நான் உலக அறிவிப்பாளர் அல்ல ! - B.H. அப்துல் ஹமீத்  

Published By: Nanthini

09 Jun, 2023 | 10:34 AM
image

(மா. உஷாநந்தினி)

"என்னை உலக அறிவிப்பாளர் என்று பலர் சொல்கிறார்கள். உலக அறிவிப்பாளர் பட்டத்துக்கும் கஞ்சிப்பானை இம்ரானுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கஞ்சிப்பானை இம்ரான் என்ற பெயரை யாரோ வைத்தார்கள். அதை பலரும் வழிமொழிந்தார்கள். உண்மையில் கஞ்சிப்பானைக்கும் இம்ரானுக்கும் எந்த தொடர்புமில்லை. அதைப் போல உலக அறிவிப்பாளர் என்று யாரோ ஒருவர் சொல்ல, அதை எல்லோரும் வழிமொழிகிறார்கள். ஆனால், நான் உலக அறிவிப்பாளர் அல்ல. உலக நாடுகள் பலவற்றுக்கும் போயிருக்கிறேன். ஆனால், உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் பேசக்கூடிய ஆற்றல் எனக்கு இல்லை" என B.H. அப்துல் ஹமீத் தனது நூல் அறிமுக விழா அரங்கில் மனம் திறந்து பகர்ந்தார்.

இலங்கை ஒலிபரப்புத்துறையின் பிதாமகன், உலக அறிவிப்பாளர் என அழைக்கப்படும் பி.எச். அப்துல் ஹமீத் எழுதி, அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நிகழ்த்தப்பட்ட 'FETNA' விழாவில் வெளியிடப்பட்ட 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' நூல் கனடா, இங்கிலாந்து, இந்தியா (தமிழகம்) ஆகிய நாடுகளில் அறிமுகமாகி, சிறிது கால இடைவெளியின் பின்னர், அதன் அறிமுக விழா இலங்கையில் முதல் முதலாக கடந்த சனிக்கிழமை 3ஆம் திகதி மாலை 3 மணிக்கு கொழும்பு 7இல் அமைந்துள்ள NADA அழகியற் கற்கை அரங்கில் நடைபெற்றது. இதன்போது ஏற்புரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெண்பா நூல்மனையின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நூல் அறிமுக விழா, சிரேஷ்ட அறிவிப்பாளர் விமல் சொக்கநாதனின் தலைமையில், சிறப்பு அதிதிகளாக நிகழ்வுக்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்களான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் (முஸ்லிம் காங்கிரஸ்), மனோ கணேசன் (ஜனநாயக மக்கள் முன்னணி) ஆகியோரின் முன்னலையில் நடத்தப்பட்டது.

மூத்த வானொலி அறிவிப்பாளரும் முன்னாள் பிரதிப் பரீட்சை ஆணையாளருமான G.போல் அன்டனி, பேராதனை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன், எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன், முனைவர் எம்.சி. ரஸ்மின், பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன், 'தகவம்' செயலாளரும் இலக்கிய செயற்பாட்டாளருமான வசந்தி தயாபரன், வீரகேசரி நாளிதழ் மற்றும் வார இதழின் பிரதம ஆசிரியர் ஸ்ரீ கஜன், தேசிய பாடகர் சூரியகுமார் வீ. முத்தழகு உள்ளிட்ட  பல கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வின் முதற்கட்டமான மங்கள விளக்கேற்றலின்போது பி.எச்.அப்துல் ஹமீத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைந்து பணியாற்றிய ஐந்து பெண்மணிகள் மங்கள விளக்கேற்றினர்.

மூத்த அறிவிப்பாளர் கோகிலா சிவராஜா, இசைத்தட்டு களஞ்சியத்தில் பாடல் தொகுப்பு நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளராக பணியாற்றிய விக்டோரியா யேசு சகாயம், இசைத்தட்டு களஞ்சியத்தில் பொறுப்பாளராக பணியாற்றிய யோகேஷ்வரி சண்முகசுந்தரம், பணிப்பாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு செயலாளராக பணியாற்றிய அருந்ததி செபஸ்தியன் ஆகியோருடன் மூத்த வானொலிக் கலைஞர் ஏ.எம்.சி. ஜெயஜோதியும் இணைந்து விளக்கேற்றினர்.

அதனை தொடர்ந்து 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' நூலின் வெளியீட்டு விழா மற்றும் கடந்த அறிமுக விழாக்கள் உள்ளடங்கிய ஒரு காணொளி காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தலைமையுரையினை ஆற்றிய விமல் சொக்கநாதன்,

சிரேஷ்ட அறிவிப்பாளர் விமல் சொக்கநாதன்

"நூலாசிரியர் பி.எச். அப்துல் ஹமீத் அவர்கள் என் இலங்கை வானொலி வரலாற்றில் என் சக அறிவிப்பாளர். என் குடும்ப நண்பரும் கூட. கலைஞர்களை மதிக்கும் ஒரு பண்பாளர்.

எனது ஒரு நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றபோது நண்பர் ஹமீத் அதில் கலந்துகொண்டு உரையாற்றி என்னை மகிழ்வித்தார். 

அப்போது நடிகர் கமல்ஹாசனிடம் என்னையும் எனது நூலையும் அறிமுகப்படுத்தினார், ஹமீத். எனது நூலை கமல்ஹாசனிடம் நான் கொடுத்து புகைப்படமும் எடுத்துக்கொண்டேன். அப்போது எனது மகிழ்ச்சியை அவர் இரட்டிப்பாக்கினார்.

நாங்கள் இருவரும் சேர்ந்து நடத்திய 'இசையும் கதையும்' நிகழ்ச்சி யாராலும் மறக்க முடியாது.  என்னாலும் மறக்க முடியாத அனுபவம்.

எங்கள் இருவருக்கும் இடையே சகோதரத்துவம், ஒத்துழைக்கும் மனப்பான்மை இருந்ததால்தான் இலங்கை வானொலி இசைத்தட்டு களஞ்சியத்திலும் சிறப்பாக பணியாற்றினோம்.

பொதுவாக அறிவிப்பாளர்களிடம் மது, மாது, சூது போன்ற சில தகாத பழக்கங்கள் இருக்கக்கூடும். ஆனால், நானும் ஹமீதும் இவற்றை தொடவில்லை. அதனால்தான் எங்களால் அறிவிப்புத்துறையில் நீடித்து நிலைக்க முடிந்திருக்கிறது" என்றார்.

பள்ளித் தோழர் G. போல் அந்தனி

அப்துல் ஹமீத்தின் ஆறு தசாப்த காலத்துக்கும் மேலான பள்ளித் தோழருமான G.போல் அந்தனி தனது வாழ்த்துரையில், இருவரும் சேர்ந்து 'ஜான்சி ராணி', 'சூழ்ச்சியின் முடிவு', 'கட்டபொம்மன்', 'கர்ணன்' போன்ற நாடகங்களிலும், வர்த்தக ஒலிபரப்பில் 'நவரச கோவை' நிகழ்ச்சிக்காக ஹமீத் தயாரித்து நிகழ்த்திய குறுநாடகங்களிலும் தாம் நடித்தபோது ஏற்பட்ட சுவையான அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

"பி.எச். அப்துல் ஹமீதுக்கும் எனக்கும் தமிழுணர்வை ஊட்டியவர்கள் பள்ளி ஆசிரியரான மட்டக்களப்பு, அமிர்தகழியை சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் ஆ.பொன்னுத்துரை ஆவார். வானொலியில் ஆசானாக இருந்தவர் வ. இராசையா" என தமது ஆசிரியர்களை நினைவுகூர்ந்தார்.

பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன்

பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் தனது சிறப்புரையில்,

"பி.எச்.அப்துல் ஹமீதின் 'உங்கள் அன்பு அறிவிப்பாளர்' என்ற மந்திரச் சொல்லுக்காக வானொலி அபிமானிகள் காத்துக்கிடந்த காலங்கள் உண்டு. நானும் அதற்காக காத்திருந்ததும் பிரத்தியட்சமான உண்மை.

செவிவழி பண்பாட்டின் ஓர் இலத்திரனியல் அம்சமாக விளங்குவது வானொலி. ஒரு நாட்டின் செவிச் செல்வத்தை வளர்த்தெடுக்கும் இலங்கை வானொலியில் தன்னை இணைத்துக்கொண்டு, கேள்விச் செல்வத்தினால் கேட்டுப் பெற்ற அறிவையும் அனுபவத்தையும் கொண்டு உழைத்து முன்னேறி உயர்ந்திருப்பவர் பி.எச். அப்துல் ஹமீத்.

மனிதனின் வாய்க்குள் நாக்கு, அன்னம், பல், உதடு போன்ற மொழியை வெளிப்படுத்தும் யந்திரங்கள் உள்ளன. நமக்குள்ளிருந்து மேலெழும்பும் குரலை இந்த யந்திரங்கள் மூலம் முறைப்படுத்தும் நுட்பத்தை அறிந்தவர், அப்துல் ஹமீத். அவர் தன் குரள்வளையினூடாக வருகிற ஒலியை - ழகரம், லகரம், ளகரம் போன்ற ஒலி பேதங்களை சரியான முறையில் வெளிப்படுத்தும் கெட்டிக்காரர்.

அவரது மயக்கும் குரல்வளை, சொற்களை பிரயோகிக்கும் முறை, பொருத்தமான தொனி, சொற்களை உச்சரிக்கும் பாங்கு, ஒலிவாங்கிக்கு முன்னால் நிற்கின்ற முறையினூடாக தன்னை தயார்ப்படுத்திக்கொண்டு ஒரு சிறந்த ஒலிபரப்பாளராக அடையாளம் கொண்டுள்ளார்.  இவற்றுக்கும் மேலாக, ஞாபக சக்தி உடையவர்.    

வெறுமனே எந்தவிதமான செய்தியையும் வெளிப்படுத்தாத ஒரு தட்டையான ஒலிபரப்பாளராக இல்லாமல், பல்வேறு தகவல்களை, தனது அனுபவங்களினூடாக பெற்ற  செய்திகளை விரிவாக ஞாபகப்படுத்திச் சொல்கிற திறன் கொண்டவர்தான் அப்துல் ஹமீத்" என்றார்.

இலக்கியவாதி வசந்தி தயாபரன்

வசந்தி தயாபரன், தமிழுக்கு தொண்டு செய்வதற்காகவே அப்துல் ஹமீத் தேர்ந்தெடுத்த துறைதான் ஒலிபரப்புத்துறை என்றும், 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' ஒட்டுமொத்த ஒலிபரப்பாளர்களுக்கான ஒரு வழிப்போக்கனின் பயணம் என்றும் குறிப்பிட்டவர்,  

"அப்துல் ஹமீத் எனது தந்தை ராசையா மாஸ்டரை பற்றி மேடைகளில் பாராட்டி பேசியிருக்கிறார். ஆனால், எனது தந்தையோ 'அப்துல் ஹமீத் இயல்பாகவே திறமைசாலி. தமிழறிவை தன்னில் சுயமாகவே வளர்த்துக்கொண்டவர்' என அவர் கூறுவது இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

என் தந்தை ஹமீத்தின் வளர்ச்சிக்கு எந்த வகையிலாவது காரணமாக இருந்துள்ளார் என்றால் அது ஹமீத்துக்கு பெருமையே தவிர, அதன் ஒலிவட்டத்தை நான் ஒருபோதும் சூடிக்கொள்வதில்லை" எனவும் வாழ்த்துரையில் கூறினார்.

பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்

பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் தனது நூல் நயவுரையில்,

"கிராமத்தில் இருக்கும் ஒருவன் சுயஆற்றல் இருந்தால்தான் கிராமத்தின் எல்லையை கடக்க முடியும். ஆளுமை இருந்தால்தான் அவன் நகரத்தின் எல்லையை கடக்க முடியும். ஆளுமை தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்தால்தான் அவன் கிராமம், நகரம், பிராந்தியம் என்ற எல்லைகளை கடந்து தேசத்தின் அடையாளமாக முடியும்.

எப்போதாவது ஒருவர் தான் விடாமுயற்சியும் ஆற்றலும் ஆளுமையும் தொடர் ஊக்கமும் கொண்ட ஒருவரால்தான் தேசத்தின் எல்லையை கடந்து சர்வதேசத்தின் குறிப்பாக, தமிழகத்தின் அவதானத்தை பெற முடியும்" என்றார்.

அத்தோடு, எழுத்துக்கள் எல்லாம் எங்கிருந்து பிறக்கின்றன, எந்தெந்த உறுப்புகள் அசைந்து பிறக்கின்றன என்கிற கணக்கையெல்லாம் தொல்காப்பியன் எழுதியிருக்கிறான்.

தொல்காப்பியத்துக்கு ஒரு பெருமை சேர்க்க வேண்டுமானால், ஒரு எழுத்து எங்கே உச்சரிக்க தொடங்க வேண்டும், அதற்கு எந்தெந்த உறுப்புகள் பயன்பட வேண்டும் என்பதை ஆய்ந்து முடிக்க வேண்டுமென்றால், அதை சரியாக உச்சரிக்கும் ஒருவன் (அப்துல் ஹமீதை காட்டி சொன்னார்) அதற்கு உதவி செய்ய வேண்டும்.

அந்த வகையில், பி.எச்.அப்துல் ஹமீத் விஞ்ஞானபூர்வமாக எழுதப்பட்ட இலக்கணத்துக்கு அமைய, எழுத்துக்களை எந்த இடத்தில் உச்சரிக்க வேண்டும், எந்த இடத்தில் காற்றை உந்தித்தள்ள வேண்டும், பல், அண்ணம் போன்ற உறுப்புகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கருத்திற்கொண்டு சரியான முறையில் உச்சரிப்பது என்பது சாதாரண விடயமல்ல, அது ஒரு கொடை" எனவும் தெரிவித்தார்.

முனைவர் எம்.சி. ரஸ்மின்

முனைவர் எம்.சி. ரஸ்மினும் தனது நயவுரையின்போது, அப்துல் ஹமீதை உலக அறிவிப்பாளர் என்பதை நிரூபிக்கும் வகையில் 6 பண்புகளை விளக்கினார்.

1. புதிது புதிய விடயங்களை கண்டுபிடித்து அறிமுகப்படுத்துபவராக இருக்க வேண்டும்.   

2. ஒருவர் வானொலியில் தொடங்கிவைத்த ஒன்று காலம்காலமாக குறைந்தது 3 தலைமுறைகளை கடந்து பிரதி பண்ணும்போது உந்துசக்தியாக அமைய வேண்டும். 

3. நிலைத்து நிற்கும் தன்மை சஸ்டெய்னபிலிட்டி

‍4. ஒருவரை அவரது ரசனையிலிருந்து பிரித்து வெளிப்படுத்த முடியாத ஒரு நிலையிலேயே வைக்கச்செய்யும் நிலை

5. மிக முக்கியமான விடயம் ஒரு வானொலி ஒலிபரப்பிலே ஒருவருடைய அடைவினை கண்டுகொள்வது என்பது தபாலட்டை, பின்னூட்டங்கள், வாழ்த்து அட்டைகள் மூலமாகவோ அல்ல. அப்துல் ஹமீத் தென்னிந்தியாவுக்கு சென்று 'மீனவ நண்பன்' நிகழ்ச்சித் தொடரொன்றை நடத்தியதன் பலனாக, 37 ஆண்டுகளுக்கு பின்னர் மீனவர்களுக்கான 'கடல் ஓசை' வானொலிப் பன்பலை ஆரம்பிக்கப்பட்டது. இந்த சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் ஒருவராக ஹமீத் விளங்குகிறார். மக்களின் வாழ்க்கையை ஒலிபரப்புவதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேல் நோக்கிக் கொண்டு செல்லும் சக்தி உள்ளவர் தான் தாக்கமான ஒலிபரப்பாளர். 

6. அறிவார்ந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் தன்மை 

இந்த ஆறு இயல்புகளின் அடிப்படையில் அப்துல் ஹமீத்தை உலக அறிவிப்பாளராக நாம் ஏற்றுக்கொண்டிருப்பது பொருத்தமானதே என்றார்.

ரவூப் ஹக்கீம் பா.உ. 

"1960ஆம் ஆண்டு வெள்ள நிவாரண நிதிக்காக 'வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பிரபல நாடகக் கவிஞன் லடிஸ் வீரமணி நடிக்கவிருந்தார். ஆனால், ஏதோ சர்ச்சைகள் கிளம்ப அவர் நடிக்க மறுத்துவிட்டார். நாடக ஏற்பாட்டாளர்கள் கலையார்வம் நிறைந்த ஒரு சிறுவர் குழுவிடம்  வந்து, யாரேனும் 'கட்டபொம்மன்' கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா என கேட்க, குட்டி ஹமீத் முன்வந்து வற்றிய வயிற்றோடு பேசி, நடித்துக் காட்டிய வசனம்தான் 'கிஸ்தி, திறை, வரி, வட்டி....' என்பது. அது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழ்பெற்ற வசனம். 

இன்று கலைஞராக, அறிவிப்பாளராக நாம் எல்லோரும் கொண்டாடுகிற பி.எச். அப்துல் ஹமீத்தின் கலைப்பிரவேசத்துக்கு அத்திவாரமாக அமைந்தது அந்த நிகழ்வு. 

அதன் பின்னர், சில தசாப்தங்கள் கடந்து, நடிகர் திலகத்தையே பேட்டி காணும் வாய்ப்பை அப்துல் ஹமீத் பெற்றார்" என்றார், ரவூப் ஹக்கீம்.

"உங்கள் ரசிகன் நான்" என நடிகர் திலகம் சிவாஜி கணேசனாலேயே பாராட்டப்பட்ட ஒரு தமிழர் எம்மிடையே இருப்பதையிட்டு பெருமை பாராட்டினார்.

மறைந்த தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அப்துல் ஹமீத்துக்கு ஒரு குரல் பதிவினை அவரது கைப்பேசிக்கு அனுப்பியிருந்தார். மிகவும் தளுதளுத்த குரலில் "அப்துல் ஹமீத்...." என அவர் அதில் பேசியிருந்ததை கேட்டபோது  கவலையடைந்தேன். இவ்வாறு புகழ்பூத்த தென்னிந்திய கலைஞர்களின் நட்பை பெற்றவர்." என குறிப்பிட்டார். 

அத்தோடு, ஹமீத் நிகழ்த்திய 'ஒலிமஞ்சரி' சஞ்சிகை நிகழ்ச்சியூடாக கவிதை, சிறுகதை, சிறுநாடகம் என்பவற்றை படைத்து, வளர்ச்சி கண்ட இப்ராஹிம், நிந்தவூர் சபாத் அஹமட், பரீதா இஸ்மாயில், இளவாலை விஜயேந்திரன், நயீமா சித்தீக் போன்ற படைப்பாளிகளை சுட்டிக்காட்டினார்.

மேலும், தனது விருப்பத்துக்குரிய ஒலிபரப்பாளரான மறைந்த சிதம்பரப்பிள்ளை சிவகுமாரின் கவிதை நிகழ்ச்சிகளை பற்றியும் இவ்வேளை நினைவுபடுத்தினார்.

ஹமீத் நிகழ்த்திய 'இசையும் கதையும்' நிகழ்ச்சியூடாகவும் பல சிறுகதை எழுத்தாளர்கள் அறிமுகமானதாகவும் குறிப்பிட்டு பேச்சை தொடர்ந்த ரவூப் ஹக்கீம்,

"ஒரு முறை நான் அப்துல் ஹமீதிடம் அவரது நிகழ்ச்சிகள் சார்ந்த பதிவுகளை பற்றி கேட்டபோது, அவர் சிரித்துக்கொண்டே சொன்னார், 'நாங்கள் காற்றிலே கலை வடிப்பவர்கள்; எந்த பதிவையும் எங்களால் தே‍டிக் கண்டுபிடிக்க முடியாது' என்று.

உச்சத்தை தொட்டிருக்கும் அப்துல் ஹமீதின் சாதனைகள் யாராலும் ஈடுசெய்ய முடியாதவையே" என்றும் அகம் மலர கூறினார்.

மனோ கணேசன் பா.உ.

"அப்துல் ஹமீத் எங்கள் மனதையெல்லாம் கவர்ந்த கள்வன். 'காலக்கப்பல்' எப்போதும் பின்னால்தான் போகும். முன்னால் போகாது. அந்த பொற்காலம், அந்த மாயக்காலம், அந்த கனாக்காலம் என்றிருக்கிறதே.

நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது 'பாட்டுக்குப் பாட்டு' போன்ற வானொலி நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய இடங்களுக்கு சென்று, போட்டி போட்டுக்கொண்டு கூட்டமாக நின்று நிகழ்வை செவிமடுத்திருக்கிறேன். எனக்கு அது ஒரு பொற்காலம்.

இலங்கை வானொலி அப்துல் ஹமீத் போன்றவர்களை உரியவாறு அங்கீகரிக்காமல், கவனிக்காமல் இனவாத சூழ்நிலையில் சிக்கி அலட்சியப்படுத்தியது. அப்துல் ஹமீத், விமல் சொக்கநாதன் போன்றவர்கள் தற்துணிவால் உலகை வென்றுள்ளனர். அதன் பின்னணியில் இலங்கை வானொலி இருக்கவில்லை.

அப்புக்குட்டி ராஜகோபால், மரிக்கார் ராமதாஸ், உபாலி செல்வசேகரன், சமீபத்தில் மறைந்த சந்திரசேகரன் போன்றவர்கள் நடத்திய வானொலி நாடகங்கள் பலரால் கேட்டு ரசிக்கப்பட்டன.

அவர்கள் நீண்ட கால நட்சத்திரங்களாக ஜொலித்தவர்கள். தமிழை தக்கவைத்துக்கொண்டிருப்பவர்கள்.

பல வருடங்களுக்கு முன்னால் கொட்டாஞ்சேனையில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது நான் அவரிடம் கேட்டேன்,

'ஹமீத், உங்களிடம் அனுபவங்கள் இருக்கின்றன. உங்கள் வழித்தடங்களை நயப்படுத்தி, புதியவர்களுக்கு காட்டிச் செல்லாமல் இருக்கிறீர்ளே. அதற்காக  ஏதும் ஏற்பாடு செய்தீர்களா' என்று.

அதற்கு அவர் 'எழுதுவது என்பது அசாத்தியமான செயல்' என்று சொன்னார்.

அவர் மனம் முழுக்க அனுபவங்கள் குவிந்து கிடக்கின்றன. ஆனால். அவற்றை எழுத்து வடிவில் கொண்டு வருவதில் அவருக்கு அத்தனை அக்கறை இருக்கவில்லை என்பதை போல் அப்போதிருந்தார்.

ஆனால், கொவிட் 19 வந்து அவரை எழுத வைத்திருக்கிறது. உண்மையில் கொரோனாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். கொரோனாவால் நாட்டிலும் நிறைய நல்லவை நடந்திருக்கின்றன. புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மகிழ்ச்சியான விடயம்.  

ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒரே நேர்கோட்டில் இணைத்திருக்கிறார், அப்துல் ஹமீத்.

அவரது அசல் குரல் கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். சினிமாவிலும் கூட டப்பிங் செய்யப்படுகிறது. பல நடிகர்களின் சொந்தக் குரல் எதுவென்றே தெரியாமல் உள்ளது.

சர்வதேசத்திலும் இலங்கை சார்ந்து மிக அதிகமாக (அரசியலுக்கு அப்பால்) அறியப்பட்ட இலங்கை தமிழர் இவர்தான். தமிழகத்தில் அப்துல் ஹமீத் என்றால் தெரியாதவர்கள் யாரும் கிடையாது.

இவரால்தான் பிற்காலத்தில் தமிழகத்தில் பெரும் பரவசப்படுத்திய வானொலியாக இலங்கை வானொலி திகழ்கிறது. புதிய தலைமுறை இலங்கை வானொலி என்ற அடைமொழியை நினைவில் வைத்திருக்கவும் ஹமீத்தான் காரணம்.

மகத்தான சாதனையாளர், நமது நாட்டுக்காரர், நமது ஊர்க்காரர். நம்மை பரவசப்படுத்தியவர். நமது மனங்களையெல்லாம் தமிழ் மூலம் திருடியவர்... சொல்லிக்கொண்டே போகலாம்.

'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' என்று சொல்வதை போல அவரது நூல் வெளியீடும் வழிப்போக்கன் வெளியீடாகவே இருக்கிறது. டொரன்டோ, அமெரிக்கா, சென்னை, அடுத்து அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் என்று அறிமுக விழாக்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

ஹமீத் அவர்களே, இன்னும் எழுதுங்கள். எழுதி வழித்தடங்களை பதிவு செய்யுங்கள்" என்றார். 

நூல் வெளியீடு

தொடர்ந்து, முக்கிய நிகழ்வாக நூல் வெளியிடப்பட்டது.

ஒலிபரப்புத்துறையில் தனது வளர்ச்சியில் பங்கெடுத்தவர்கள் என்ற அடிப்படையில்  அப்துல் ஹமீதின் விருப்பம் / தெரிவுக்கிணங்க, நூலின் முதல் பிரதி மற்றும் சிறப்புப் பிரதிகள் பார்வையாளர்கள் தரப்பில் சிலருக்கு வழங்கப்பட்டன.

அதன்படி, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன் முதல் பிரதியை இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர் கோகிலா சிவராஜாவுக்கு வழங்கினார்.

தொடர்ந்து, அவரே அடுத்தடுத்த சிறப்புப் பிரதிகளையும் வழங்கினார். அப்பிரதிகளை பெறுபவர்களை பி.எச். அப்துல் ஹமீத் தானே முன்வந்து ஒலிவாங்கியில் பெயர் சொல்லி அழைக்க, அவர்களுக்கான பிரதிகளும் வழங்கப்பட்டன.

அவற்றில் ஒரு சிறப்புப் பிரதியின் அவசியத்தை பற்றி அப்துல் ஹமீத் தெரிவிக்கையில்,  

இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு வந்த பொறியியலாளரும் இலங்கையில் 'வானொலியின் தந்தை' என அழைக்கப்படுபவருமான எட்வர்ட் ஹார்ப்பரின் (Edward Harper) வழிகாட்டலில், ஜேர்மனிய நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து சிதிலமடைந்த ட்ரான்ஸ்மிட்டர் கருவி‍யை ஒருங்கிணைக்கும் பணியை இலங்கையை சேர்ந்த மூன்று பேருக்கு வழங்கப்பட்டது. அந்த மூவரில் தலைமைத்துவ பொறுப்பை ஏற்றிருந்தவர், ஒரு தமிழர்.

இன்றைக்கு இலங்கையில் ஒரு வானொலி இயங்குவதற்கு காரணமும் அந்த தமிழர்தான். அவரே ஐயம்பிள்ளை நடராசா என்ற யாழ்ப்பாண தமிழர்.

அவரின் புகைப்படத்தை பல ஆண்டுகள் தேடியும் கிடைக்கவில்லை. ஆனாலும், தொடர் முயற்சியால் ஒரு கரையான் புற்றுக்குள் இருந்து அவரது புகைப்படத்தை தேடி எடுத்து, புத்தகத்தில் பிரசுரித்துள்ளேன்.

புகைப்படத்தை தேடியளித்து உதவிய ஐயம்பிள்ளை நடராசாவின் உறவினர்களான சீவரத்தினம் தம்பதியரில் திரு. சீவரத்தினத்துக்கு இந்த நூலினை வழங்க விரும்புகிறேன்.

அதன் பின்னர், இலங்கையில் 2 Kw (கிலோ வாட்) மற்றும் 5Kw (கிலோ வாட்) கொண்ட  ஒலிபரப்பிக் கருவியை (transmitter) கண்டுபிடித்தவரும் ஐயம்பிள்ளை நடராசா என்ற தமிழரே ஆவார்.

எட்வர்ட் ஹார்ப்பர் அவரை வானொலியின் தந்தையான மார்க்கோனி வாழ்ந்த காலத்திலேயே இங்கிலாந்துக்கு அனுப்பி வானொலி உருவாக்கம் தொடர்பான தொழில்நுட்பத்தை கற்று வரும்படி பணிக்க, அவ்வாறே கற்று வந்தார் அவர் என தெரிவித்தார். அதனையடுத்து, சீவரத்தினத்துக்கும் சிறப்பு பிரதி வழங்கப்பட்டது.

பிரதிகள் கையளிக்கப்பட்ட பின்னர், மேடையில் அமர்ந்திருந்த அதிதிகளுக்கும் அப்துல் ஹமீத் தானே நூல்களை வழங்கி, அதனை தொடர்ந்து ஏற்புரை ஆற்றினார். 

இதன்போது அவர் பகிர்ந்துகொண்டதாவது:

B.H. அப்துல் ஹமீத்

"என்னை உலக அறிவிப்பாளர் என்று பலர் சொல்கிறார்கள். உலக அறிவிப்பாளர் பட்டத்துக்கும் கஞ்சிப்பானை இம்ரானுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கஞ்சிப்பானை இம்ரான் என்ற பெயரை யாரோ வைத்தார்கள். அதை பலரும் வழிமொழிந்தார்கள். உண்மையில் கஞ்சிப்பானைக்கும் இம்ரானுக்கும் எந்த தொடர்புமில்லை. அதைப் போல உலக அறிவிப்பாளர் என்று யாரோ ஒருவர் சொல்ல, அதை எல்லோரும் வழிமொழிகிறார்கள். ஆனால், நான் உலக அறிவிப்பாளர் அல்ல. உலக நாடுகள் பலவற்றுக்கும் போயிருக்கிறேன். ஆனால், உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் பேசக்கூடிய ஆற்றல் எனக்கு இல்லை.

உண்மையில், நான் ஒரு எழுத்தாளரும் அல்ல. எனக்கு எழுதத் தெரியாது. என்னுடைய சிந்தனையின் வேகத்துக்கு விரல்கள் ஒத்துழைக்காது. ஆனால், எனது வாழ்க்கையை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தவர் மர்ஹூம் புன்னியாமீன் என்ற இலக்கியவாதி.

அவரது சிந்தனை வட்டம் என்ற அமைப்பின் கீழ் நடத்தப்பட்ட 366ஆவது நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு என்னை சிறப்பதிதியாக அழைத்திருந்தார். அப்போது, உங்களால் எழுத முடியாவிட்டால், நீங்கள் சொல்லச் சொல்ல கேட்டு நான் எழுதுகிறேன் என்று கூறினார். நாட்கள் தள்ளிப் போயின. அவர் இந்த உலகை விட்டுப் பிரிந்தபோது குற்றவுணர்வு என் நெஞ்சை அழுத்தியது.

அது போல தமிழகத்தில் வள்ளல் பெருந்தகை முஸ்தபா அவர்கள் என்னிடம் பல முறை கேட்டார். ஒரு மு‍றை ராணி மைந்தன் என்ற எழுத்தாளரை அழைத்து வந்து, "இவர் நீங்கள் சொல்லச் சொல்ல கேட்டு எழுதுவார்" என்றார்.  நான் மறுத்துவிட்டேன். ஏனென்றால், நான் சொல்வதை கேட்டு எழுதும்போது மிகைப்பட எழுதிவிடுவார்கள் என்பதால் நானே எழுத முடிவு செய்தேன்.

இந்த கொரோனா நச்சுயிர் என்னை வீட்டுச் சிறைக்குள் பூட்டி வைத்தபோது எனது பொழுதுகளை எழுதுவதற்காக பயன்படுத்திக்கொண்டேன்.

மொத்தம் 865 பக்கங்கள் எழுதினேன். எழுதிய பிறகுதான் யோசித்தேன். இவ்வளவு பெரிய புத்தகத்தை யாருமே வாசிக்க மாட்டார்கள். நாளைக்கு வாசிக்கலாம் என்றும் வைத்துவிடுவார்கள். அதனால் 865 பக்கங்களை 316 பக்கங்களாக சுருக்கினேன்.

இதில் என் வாழ்க்கையை பதிவு செய்வதை விட எனக்கு வழிகாட்டியவர்களின் வாழ்க்கையையும் பதிவு செய்திருக்கிறேன். காரணம், அறிவிப்புத்துறையில் எமக்கு பயிற்சியளிக்க பலர் இருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு பயிற்சியளிக்க யார் இருந்தார்கள்? யாருமே இல்லை.

விநாயகமூர்த்தி என்ற பெயர் யாருக்குமே தெரியாது. அவர்தான் முதலாவது அறிவிப்பாளர். தந்தித் திணைக்களத்தில் இலிகிதராக பணியாற்றியவர். அவரை எல்லோரும் மறந்துவிட்டோம். அவருடைய ஒரு புகைப்படம் கூட கிடைக்கவில்லை.

அடுத்து, நிரந்தர வானொலி அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டவர் நவாலியூர் சோ. நடராசா. இவர் நவாலியூர் சோமசுந்தரம்பிள்ளையின் மகன்.

அதன் பிறகு, சோ. சிவபாதசுந்தரம். அவர் தான் பிபிசியில் தமிழோசையை ஆரம்பித்தவர்.

அப்படியெல்லாம் அவர்கள் வகுத்த நியமங்களின் படியே, நாங்கள் பணியாற்றியிருக்கிறோம். அப்படிப்பட்ட மூத்தவர்களை நாம் போற்ற வேண்டும் என்று நினைத்தேன். முடிந்தவரை அவர்களுடைய வரலாற்றை அவர்களுடைய வாரிசுகள் மூலமாக நிச்சயப்படுத்திக்கொண்டு இந்த நூலை எழுதியிருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சிக்காக எல்லா பத்திரிகைகளும் தாமாக முன்வந்து எனக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. 500, 600 பேர் வரப்போகின்றார்கள், அனைவருக்கும் சிற்றுண்டி ஏற்பாடு செய்யவேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், கொஞ்சம் ஏமாற்றம்தான். பொதுவாக நூல் வெளியீடு என்பது அலுப்பு தரக்கூடிய விடயம்தான். ஆனால், இந்த நூலை வாசிக்க வேண்டும் என்று ஏராளமானவர்கள் விரும்புகிறார்கள்.

எனக்கு ஒரே ஒரு மனக்குறை. வேறு எவரும் இந்தளவு பெற முடியாத அன்பை என் மகன் பெற்றிருக்கின்றானே என்பதை பார்க்க என் அன்னை இன்று இல்லை. நெருப்பில் வெந்து வெந்துதான் எங்களை வளர்த்தார். எனக்கொரு நிரந்தர பதவி கிடைத்த பிறகு அவரை மகாராணி போல் வைத்துப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், நான் அறிவிப்பாளரான ஆறு மாதத்திலேயே அவர் என்னை விட்டுப் பிரிந்துவிட்டார். அப்படிப்பட்ட அன்னையை எனக்களித்த ஏக இறைவனுக்கு நன்றி!" என்றார் தளுதளுத்த குரலில். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48