்நலையில், பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி முழு உலகத்திற்கும் பாதை காட்டியிருப்பதற்காக நைஜீரியாவையும் பாராட்ட வேண்டும் என்று தான் தோன்றுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாவையின் இறுதிச் சடங்குகளில் வீணான பிரச்சினைகளை...

2025-02-08 16:54:26
news-image

நிலையான தீர்வுகளுக்கான தேசிய கொள்கை அவசியம்...

2025-02-07 11:00:58
news-image

பிள்ளையானிற்கு பிணை கிடைக்க உதவிய பசில்...

2025-02-06 16:41:49
news-image

வலிமையானவர்கள் தோல்வியுற்ற இடத்தில் - இலங்கையில்...

2025-02-05 21:23:34
news-image

ஊடகவியலாளர்களே அலட்சியப்படுத்தாது உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்...

2025-02-05 17:05:14
news-image

பாராளுமன்றத்துக்கு வெளியே சுத்தப்படுத்த வேண்டியவை…!

2025-02-05 17:19:24
news-image

லசந்தவின் வாகனச்சாரதியை கடத்தியவர் ; லசந்தவின்...

2025-02-05 16:21:31
news-image

பாரதிய ஜனதாவின் உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சி...

2025-02-05 09:56:52
news-image

எதிர்காலத்துக்காக ஈரநிலங்களைப் பாதுகாப்போம்!

2025-02-04 17:15:47
news-image

இராணுவத்தை போற்றி பாதுகாக்கும் பாரத இந்தியா

2025-02-04 13:34:29
news-image

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயமும் அதன் தாக்கங்களும்

2025-02-04 10:59:53
news-image

முன்னெச்சரிக்கையால் பாதிப்பை குறைத்து புற்றுநோயை வெல்வோம்!...

2025-02-04 11:05:21