என்.கண்ணன்
“தெற்கின் அரசியல் சக்திகளுக்கு இனவாத அரசியலை தீவிரமாக முன்னெடுப்பதற்கு ஒரு பொது எதிரி தேவை. அந்த எதிர்ப்பு அரசியலின் மையமாக இப்போது மாற்றப்பட்டிருப்பவர் தான் கஜேந்திரகுமார்”
தீவிரமான ஒற்றையாட்சி அரச எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்ட, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கைது செய்யப்பட்டது வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்திருக்கிறது.
முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பல சந்தர்ப்பங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். பொலிஸாரால் தூக்கிச் செல்லப்பட்டு பற்றைக்குள் வீசப்பட்டும் இருக்கிறார்.
ஆனால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதற்கு முன்னர் எந்தச் சந்தர்ப்பத்திலும் கைது செய்யப்பட்டதில்லை.
இவ்வாறானதொரு நிலையில் மருதங்கேணியில் இடம்பெற்ற சம்பவம் அவருக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியிருப்பதுடன், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துகின்ற அளவுக்கு கொண்டு சென்றிருக்கிறது.
மருதங்கேணியில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் உண்மையானவையாகத் தெரியவில்லை.
கஜேந்திரகுமார் தரப்பில் வெளியிடப்படும் தகவல்களிலும் குழப்பங்கள் உள்ளன. பொலிஸ் தரப்பின் தகவல்களிலும் மழுப்பல்கள் இருக்கின்றன.
கஜேந்திரகுமாரை துப்பாக்கியால் இலக்கு வைத்த முயற்சியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி காண்பித்தது.
புலனாய்வுப் பிரிவினர் துப்பாக்கியுடன் காணப்பட்டனர், அதனை அவர்கள் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். பரீட்சை மண்டபத்துடன் ஒட்டியிருந்த மைதானத்தில் நடத்தப்பட்ட கூட்டம் தான் பிரச்சினைக்கு காரணம்.
பரீட்சை மண்டபத்துக்குள் யாரும் நுழையக் கூடாது. கூட்டங்களை நடத்தக் கூடாது. ஆனால், அதற்கு அருகில் கூட்டங்களை நடத்தக் கூடாது என்ற விதிமுறை இருப்பதாக தெரியவில்லை.
பரீட்சை மண்டபத்தில் இருந்து மைதானத்தைப் பிரிக்கும் தெளிவான எல்லை வேலி காணொளிகளில் காணப்படுகிறது.
எனவே அந்தக் கூட்டத்தை தடுக்க வேண்டிய அவசியம் பொலிஸாருக்கு இல்லை. பரீட்சை மண்டபத்தை ஒட்டி நடக்கும் கூட்டத்தை தடுக்க வேண்டுமாயின், பொலிஸார் அதுபற்றிய அறிவித்தலை பகிரங்கமாக- உத்தியோகபூர்வமாக கொடுத்திருக்க வேண்டும்.
அதற்கு சிவில் உடையில் புலனாய்வுப் பிரிவினரை அனுப்ப வேண்டியதில்லை. சீருடையுடன் சென்றிருக்கலாம். புலனாய்வுப் பிரிவினரை அனுப்பியிருந்தாலும், அவர்கள் அங்கு சென்று தமது அடையாளத்தைக் காண்பித்து, நிலைமையை விளக்கியிருக்கவில்லை.
அவர்கள் மறைந்திருந்து சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்டதுடன், அடையாள அட்டையை காண்பித்து தங்களை நிரூபித்துக் கொள்ளவும் தயங்கியிருக்கின்றனர் என்பதை காணொளிகள் எடுத்துக் காட்டுகின்றன.
அந்தச் சந்தர்ப்பத்தில் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் தப்பியோட முனைந்ததும், அவரை கஜேந்திரகுமார் பிடித்து இழுக்க முயன்றதும், அவர் தாக்கி விட்டு தப்பிச்செல்வதும் தெளிவாக பதிவாகியுள்ளது.
பொலிஸாரைத் தாக்கி, அவரது கடமையை செய்யவிடாமல் தடுத்ததாக, மோசமான வார்த்தைப் பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏற்பட்ட ஒன்று.
பொலிஸார் அதிகாரபூர்வமாக செயற்படத் தவறியதன் விளைவு.
மருதங்கேணிப் பொலிஸாருக்கும் கஜேந்திரகுமாருக்கும் ஏற்பட்ட இந்தப் பிணக்கை அடுத்து, அங்கு சென்ற பொலிஸ் அதிகாரி, சம்பந்தப்பட்டவர்களை தண்டனை இடமாற்றம் செய்வதாக கூறியிருக்கிறார்.இது அந்த இடத்தில் தவறை ஏற்றுக் கொண்டதாகவே அர்த்தம்.
ஆனால் பொலிஸ் பேச்சாளரோ, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு பாதுகாப்பு வழங்கச் சென்ற பொலிஸாரே தாக்கப்பட்டதாக கூறியிருக்கிறார்.
பாதுகாப்பு வழங்கச் சென்ற பொலிஸார் ஏன் பதுங்கியிருக்க வேண்டும்? அதனை பாராளுமன்ற உறுப்பினரிடம் கூறிவிட்டு தங்களின் கடமையை செய்திருக்கலாமே.
புலனாய்வுப் பிரிவினர் உளவுபார்க்கச் சென்றனர் என்பதே உண்மை. அதில் குழப்பம் ஏற்பட்டதும் தான். பரீட்சை மண்டபம் என்றும், தாக்க முயன்றதாகவும், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டு கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
7 கோடி ரூபா தங்கத்தை கடத்தி வந்த பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை கைது செய்யாமல் அபராதத்துடன் விடுவித்து விட்டு, கஜேந்திரகுமாரைக் கைது செய்தது தவறு என்று பாராளுமன்றததில் எதிர்க்கட்சி உறுப்பினர் துசார இந்துனில் குற்றம்சாட்டினார்.
போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டுப் பெற்ற அமைச்சர் டயானா கமகேவை கைது செய்யலாம் என்று நீதிமன்றம் கூறியிருந்தும் அதனை செய்யாத பொலிஸ், நீதிமன்ற பிடியாணை இல்லாமல், கஜேந்திரகுமாரைக் கைது செய்திருக்கிறது என்று பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார் எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார.
மருதங்கேணி சம்பவத்தில், கஜேந்திரகுமாரை குற்றவாளியாக்க முனையும் பொலிஸார், அந்த இடத்திலும், அவரைக் கைது செய்யும் விடயத்திலும் அத்துமீறி நடந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.
இந்தச் சம்பவங்களை வைத்து ஒரு இனவாத அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. அரசியல் நலன்களை முன்னிறுத்தியே காய்கள் நகர்த்தப்படுகின்றன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டும் இதில் தொடர்புபடவில்லை. அரசாங்கமும் கூட இந்த விடயத்தில் தொடர்புபட்டிருக்கிறது.
வடக்கு, கிழக்கை மையப்படுத்திய- தமிழருக்கு எதிரான உணர்வுகளை வைத்து, இனவாத்தை முன்னிறுத்தி அரசியல் செய்து பழக்கப்பட்டது தென்னிலங்கை என்பது அனைவருக்கும் தெரியும்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டதற்கு, உதய கம்மன்பில நன்றி தெரிவிக்கும் அளவுக்கு இந்த இனவாத அரசியல் கூர்மையானது என்பது இரகசியமான ஒன்று அல்ல.
அண்மைக்காலங்களாக வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகள் அபகரிக்கப்படுவது, பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்படுவது,போன்ற அச்சுறுத்தல்கள் தீவிரம் பெற்றிருந்தாலும், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் அதற்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்திருக்கவில்லை.
இன்னமும் ரணில் விக்கிரமசிங்கவை அவர்கள் ‘தங்க முட்டை போடும் வாத்து’ என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் போலும்.
அவரிடத்தில் இருந்து தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நப்பாசையில், நல்லெண்ணத்தைக் காட்டுவதற்காக அரச எதிர்ப்பு போராட்டங்களில் அவர்கள் அக்கறை செலுத்துவதில்லை.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாத்திரமே அங்காங்கே போராட்டங்களை நடத்துகிறது. அதில் அரசியல் இல்லை எனக் கூற முடியாது. தையிட்டி விகாரைக்கு எதிரான அவர்களின் போராட்டம் தொடர்பா பல்வேறு விமர்சனங்கள் உள்ளன.
ஆனாலும் தையிட்டி விகாரைக்கு எதிரான அழுத்தமான எதிர்ப்பை தெரிவித்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டும் தான் என்பதில் சந்தேகமில்லை.
பெரும்பாலான தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தீவிர மென்போக்கில் செயற்படும் நிலையில், தெற்கில் இனவாத அரசியல் செய்யும் தரப்புகளுக்கு தீனி கிடைக்காத நிலை காணப்பட்டது.
தமிழர் விரோதச் செயற்பாட்டு அரசியலின் ஊடாகவே சிங்கள மக்களைக் கவர முடியும் என்ற நிலையில், அதற்கான சூழல் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டதன் ஊடாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
வடக்கில் தீவிர நிலைப்பாடு கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலையெடுக்கிறது என்பதை வைத்தே, தெற்கில் அரசியலை அவர்களால் சுலபமாக முன்கொண்டு செல்ல முடியும்.
முன்னர், செல்வநாயகம், பின்னர் அமிர்தலிங்கம், அதன் பிறகு பிரபாகரன், அதனைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று வடக்கின் அரசியல் போராட்டங்களை நடத்தியவர்களே தெற்கின் அரசியலில் எதிர்ப்பு மையங்களாக - பிரசார இலக்குகளாக காணப்பட்டனர்.
இப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவிழந்து விட்டது, அது இப்போது யார் கையில் இருக்கிறது என்ற குழப்பத்தில் இருந்து தமிழ் மக்களே விடுபடவில்லை.
இவ்வாறான நிலையில், தெற்கின் அரசியல் சக்திகளுக்கு இனவாத அரசியலை தீவிரமாக முன்னெடுப்பதற்கு ஒரு பொது எதிரி தேவை.
அந்த எதிர்ப்பு அரசியலின் மையமாக இப்போது மாற்றப்பட்டிருப்பவர் தான் கஜேந்திரகுமார்.
இந்த நிலை கஜேந்திரகுமாரின் கையை மீறி ஏற்பட்டிருக்கும் ஒன்றாகவே தெரிகிறது.
இனி அவரை வைத்து தான் தெற்கு அரசியல் கட்டியெழுப்பப்படும் வாய்ப்புகள் உள்ளன. இது வடக்கில் அவர் எழுச்சி பெறுவதற்கான சூழலை உருவாக்கினாலும் ஆச்சரியமில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM