தயாரிப்பு: அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் & எஃப்ரியாஸ் ஸ்டுடியோஸ்
நடிகர்கள்: அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் மற்றும் பலர்.
இயக்கம்: விக்னேஷ் ராஜா
மதிப்பீடு: 3.5 / 5
குடும்பங்களில் இருக்கும் உறவுகளுக்கிடையே தன்னிகரற்ற அன்பு பகிரப்பட வேண்டும் என்பதனை எதிர் நிலையாக உணர்த்தியிருக்கும் படைப்பு 'போர் தொழில்'.
முதன் முதலாக ஆர். சரத்குமாரும், அசோக் செல்வனும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் 'போர் தொழில்'. படத்தைப் பற்றி இணையதளம் முழுவதும் விளம்பரப்படுத்தி, இளம் தலைமுறை பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார்கள் பட குழுவினர். இந்நிலையில் கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், வழக்கமான பாணியில் அமைந்திருக்கிறதா? அல்லது வித்தியாசமான பாணியில் அமைந்திருக்கிறதா. என்பதனை தொடர்ந்து காண்போம்.
தமிழகத்தின் மாநகரங்களில் ஒன்றான திருச்சி மற்றும் அதன் புறநகர் பகுதியில் இளம் பெண்கள் வித்தியாசமான முறையில் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு காவல்துறையினரின் விசாரணைக்கு செல்கிறது. கள அனுபவம் நிரம்ப பெற்றிருக்கும் மூத்த காவல்துறை அதிகாரி சரத்குமார் தலைமையில் இந்த வழக்கிற்கான சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவில் அவருக்கு உதவியாக காவல்துறை பணியில் புதிதாக சேர்ந்துள்ள அசோக் செல்வன் எனும் இளம் காவல் அதிகாரி இடம்பெறுகிறார். இந்தக் குழுவில் தொழில்நுட்ப விடயங்களில் உதவி புரிவதற்காக நாயகி நிகிலா விமலும் இடம்பெறுகிறார். இந்த மூவரும் புதிரான கொலை வழக்கை விசாரிக்கிறார்கள். இவர்களது விசாரணையில் குற்றவாளியைக் கண்டறிந்தார்களா? இல்லையா? என்பதே இப்படத்தின் திரைக்கதை.
படம் தொடங்கிய சில காட்சிகளிலேயே இயக்குநர் பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துச் சென்று விடுகிறார். அதன் பிறகு நடைபெறும் பரபரப்பான விசாரணை... பார்வையாளர்களை இருக்கையில் நுனியில் அமர வைக்கிறது. முதல் பாதியில் முடிவின்போது கொலையாளி என சந்தேகிக்கும் ஒருவர்.. பார்வையாளர்களுக்கு அறிமுகமாகிறார். அப்போதே தெரிந்து விடுகிறது இவர் கொலையாளி அல்ல என்று.. இருப்பினும் இயக்குநர் இரண்டாம் பாதியில் புத்திசாலித்தனமான திரைக்கதையால்.. பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறார். அதிலும் அந்த உச்சகட்ட காட்சி... யாராலும் யூகிக்க முடியாதது. இயக்குநருக்கு சல்யூட் அடிக்கலாம்.
சரத்குமார் வழக்கமான நடிப்பிலிருந்து மாறி, இந்த கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை உள்வாங்கி, நேர்த்தியான நடிப்பை வழங்கி இருக்கிறார். அதிலும் ஜூனியரான அசோக் செல்வனை வசனங்கள் மூலம் கார்னர் செய்வது சபாஷ். சரத்குமாருக்கு நிகராக இளம் காவல்துறை அதிகாரி வேடத்தில் அசோக் செல்வனும் நடிப்பை அள்ளி வழங்கியிருக்கிறார். கள அனுபவம் பெரிதா? கற்ற அனுபவம் பெரிதா? என்பது குறித்து இருவருக்கும் நடைபெறும் பனி போர் சுப்பர். நாயகியாக இடம்பெறும் நிகிலா விமல் உச்சகட்ட காட்சிக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் சிறப்பு. அவரும் இயக்குநர் எதிர்பார்த்த நடிப்பை வழங்கி, ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்.
இப்படத்தின் கதைக்காக இயக்குநர் ஏராளமான கள ஆய்வு செய்து இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. குறிப்பாக கொலை நடந்த இடத்தில் அசோக் செல்வன் கதாபாத்திரம் தெர்மா மீற்றரை கொலையாளியின் காதில் வைத்து, கொலை நடந்திருக்கும் நேரத்தை அவதானிப்பது.. பார்வையாளர்களின் புருவம் உயர்ந்து 'அட' போட வைக்கிறது. மறைந்த நடிகர் சரத்பாபு நடித்திருக்கும் கடைசி படம் இதுவாக இருக்கலாம். அவரது நடிப்பும் நிறைவு.
காதல் காட்சிகள், பாடல் காட்சிகள், பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள்.. என எதையும் வலிந்து திணிக்காமல்.. கதைக்குத் தேவையான பரபரப்பை இயல்பாக இடம் பெற வைத்து, ரசிகர்களை கவனிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா.
ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படத்தை இப்படியும் வழங்கி பார்வையாளர்களை வசப்படுத்தலாம் என இயக்குநர் புது பாதையை போட்டிருக்கிறார்.
இயக்குநருக்கு ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும், பட தொகுப்பாளரும் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கி, படைப்பின் வெற்றிக்கு வித்திட்டிருக்கிறார்கள்.
'போர் தொழில்' தலைப்பு- பாமர மக்களை எளிதில் கவரவில்லை என்றாலும், காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு அவர்களுடைய தொழிலில் நாளாந்தம் புதுப்புது வடிவில் போர் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்பதாக அவதானிக்கலாம்.
போர் தொழில்- கிரைம் 'குறிஞ்சி பூ'.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM