நேர்காணல் :- நா.தனுஜா
படப்பிடிப்பு :- எஸ்.எம்.சுரேந்திரன்
போராட்டம் நடத்துவோருடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்
மரணச்சான்றிதழ் வழங்கினாலும் விசாரணைகள் தொடரும்
மனிதப்புதைகுழிகள் குறித்து ஆராய்வோம்
இனங்களுக்கு இடையிலான நம்பிக்கையீனத்தைத் தகர்க்கவேண்டும்
காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின்மீது நம்பிக்கைவைத்து முறைப்பாடளித்த அனைவருக்குமான நீதியை நாம் நிச்சயமாகப் பெற்றுக்கொடுப்போம் என்று உறுதியளித்துள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த, வட, கிழக்கில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல்போனோரின் குடும்பங்களின் பிரதிநிதிகள் அவர்களது கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் எம்முடன் பேசவிரும்பினால், நாம் அதற்கு முழுமனதுடன் தயாராக இருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
கேள்வி - காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையின் பிரகாரம் காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதிலும் பார்க்க, காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைக் கண்டறிவதற்கே முன்னுரிமையளிக்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
பதில் - ஆம், நிச்சயமாக ஏற்றுக்கொள்கின்றேன். இழப்பீடு என்பது குறித்தவொரு நபர் காணாமல்போனதன் விளைவாக அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பை அல்லது சுமையை ஈடுசெய்வதற்காக வழங்கப்படும் நிதியேயாகும். மனித உயிருக்கான விலையை ஒருபோதும் நிர்ணயிக்கமுடியாது. இருப்பினும் காணாமல்போனவர் குறித்த முறைப்பாடு எமக்குக் கிடைக்கப்பெற்றதன் பின்னர், எமது பூர்வாங்க விசாரணைகளின்போது காணாமல்போன நபருக்கும் முறைப்பாடளித்த நபருக்கும் இடையிலான உறவுமுறை குறித்து நாம் உறுதிப்படுத்திக்கொள்வோம். அதன்போது அக்குடும்பத்துக்கு ஏதேனும் தேவைகள் உள்ளனவா என்பது பற்றியும் கேட்டறிவோம். அவற்றைப் பூர்த்திசெய்யும் நோக்கிலேயே இந்த இழப்பீடு வழங்கப்படுகின்றது. ஆனால் காணாமல்போன நபருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைக் கண்டறிவதே எமது பிரதான நோக்கமாகும்.
கேள்வி - அவ்வாறெனில் காணாமல்போன நபருக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்கு முன்னதாக அவர் தொடர்பில் மரணச்சான்றிதழோ அல்லது காணாமல்போனமைக்கான சான்றிதழோ வழங்குவது ஏற்புடையதா?
பதில் - அனைத்து மனிதர்களுக்கும் சிவில் உரிமைகள் உள்ளன. உதாரணமாக, குறித்தவொரு நபர் உயிரிழந்திருந்தால் அவருடைய வீடு, காணி, வங்கியிலுள்ள பணம் என்பன அவரது குடும்பத்தாரையோ அல்லது அவரை சார்ந்தோரையோ சென்றடையவேண்டுமல்லவா? அதேபோன்று ஒருவர் காணாமல்போனதன் பின்னர் அவருடைய சொத்துக்களை அல்லது தமக்கும் பங்குள்ள சொத்துக்களை அந்த நபரின் குடும்பத்தார் அல்லது அவரை சார்ந்தவர்கள் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டுமல்லவா? காணாமலாக்கப்படுதல் ஒரு குற்றம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவர் காணாமல்போனமைக்காக அவரது சொத்துக்கள் முழுவதும் அரச உடைமையாக வேண்டுமென்ற அவசியம் இல்லை அல்லவா? எனவே இத்தகைய விவகாரங்களில் காணாமல்போன நபர்களின் குடும்பத்தினர் முகங்கொடுக்கக்கூடிய சட்டரீதியான சிக்கல்களை நிவர்த்திசெய்யும் நோக்கில், அக்குடும்பங்களின் கோரிக்கைக்கு அமைவாகவே மரணச்சான்றிதழோ அல்லது காணாமல்போனமைக்கான சான்றிதழோ வழங்கப்படுகின்றது. இருப்பினும் அச்சான்றிதழ் வழங்கப்படுவதுடன் அந்நபர் தொடர்பான விசாரணைகள் முடிவுறுத்தப்படாது. உண்மையைக் கண்டறிவதை முன்னிறுத்தி விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
கேள்வி - காணாமல்போனோர் அலுவலகத்தை, வடக்கு - கிழக்கிலுள்ள குடும்பங்கள் தொடர்ந்து புறக்கணித்துவருகின்ற நிலையில் அவர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதில் நீங்கள் அடைந்திருக்கும் தோல்விக்குக் காரணம் என்ன?
பதில் - உண்மையில் இது அரசியல் சார்ந்ததொரு கருத்தியலாகும். ஏனெனில் தெற்கிலுள்ள பெரும்பாலான அரசியல்சார் அமைப்புக்கள் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை நம்பவேண்டாம் என்று கூறுவதில்லை. மாறாக இயலுமானவரையில் காணாமல்போனோர் அலுவலகத்திடம் முறைப்பாடளித்து, கிடைக்கக்கூடிய நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறே வலியுறுத்துகின்றன. இருப்பினும் வடக்கைப் பொறுத்தமட்டில் குறித்தவொரு தரப்பினர் இவ்விவகாரம் தொடர்பில் சர்வதேச பொறிமுறையொன்றைக் கோருமாறு தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். எனவே இது முற்றுமுழுதாக அரசியல் நோக்கம் கொண்டதாகும். எமது அலுவலகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் நீண்டகாலமாக வடக்கில் வசித்த ஓர் தமிழராவார். அதேபோன்று எமது அனைத்துப் பிராந்திய அலுவலகங்களிலும் பணியாற்றுவோர் தமிழ்மொழி பேசக்கூடியவர்கள் என்பதுடன் பெரும்பான்மையானோர் அந்தந்தப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். எனவே இங்கு இனம் சார்ந்த எந்தவொரு பிரச்சினையும் இல்லை.
நான் இவ்வலுவலகத்தின் தவிசாளராகக் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பொறுப்பேற்றுக்கொண்டேன். காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்ட காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், தற்போது அலுவலகத்தின் செயற்பாடுகளில் பெருமளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அதன்விளைவாக பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் முன்னரை விடவும் தற்போது எமது அலுவலகத்தின் மீதான நம்பிக்கை உயர்வடைந்திருக்கின்றது. அதேபோன்று காணாமல்போனோர் பற்றிய அலுவலகமானது நீதியைப் பெற்றுக்கொடுக்கும் என்ற உணர்வைப் பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் ஏற்படுத்தக்கூடியவாறு மனிதாபிமான ரீதியிலேயே செயற்பட்டுவருகின்றோம்.
கேள்வி - வட, கிழக்கில் காணாமல்போனோரின் குடும்பங்கள் இணைந்து சுமார் 2000 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற நிலையில் அவர்களது நிலைப்பாட்டுக்கு அரசியல் ரீதியான கருத்தியல் பின்னணியையோ, தூண்டுதலையோ காரணமாகக் கூறமுடியாதல்லவா?
பதில் - தற்போது வட, கிழக்கு மாகாணங்களில் சுமார் 85 சதவீதமான குடும்பங்கள் எமது அலுவலகத்திடம் முறைப்பாடளிப்பதற்காக வருகைதந்துள்ளன. நாம் எமது பிராந்திய அலுவலகங்களுக்கு விஜயம் மேற்கொள்ளும்போது, ஒருபுறம் போராட்டங்கள் இடம்பெறும் .
அதேவேளை, மறுபுறம் பலர் வருகைதந்து எம்மிடம் முறைப்பாடளித்திருக்கின்றனர். எம்மிடம் முறைப்பாடளித்து, நன்றாக உரையாடிவிட்டு, பின்னர் போராட்டத்தில் இணைந்துகொள்பவர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் ஏன் இரண்டுக்கும் செல்கின்றார்கள் என்பதை எம்மால் புரிந்துகொள்ளமுடியவில்லை. இல்லாவிட்டால் இருதரப்பினரிடமும் அவர்கள் ஒரேவிதமான எதிர்பார்ப்பைக்கொண்டிருக்கக்கூடும்.
எதுஎவ்வாறெனினும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின்மீது நம்பிக்கைவைத்து முறைப்பாடளித்த அனைவருக்குமான நீதியை நாம் நிச்சயமாகப் பெற்றுக்கொடுப்போம். நாம் எவ்வித அழுத்தங்களுமின்றி சுயாதீனமாகவே இயங்கிவருகின்றோம். ஆகவே எம்மீது நம்பிக்கைவைக்குமாறு பாதிக்கப்பட்ட தரப்பினரைக் கேட்டுக்கொள்ளும் அதேவேளை, எமது அலுவலகத்துக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மேலும் வட, கிழக்கில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் குடும்பங்களைச்சேர்ந்த பிரதிநிதிகள், அவர்களது கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் எம்முடன் பேசவிரும்பினால், அதற்கு நாம் முழுமனதுடன் தயாராக இருக்கின்றோம்.
கேள்வி - சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சர்வதேச கட்டமைப்புக்களால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் இலங்கையில் 60,000 - 100,000 வரையானோர் காணாமல்போயிருக்கக்கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட உத்தியோகபூர்வ கட்டமைப்பான காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தரவுகளின் பிரகாரம் வெறுமனே 21,374 முறைப்பாடுகள் அல்லவா கிடைக்கப்பெற்றுள்ளன?
பதில் - சர்வதேச நாம் எமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை மாத்திரம் அடிப்படையாகக்கொண்டு தரவுகளைத் தயாரிக்கவில்லை. மாறாக நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் களத்தில் பணியாற்றுவதற்கு அனுமதியளிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றிடமிருந்தும் எமது நாட்டில் இயங்கிய முன்னைய ஜனாதிபதி ஆணைக்குழுக்களிடமிருந்தும் தரவுகளைப் பெற்றிருக்கின்றோம். எம்மிடம் முறைப்பாடளிக்காதவர்கள்கூட அக்கட்டமைப்புக்களிடம் முறைப்பாடளித்தனர் அல்லவா?
'இலங்கையில் இத்தனை பேர் காணாமல்போயுள்ளனர்' என்று கூறுகின்ற எவரிடமும் அந்த நபர்களின் பெயர்கள், எங்கே, எப்போது காணாமல்போயினர் என்பது குறித்த விபரங்கள் அடங்கிய பட்டியல் இல்லை. அவ்வாறானதொரு விபரப்பட்டியல் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திடம் மாத்திரமே உள்ளது. எனவே இதுவரையில் எமது அலுவலகத்திடம் முறைப்பாடளிக்காதவர்கள் இருப்பின், அவர்களாக முன்வந்து முறைப்பாடளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
கேள்வி - மன்னார், மாத்தளை, ஹோகந்த போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழிகள் தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் எவை?
பதில் - கடந்தகாலத்தில் மன்னார் மனிதப்புதைகுழி தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் சில நடவடிக்கைகளை முன்னெடுத்தது. தற்போதும் அவற்றைத் தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றோம்.
கேள்வி - காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் என்ற ரீதியில் கடந்த ஒன்றரை வருடகாலத்தில் நீங்கள் ஆற்றிய பணி குறித்துத் திருப்தியடைகின்றீர்களா?
பதில் - இந்த நாட்டில் இலவசக்கல்வியின் மூலம் கல்விபயின்ற நான், அதனை மீண்டும் நாட்டுக்குத் திருப்பிச்செலுத்தவேண்டும் என்றும் நாட்டுக்கு சேவையாற்றவேண்டும் என்றுமே விரும்புகின்றேன். இப்பணியை அத்தகையதோர் சேவையாகவே கருதுகின்றேன். எமது நாட்டில் இனங்களுக்கு இடையில் நிலவும் நம்பிக்கையீனமே முக்கிய பிரச்சினையாகும். இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவேண்டுமானால், முதலில் அவர்கள் மத்தியில் காணப்படும் சந்தேகத்தை இல்லாதொழிக்கவேண்டும். அதனை முன்னிறுத்தியே நாம் செயலாற்றிவருகின்றோம். 'இலங்கையர்' என்ற தனித்த அடையாளத்தைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM