குஜராத்தின் வதோதரா நகரில், ரயிலில் பயணித்த பொலிவுட் சுப்பர் ஸ்டார் ஷாருக் கானைக் காண வந்த கூட்ட நெரிசலில் சிக்கி உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் பலியானார்.

நாளை வெளியாகவுள்ள ‘ரயீஸ்’ என்ற தனது புதிய திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் ஒன்றாக, மும்பையில் இருந்து டெல்லி வரை ஷாருக் கான் ரயிலில் பயணித்தார். இதன்போது வதோதரா ரயில் நிலையத்துக்கு ஷாருக் பயணித்த ரயில் நேற்றிரவு சுமார் 10.30 மணியளவில் வந்து சேர்ந்தது.

ஷாருக்கின் வருகையை அறிந்த அவரது ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கில் ரயில் நிலையத்தில் திரண்டனர். ஒரு முறையேனும் அவரைப் பார்த்துவிடவேண்டும் என்ற வெறித்தனமான ஆவலில், ஷாருக் பயணித்த ரயிலை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.

பத்து நிமிடத்தின் பின் ரயில் மீண்டும் புறப்படவே ரசிகர்களும் ரயிலுடன் சேர்ந்து ஓடத் தொடங்கினர். இதன்போது மக்கள் வெள்ளத்தில் சிக்கிய ஃபர்ஹீத் கான் பத்தான் என்ற உள்ளூர் அரசியல்வாதி மூச்சுத் திணறி மரணமடைந்தார். கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸாரும் காயமடைந்தனர்.

ஷாருக்கைக் காண்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் சகோதரர்களுமான இர்பான் பத்தான் மற்றும் யூசுப் பத்தான் ஆகியோரும் வதோதரா ரயில் நிலையத்துக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.