பலவந்தமாகக் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டோரை கருப்பொருளாகக் கொண்டு 'காணாமல் போகச் செய்த அன்புக்குரியவர்களின் பிரவேசம்' (Appearing The Disappeared)  எனும் கண்காட்சி மற்றும் 'மௌனிக்கப்பட்ட நிழல்கள்' (Silence Shadows) என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா என்பன இன்று  செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளன.
சர்வதேச மன்னிப்புச் சபையினால் (Amnesty International) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கண்காட்சி காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரையில் கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. 
'காணாமல் போகச் செய்த அன்புக்குரியவர்களின் பிரவேசம்' எனும் கண்காட்சியானது, பலவந்தமாகவும் விருப்பமின்றியும் பிரஜைகளைக் காணாமல் போகச் செய்வதானது மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறல் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. 
காணமல் போகச் செய்யப்படுவது என்பது பல தசாப்தங்களாக இலங்கையில் ஓர் அடையாளமாக மாறியுள்ளது. அவ்வாறான காணாமல் போச் செய்யும் சம்பவம் ஒன்று இடம்பெறும் போது, அதன் மூலம் அவர்களுடைய குடும்பத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மிகவும் கொடூரமானது. தனது அன்புக்குரியவர்கள் தொடர்பாக உண்மையை அறிந்து கொள்வதற்கு பல குடும்பங்கள் இதுவரை செய்வதறியாது காத்திருக்கின்றார்கள்.
 இலங்கையில் புரையோடிப்போயுள்ள இப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கூடிய கரிசனை தேவையாகவுள்ளது. காணாமல் போகச் செய்த அன்புக்குரியவர்களின் பிரவேசம் என்ற கண்காட்சி இம் முக்கிய விடயம் தொடர்பான கலந்துரையாடலை மேலும் விரிவுபடுத்தும் ஓர் ஆக்கத்திறன் மிக்க நடவடிக்கையாக இது ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை, மாலை நான்கு மணிக்கு இலங்கை மன்றக் கல்லூரி கோட்போர் கூடத்தில் மௌனிக்கப்பட்ட நிழல்கள் என்ற கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. கடந்த பல தசாப்தங்களாகக் காணாமல் போகச் செய்த ஆயிரக்கணக்கான பிரஜைகளின் கவலைதோய்ந்த வரலாற்றை பிரதிபலிக்கும் கவிதைப் போட்டியில் பங்கு கொள்ளுமாறு இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் இலங்கையர்களுக்கு சர்வதேச மன்னிப்புச்சபை 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அழைப்புவிடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 உலகெங்கிலும் வசிக்கும் சகல இனக்குழுமங்களையும் சேர்ந்த அனைத்து வயதுப் பிரிவினரையும் பிரதிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கையர்கள் பெரும் ஆர்வத்துடன் போட்டியில் கலந்து கொண்டார்கள். அதன் வெளிப்பாடே மௌனிக்கப்பட்ட நிழல்கள் என்ற கவிதை நூலாகும். நிகழ்வின் போது சில பாடல் வரிகள் பாடல்களாக இசைக்கப்படுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

காணாமல் போகச் செய்யப்பட்டோர் நிகழ்;;வு தொடர்பான  விடயங்களை மாலை 5 மணியில் இருந்து 6 மணிவரையில் தேநீர் வேளையில் கலந்துரையாடவும் வழிசமைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வுகளில் ஆர்வலர்கள் சகலரையும் கலந்துகொள்ளமாறு சர்வதேச மன்னிப்புச்சபை அழைப்பு விடுக்கின்றது.