இன்றைய சூழலில் நியூக்ளியர் ஃபேமிலி எனப்படும் கணவன்- மனைவி அல்லது கணவன் –மனைவி, ஒரு குழந்தை அல்லது கணவன் -மனைவி- அவர்களுடைய இரண்டு பிள்ளைகள் என குடும்பங்கள் குறைவான எண்ணிக்கையுடன், கூட்டு குடும்பத்திலிருந்து பிரிந்து, தனித்து இயங்குகின்றன.
இவை ஆரோக்கியமான போக்கா? அல்லது ஆரோக்கியமற்றதா? என்பதை விவாதிப்பதை விட, கணவன்- மனைவி உறவு என்பது எப்படி இருக்க வேண்டும்? என்பதனை இந்த கட்டுரை விவரிக்கிறது.
தாய், தந்தையர், பிள்ளைகள், மாமன், மச்சான், அண்ணன், தம்பி, தங்கை எனும் உறவுகளின் வலிமையை விட, இல்லறத்தைத் தொடங்குவதற்கான கணவன் -மனைவி எனும் உறவின் வலிமை தான் பிரதானமானது. கணவன்- மனைவி இந்த உறவு புதிதானது.
புதிரானது. இது தொடர்பாக ஆன்மீக பெரியோர்கள் நன்கு ஆய்ந்து இருபத்தோரு வயதுக்கு மேற்பட்ட ஆணிற்கும், பெண்ணிற்கும் இல்லறம்.. நல்லறம் அவசியம் என வலியுறுத்தி இருக்கிறார்கள். இதன் பின்னணியில் ஆன்மீக காரணங்களும் பொதிந்திருக்கிறது.
இது தொடர்பாக ஆன்மீக பெரியோர்கள் விளக்கமளிக்கையில், ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த ஆன்மாவின் ஸ்தூல வடிவில் இருக்கும் தாய் தந்தையர்களின் கர்மாவே வழி நடத்தும். 95க்கும் மேற்பட்ட தத்துவங்கள் நிறைவு பெறுவது அந்தப் பிள்ளையின் 21 ஆவது வயதில்தான். அதன் பிறகு தான் அவனது சொந்த.. அசல் ஆன்மா செயலில் இறங்கும்.
சிவமாக இருந்தால் சிரசு ஏற இயலாது. சக்தியோடு துணை சேர வேண்டும். அதாவது ஆண் ஒருவர் தனியே தன்னுடைய பிறவி பிணியை வெல்ல இயலாது. அதற்கு சக்தியோடு துணை சேர்ந்தால் மட்டுமே வென்றெடுக்க முடியும்.
இந்த நிலையில் எம்மில் பலர் சிரசு ஏற பல வழிகள் உள்ளன என முன்மொழிவர். அதாவது தியானத்தின் மூலமாக சிரசு ஏறலாம் என்பர். வேறு சிலர் பக்தி மூலமாகவும், ஞானம் மூலமாகவும், யோகம் மூலமாகவும், தீட்சை மூலமாகவும்... இன்னும் பல வழிகளை வழிமொழிவர். ஆனால் சிறந்த வழி என்பது நல்லறம் எனப்படும் இல்லற தர்மம் தான்.
சிவன் பிறக்கும் முன்னரே சக்தி பிறந்து விடுகிறார். இந்த பூமியில் மன பொருத்தத்தை விட, ஆன்ம பொருத்தம் தான் பிறவிக் கடலை வென்றெடுக்கும். அதாவது சக்தியோடு சிவம் சேரும்போது தான் சர்வமும் சாந்தியாகும்.
இதன் மூலம் ஒருவன் தான் கட்டிய மனைவியை.. கடைசிவரை கண் கலங்காமல் காப்பாற்றினால்.., அவனுக்கு மோட்சம் கிடைக்கும்.
அவன் தவம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதை தருணத்தில் 21 வயது வரை ஒவ்வொருவரின் அசலான ஆன்மா கர்மா செயலுக்கு வராது. அதனால் திருமணத்தை எம்முடைய முன்னோர்கள் 21 வயதுக்கு பிறகு மேற்கொள்ள வேண்டும் என்பதனை சூசகமாக முன்மொழிந்திருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.
எம்மிடம் சிலர், “ஐயா..! கட்டிய மனைவியை கண்கலங்காமல் காப்பாற்றுவது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. அவளின் கண்களில் கண்ணீர் வந்தால் என்ன செய்வது?” எனக் கேட்பர். சக்தியின் கண்ணீருக்கு சிவம் காரணமானால், அதைவிட கொடிய கர்மா இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.
சொந்தம் என்பது பழைய கடன் என அறிந்தவனுக்கு... சொந்தம் சுமையாக தெரிவதில்லை.
நட்பு என்பது பழைய பகை என்பதை பண்புடன் அறிந்தவனுக்கு, நட்புடன் பழகும் போது, ஒரு போதும் பதற்றம் ஏற்படுவதில்லை.
எதிரி என்பவன் தனது கர்மாவின் தார்மீக கணக்கு என்ற உண்மையை உணர்ந்தவனுக்கு, எதிரி எதிரி இல்லை என்பதனை தெரிந்து கொள்வான்.
ஒருவனை உடனிருந்து கொல்லும் உறவு, உன்னுடன் பிறந்தால்... அது பழைய கணக்கு. இந்த சூட்சுமத்தை புரிந்தவனுக்கு, பந்த பாசம்... சகோதரத்துவம்... மீது பற்றற்ற பற்று வைத்து, பிறவி கடனை வெல்லலாம்.
கர்மாவின் கணக்கை முற்றும் அறிந்தால்... உனது அருகில் அமரும்... அதிலும் சரிபாதியாக அமரும் மனைவி யார்? என்பது புரியும்.
பெற்ற தாய் தந்தையரை அன்புடன் பூஜிப்பவன், தாய் மற்றும் தந்தை வழியில் அவர்களுக்கு இருக்கும் ஏழேழு ஜென்ம கர்மாவிலிருந்து தப்பிக்கலாம்.
உறவுகள் தரும் இன்னல்களை பொறுத்து, இன்முகத்துடன் அவர்களுக்கு உதவிகளை செய்து வந்தால், குறிப்பாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து வந்தால், உம்முடைய ஏழேழு ஜென்ம சமுதாய கர்மா கணக்கிலிருந்து தப்பிக்கலாம்.
ஆனால் இவற்றையெல்லாம் செய்வதை விட, இவற்றையெல்லாம் செய்வது கடினம் என்று தோன்றினால்... ஒரே ஒரு உறவை நீ பூசித்தால்..,பிறவிப் பிணி மொத்தமாக தீரும். அது நீ தாலி கட்டிய மனைவியை பூஜிக்க வேண்டும். அன்பால் அசத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஆயுள் முழுவதும் அதீத அன்பு செலுத்தி, அவர்களை பூஜித்து வந்தால் பிறவி பிணியை வெல்லலாம்.
மனைவியை மகிழ்ச்சியாக வைப்பது வைத்திருப்பது உலகிலேயே சிரமமான செயல் என எண்ணுபவர்கள் பலர். ஆனால் அதுதான் உலகிலேயே ஒப்பற்ற தவம். இணையற்ற தவம். தவம் என்றாலே வெகுஜன மக்களுக்கு சிரமம் என்பதனை பலரும் அறிவர்.
கட்டிய மனைவியையும், உன் மூலம் அவள் பெற்ற பிள்ளையையும் உளமாற நேசித்து, உன்னதத்துடன் உனது வாழ்வை ஆனந்தமாக நீ அர்ப்பணித்தால்..., அதுவே உலகின் சிறந்த தர்மம். நிகரற்ற தவம்.
தாய் தந்தையை வணங்கினால் பித்ரு தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரம் சென்று திலக் ஹோமம் செய்ய தேவையில்லை.
அதேபோல் உடன் பிறந்த மற்றும் உடன்பிறவா உறவுகளை மதித்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தால்.., கிரக தோஷம் ஏற்படாது. கிரக தோஷத்தை நீங்குவதற்காக திருவண்ணாமலை சென்று இடைக்காடரை தரிசித்து, அவரின் அருள் பெற தேவையில்லை. ஏன் நவகிரகத்தையும் சுற்ற வேண்டிய அவசியம் இல்லை.
கட்டிய மனைவியையும், பெற்ற பிள்ளையையும் உள்ளன்புடன் நேசித்தால்..., அவர்களை ஆனந்தமாக வாழ வைத்தால்.., கர்ம வினைகளை நீக்குவதற்காக அகத்தீஸ்வரை தேடி பாபநாசத்திற்கு செல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
இதனால்தான் எம்முடைய முன்னோர்கள் இல்லற வாழ்க்கை அவசியம் என்பதனை வலியுறுத்தி, அதனை 21 வது வயதில் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்கள். அதனை வழி வழியாக கடைப்பிடித்தும் வர வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள். இன்னும் சுருக்கமாகச் சொன்னால்... மனைவி புன்னகை புரியும் வீடுதான் சொர்க்கம். மனைவி கண்ணீர் விட்டு அழும் வீடுதான் நரகம்.
நீங்கள் சொர்க்கத்தில் வாழ வேண்டுமா? அல்லது நரகத்தில் வாழ வேண்டுமா? என்பதனை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
எனவே, கட்டிய மனைவியை போற்றுங்கள். அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். உங்களது பிறவி பிணி நீங்க வேண்டும் என்றால்.., அதன் சூட்சம உருவமாக... உடனிருக்கும் மனைவியின் உள்ளம் புரிந்து, நடந்து, அவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருந்தால்.... உங்களது பிறவி பிணி நீங்கும்.
தொகுப்பு சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM