ஊக்கமருந்து பாவனையை எதிர்க்கும் ஆசிய சமுத்திரவலய பிராந்திய கூட்டம்; இலங்கைக்கு 4 கோடி ரூபா வருமானம்

Published By: Digital Desk 3

07 Jun, 2023 | 05:13 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பில் நடைபெறவுள்ள விளையாட்டுத்துறையில் ஊக்கமருந்து பாவனையை எதிர்க்கும் 18ஆவது ஆசிய சமுத்திர வலய அரசாங்கங்களின் அமைச்சர்கள் கூட்டத்தின் மூலம் இலங்கைக்கு 4 கோடி ரூபா வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையைத் தடுக்கும் உலக முகவர் நிறுவனத்துடன் (WADA) இணைந்து இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சு, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான இலங்கை முகவர் நிலையம் (SLADA) என்பன இந்தக் கூட்டத்தை கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டேலில் எதிர்வரும் 10ஆம், 11ஆம் திகதிகளில் நடத்தவுள்ளன.

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையை முற்றாக ஒழிக்கும் கொள்கைத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதே இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

'இத்தகைய கூட்டம் ஒன்றை இங்கு நடத்துவது இலங்கைக்கு பெருமை தருகிறது' என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

விளையாட்டுத்துறையில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையை எதிர்க்கும் ஆசிய சமுத்திர வலய பிராந்திய விளையாட்டுத்துறை அமைச்சர்களின் கூட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர்கூடத்தில் புதன்கிழமை (07) முற்பகல் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ரொஷான் ரணசிங்க, 'WADA நிறுவனத் தலைவர் விட்டோல்ட் பன்கா, உதவித் தலைவர் யங், யங் உட்பட 10 WADA உறுப்பினர்கள், 9 அமைச்சர்கள், 39 நாடுகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். WADA தலைவர் ஒருவர் பிராந்திய கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வது இதுவே முதல் தடவையாகும். இது எமது நாட்டுக்கு பெருமை சேர்த்துக்கொடுப்பதாக அமைகிறது. இந்தக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்த சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது' என்றார்.

இதேவேளை, இது தொடர்பாக கருத்து வெளியிட்ட தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான இலங்கை முகவர் (SLADA) நிறுவனத் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா, 'நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு நாங்கள் தயங்கினோம். இக் கூட்டத்தை வேறு ஒரு நாட்டில் நடத்துமாறு WADAவிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், WADA எம்மீது நம்பிக்கைக் கொண்டு உங்களால் நடத்த முடியும், பணியைத் தொடருங்கள் என எங்களை உற்சாகப்படுத்தியது.

'சுற்றுலாத்துறை அதிகாரசபை, இரத்தினக்கல் கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்தக் கூட்டத்தை நாங்கள் நடத்த முன்வந்தோம். இக் கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தரும் பிரதிநிதிகளில் ஐவரைத் தவிர மற்றைய அனைவரும் தங்களது சொந்த செலவிலேயே இலங்கை வருவதுடன் சகல செலவினங்களையும் அவர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் பலனாக 90 இலட்சம் ரூபா செலவில் நடத்தப்படும் இந்தக் கூட்டத்தின்மூலம் இலங்கைக்கு 4 கோடி ரூபா வருவாயாக கிடைக்கவுள்ளது. இது சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதாக அமையும்.

'கடந்த 5 வருடங்களில் இந்தக் கூட்டம் இரண்டாவது தடவையாக இலங்கையில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் ஒரு முறைகூட இந்தக் கூட்டம் நடத்தப்படவில்லை. அந்த வகையில் WADA எம்மீது எந்தளவு நம்பிக்கை கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது. இந்தக் கூட்டம் மிகவும் முக்கியம்வாய்ந்தது. இலங்கையைப் பொறுத்த மட்டில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதனை முற்றாக ஒழிப்பதற்கு பல்வேறு விழிப்புணர்வுத் திட்டங்களை அமுல்படுத்தி வருகிறோம்.

'தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையால் ஏற்படும் தீமைகள், விளைவுகள், ஆபத்துக்கள் தொடர்பாக விழிப்புணர்வு பாடம் ஒன்றை பாடசாலைகளில் அடுத்த வருடம் ஆரம்பிக்கவுள்ளோம். ஆறாம் வகுப்பிலிருந்து 11ஆம் வகுப்புவரை சுகாதார பாடத்தில் இது இணைக்கப்படும்' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41