மதச் சுதந்திரம் : ஞானம் பெறும் தருணம்

Published By: Vishnu

11 Jun, 2023 | 06:58 PM
image

ஏ.எல்.நிப்றாஸ் 

நாட்டில் மதவெறுப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதிலும், மதச்சுதந்திரத்தை உறுதிசெய்து நல்லிணக்கத்தை பேணுவதிலும் பெருந்தேசியம் என்றுமில்லாத அதீத அக்கறையை வெளிப்படுத்தி வருகின்றது. புதிய சட்டமூலம் ஒன்றைக் கொண்டு வரும் முயற்சிகளும் இடம்பெறுகின்றன. இது அடிப்படையில் பாராட்டுதலுக்கு உரியது. 

இலங்கையில் இஸ்லாமிய மதம் இழிவுபடுத்தப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதிலும் ஏனைய மதச்சிறுபான்மையினரை மட்டம்தட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வேளையிலும் எழுத்தில் இருக்கின்ற சட்டங்களைக் கூட சரியாக அமுல்படுத்தத் தவறிய அரச இயந்திரம் இன்று பௌத்த மதம் கேலிக்குள்ளாக்கப்பட்டவுடன் கண்விழித்து எழுந்திருக்கின்றது. 

ஞானசார தேரர் உள்ளிட்ட கடும்போக்கு துறவிகள் மற்றும் அமைப்புக்கள் வெறுப்பு பிரசாரங்களை மேற்கொண்ட போது, சிங்கள அரசியல்வாதிகள் பலர் நல்லிணக்கத்திற்கு எதிராக பேசிய தருணங்களிலும் வராத மதச்சுதந்திரம் பற்றிய ஞானம், இப்போது ஜெரோம் பெர்ணான்டோ, நடாஷா போன்றோரின் வெறுப்புப் பேச்சுக்களையடுத்து பிறந்திருக்கின்றது என்றும் கூறலம்  

இந்நாட்டில் மதச்சிறுபான்மையினர் மத, இன அடையாளத்தினால் பாகுபாடு காட்டப்பட்ட ஏராளமான சந்தர்ப்பங்களில், எழுத்தில் உள்ள சட்டங்களைக்கூட சரிவர நடைமுறைப்படுத்தாத அரச அதிகாரிகளும், பெருந்தேசியமும், இப்போது புதிய சட்டமூலம் ஒன்று தேவை என்ற நிலைப்பாட்டுக்கு வந்து நிற்பது ஆச்சரியமானதுதான். ஆனாலும் நல்லதொரு மாற்றமாகும். 

இனவாதத்திற்கு தமது கொல்லைப்புறத்தில் வளர்த்தவர்களின் முட்டுக்கொடுத்தலிலேயே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தற்போது இருக்கின்றது. ஆயினும், அதனையும் தாண்டி அரசாங்கத்திற்கு மதசுதந்திரத்தை உறுதிப்படுத்த ஒருகாத்திரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற உத்வேகம் பிறந்தமையானது கவனிப்பிற்குரியது.  

காலம் கடந்தாவது இந்த ஞானம் பிறந்திருக்கின்றது என்பது ஆறுதலான விவகாரம் என்றாலும் கூட, இந்த ஞானம் பிறந்திருக்கின்ற தருணம், இதற்குப் பின்னால் இருக்கக் கூயடிய சூட்சுமங்கள் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுவது இயல்பானது.  

இலங்கையில் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் இருந்து இனவாதம் இருந்து வந்திருக்கின்றது. சுந்திரத்திற்குப் பிறகு அதுவும் 80களிற்குப் பிறகு மதரீதியாக மக்களை நோக்குகின்ற போக்கு உருவானது எனலாம். கடந்த இரு தசாப்தங்களுக்குள் இது வேறொரு பரிணாமத்தை எடுத்துள்ளது என்றும் சொல்ல முடியும். 

இலங்கையில் இனப்பாகுபாட்டுக்கு அடிப்படையான சித்தாந்தங்களை அநகாரிக தர்மபால போன்றோர் தோற்றுவித்தனர் எனக்கருதினால், பிற்காலத்தில் சம்பிக்க ரணவக்க போன்றோர் அதனை புதுப்பித்தனர் எனலாம். இன்றும் சரத் வீரகேசர உள்ளிட்ட கணிசமான அரசியல்வாதிகள் இன நல்லிணக்கத்திற்கு குந்தகமான கருத்துக்களை கூறி வருகின்றனர். 

அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சாணக்கியன் எம்.பி., “மஹி;ந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் வைத்துப் ஆற்றிய உரைகூட வெறுப்புப் பிரசாரம் என்பதை மறந்து விடக்கூடாது” என்று சுட்டிக்காட்டியிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது. இவ்வாறான ஆயிரம் வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. 

ஜூலைக் கலவரம் பல்வேறு பின்புலங்களைக் கொண்டது என்று எடுத்துக் கொண்டாலும் அதற்குப் பின்னரான திகண, அளுத்கம, அம்பாறை மற்றும் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற கலவரங்கள் நேரடியாக முஸ்லிம்களை இன ரீதியாகவும் மதரீதியாகவும் இலக்கு வைத்தவையாக காணப்பட்டன என்பது உலகறிந்த விடயமே. 

முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கும் நோக்கில் பல கட்டுக் கதைகள் சோடிக்கப்பட்டன. கருத்தடைக்கொத்து, கருத்தடை மாத்திரை, கருத்தடை செய்யும் வைத்தியர் என்று பெரும் புரளிகள் கிளப்பி விடப்பட்டன. இதன்மூலம் முஸ்லிம்களும் அவர்களது இன அடையாளம் மற்றும் பொருளாதாரமும் குறிவைக்கப்பட்டன. 

சமகாலத்தில், ‘இஸ்லாமிய மார்க்கம் பயங்கரவாதத்தை போதிக்கின்றது’ என்றும், பள்ளிவாசல்களில் அதற்கான பயிற்சி வழங்கப்படுகின்றது என்றும் அடிப்படையற்ற பரப்புரைகளை ஞானசார தேரர் உள்ளிட்ட பலபௌத்த தேரர்களும் கடும்போக்கு அமைப்புக்களும் முன்னெடுத்தன. 

சஹ்ரான் குழு என்ற மிலேச்சத்தனமான கும்பலின் பயங்கரவாத தாக்குதலானது இப்பிரசாரத்திற்கு சாதமாகிப் போனது. இத்தனைக்கும், இலங்கையின் அரசியலமைப்பிலேயே இன, மத சுதந்திரம் உள்ளடங்கலாக அனைத்து விதமான சுதந்திரங்களையும் உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இருந்தன. பிரயோகிக்கத்தக்க சட்டங்களும் இருந்தன. ஆனால், முஸ்லிம்களுக்கு எதிரான இந்த வெறுப்பு நடவடிக்கைக்கு எதிராக அந்தச் சட்டங்கள் நேர்மையான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 

‘இதுவெல்லாம் இன, மத வெறுப்பு நடவடிக்கைகள் எனவே இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்’ என்று இப்போது போல அப்போதைய ஆட்சியாளர்களோ, பெருந்தேசிய அரசியல்வாதிகளோ இந்தளவுக்கு ஆக்ரோசமாகப் பேசவில்லை. புதிதாக ஒரு சட்டம் தேவை எனக்கூறவில்லை. மாறாக, முஸ்லிம்களுக்காக அல்லது தமிழர்களுக்காக பேசியவர்கள் குறிவைக்கப்பட்டதே நடந்தது. 

எல்லா சமயங்களும் சமமானவையே. ஓவ்வொரு மார்க்கத்திற்கும் உரிய அங்கீகாரமும் சம உரிமையும் வழங்கப்பட வேண்டும். ஒரு பல்லின நாட்டில் எனது சமயம்தான் உயர்ந்தது என்று பேசுவதற்கு இடமளிக்கக் கூடாது. அது வேண்டத்தகாத விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். 

அந்த வகையில், புனித பௌத்த மதத்தை இழிவுபடுத்திய  ஜெரோம் பெர்ணான்டோவுக்கும். நடாஷா எதிரிசூரியவுக்கும் அதேபோன்று நடாசாவின் கருத்துக்களை பகிர்ந்த புருனே திவாகரா ஆகியோருக்கு எதிராக சட்டம் துரிதகதியில் பாய்;ந்திருக்கின்றமை பொதுவாக நாட்டு மக்களுக்கு ஆறுதலிக்கின்ற செய்தி என்பதை யாரும் மறுக்க முடியாது. 

இந்த தருணத்;தில் சில வரலாற்று சம்பவங்களை திரும்பிப் பார்க்க வேண்டும். அதாவது, இதற்கு முன்னர் அரசியல்வாதிகள், பௌத்த துறவிகள், கடும்போக்கு அமைப்புக்கள் இன, மதவாதத்தை கக்கிய போது, எழுத்தில் இருந்த சட்டம் நடைமுறைக்கு வரவில்லை. இவர்களைப் போல அவர்களும் கைது செய்யப்படவில்லை. 

அவ்வாறு கைது செய்யப்படாதது ஏன் என்ற கேள்வியை முன்னான் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரும் எழுப்பியுள்ளமை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. 

அதுமட்டுமன்றி. மேற்குறிப்பிட்ட வெறுப்புக் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பலர் பகிர்ந்தது மட்டுமன்றி   பல தேசிய ஊடகங்களும் பகிரங்கமாக ஒரு முக்கிய செய்தியைப் போல தொடராக வெளியிட்டன. அப்போதெல்லாம், ‘இதனைக் கட்டுப்படுத்த வேண்டும்’ என்ற வேகம் அரச இயந்திரத்திற்கு ஏற்படவில்லை. அதற்கான காரணத்தையும் மக்கள் அறியாதவர்களல்லர். 

கடந்த காலத்தில் இலங்கையில் இனவாதம் பேசிய சிங்கள அரசியல்வாதிகள் மதச் சிறுபான்மையினரை நோக்கி வெறுப்புப் பேச்சுக்களை மட்டுமன்றி வன்முறைகளையும் தூண்டிவிட்ட கடும்போக்கு செயற்பாட்டாளர்களை நோக்கி சட்டம் இதே வீச்சில் அப்போது பாய்ந்திருந்தால். இப்போது ஜெரோமுக்கும் நடாசாவுக்கும் பௌத்த மதத்தை கொச்சைப்படுத்தும் தைரியம் வந்திருக்காது. 

இலங்கையில் நடக்கின்ற ஒவ்வொரு நகர்வுக்குப் பின்னாலும் ஒரு உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் நிகழ்ச்சி நிரல் இருந்தது, இருக்கின்றது. 2010ஆம் ஆண்டுக்குப் பின்னரான இனவாதமும் 2019ஏப்ரல் பயங்கரவாதமும் எந்த நோக்கத்தை கொண்டவை என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அதுபோல, ஜெரோம்கள், நடாஷாக்களுக்கு பின்னாலும் மறைகரங்கள் இருக்கலாம் என்பது உண்மைதான். 

ஆயினும், ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள இன, மத உரிமைகளும் சிவில் சட்டங்களில் உள்ள ஏற்பாடுகளும் கடந்த காலங்களில் நேர்மையான முறையில் பக்கச்சார்பின்றி நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், இன்று ஏற்பட்டிருக்கின்ற நிலை தோன்றியிருக்காது. புதிய சட்ட ஒன்றின் நிர்ப்பந்தமும் உணரப்பட்டிருக்காது என்பதையே இந்தப் பத்தி உரைக்க விளைகின்றது. 

ஆனால், அதனைச் செய்யத்தவறிய பெருந்தேசியமும் அரசாங்கங்களும் இப்போது மட்டும் என்றுமில்லாத அக்கறையை வெளிப்படுத்துகின்றமை பல கேள்விகளைத் தோற்றுவிக்கின்றது. புதிய சட்டத்தை கொண்டு வந்தோ அல்லது தற்போதுள்ள சட்டங்களின் மூலமோ மதச்சுதந்திரம் எல்லா மதங்களுக்கும் சமமாக உறுதிப்படுத்தப்படுமா என்பதுதான் முதன்மைக்  கேள்வியாகும்.   

உண்மையிலேயே சட்டங்கள் இல்லாத பற்றாக்குறை நிலை என்பது இலங்கையில் இல்லை.மாறாக, பல்லின மக்கள் நல்லிணக்கத்துடனும் சுதந்திரமாகவும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே எழுத்தில் உள்ளன. எனவே இங்குள்ள   பிரச்சினை சரிவர அவற்றை அமுல்படுத்துவதாகும். 

எனவே, முறையான அமுலாக்கத்திற்கான அடிப்படையை உறுதிப்படுத்தாமல் புதிதாக சட்டமொன்றை கொண்டு வருவதால் மட்டும் இலங்கைச் சூழலில் எந்த அர்த்தமுள்ள மாற்றமும் ஏற்பட்டு, இன - மத நல்லிணக்கம் உறுதிப்படுப்படுத்தப்பட்டு விடும் என்று கண்ணை மூடிக் கொண்டு நம்பிக் கொண்டிருக்க முடியாது. அதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும். 

அந்த வகையில்;, தற்போதைய அரசாங்கமானது ஏதோ ஒரு புள்ளியில், மதச் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டிருக்கின்றமை மிகவும் மகிழ்ச்சியானதும், பாராட்டத்தக்கதுமாகும். காலம் கடந்த இந்த ஞானம், நேர்மையுடனும் நடுவுநிலையுடனும் நிலைபெறுமாக இருந்தால் நாடு நலம் பெறும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right